9 Mar 2018

அகில உலகின் நிழல்


குறளதிகாரம் - 8.2 - விகடபாரதி
அகில உலகின் நிழல்
            அன்பு என்ற ஒன்று இருந்திருந்தால் இந்த உலகில் சுயநலம் பெருத்திருக்காது.
            அன்பு என்ற ஒன்று பெருத்திருந்தால் இந்த உலகில் பொதுநலம் சுருங்கியிருக்காது.
            அன்பு பொதுநலமானது. சுயநலத்துக்கு எதிரானது. சுயநலமான அன்பு அன்பே அன்று.
            அன்பு என்ற ஒன்று இருந்திருந்தால் இந்த உலகில் இவ்வளவு போர்கள் நடைபெற்று இருக்காது.
            அன்பு என்ற ஒன்று நடைபெற்று இருந்தால் இந்த உலகில் இவ்வளவு பயங்கரவாதங்கள் பெருகியிருக்காது.
            அன்பு அன்புக்காக விட்டுக் கொடுக்கும். எந்த அளவுக்கு என்றால் தம்மையும் விட்டுக் கொடுக்கும் அளவுக்கு விட்டுக் கொடுக்கும்.
            அன்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். எதற்காகவும் அன்பை விட்டுக் கொடுக்கக் கூடாது.
            அன்புக்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு உயிர் துறக்கவும் முன் வர முடியும் என்பதற்கு கோப்பெருஞ்சோழனுக்காக உயிர் துறந்த பிசிராந்தையார் கால சாட்சியாகிறார்.
            சக மனிதர்கள் கொண்ட அன்புக்காகவே இயேசுநாதர் சிலுவையைச் சுமக்கவும் தயாராகிறார். சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட விளிம்பு நிலை மக்களாலான நோயாளிகளிடம், பாலியல் தொழிலாளிகளிடம் மிகுந்த அன்பைப் பொழிந்தவராக இருக்கிறார் அவர். உங்களில் யார் எந்த பாவமும் செய்யவில்லையே அவரே முதல் கல்லை எறியுங்கள் என்று விளிம்பு நிலை மாந்தருக்காக அவர் குரல் எழுப்புகிறார்.
            தொடக் கூட யோசிக்கும் தொழு நோயாளிகளிடம் அன்பு செலுத்திய வெள்ளுடைத் தேவதையாகவே காலம் முழுவதும் வாழ்கிறார் அன்னை தெரசா.
            உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த உலகத் தொழிலாளிகளுக்காகவே வாழ்க்கை முழுமையும் வறுமையைச் சுமந்து, இறந்துப் போன குழந்தைக்காக சவப்பெட்டியை வாங்க முடியாத ஏழ்மையிலும் மூலதனத்தைப் படைக்கிறார் கார்ல் மார்க்ஸ்.
            இடுப்பில் ஒற்றை ஆடையோடு எந்தச் சுதந்திரமும் இல்லாமல் வாழும் இந்நாட்டின் கோடானு கோடி மக்களின் பரதேச வாழ்வைப் பார்த்து அரை நிர்வாணப் பக்கிரியாகவே வாழ்கிறார் காந்தியார்.
            மனித அன்பைத் தாண்டி சக உயிர்களின் மேல் கொண்ட அன்புக்காக உயிர்ப்பலிச் செய்யாத மதத்தை உருவாக்குகிறார் புத்தர்.
            புராணக் கதையாக சுட்டப்பட்டாலும் புறாவுக்காக சதையை அறுத்துத் தர முன் வரும் சிபிச் சக்கரவர்த்தி அன்பால் நெகிழச் செய்கிறார்.
            முல்லைக் கொடிக்காக தேரை ஈந்த பாரியின் சுற்றுச்சூழல் மீது கொண்ட அன்பும்,
            மயிலுக்குக் குளிருமே என்று போர்வை போர்த்திய பேகனின் சக உயிர் மேல் கொண்ட அன்பும்,
            மூப்படையச் செய்யாத நெல்லிக் கனியை அதியமான் ஒளவைக்குத் தந்த தமிழ் மேல் கொண்ட அன்பும்,
            முரசுக் கட்டிலில் உறங்கிய மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய சேரனின் புலவர் மேல் கொண்ட பேரன்பும்,
            கண்ணகிக்குத் தவறான நீதி இழைத்து விட்டதற்காக உயிர் நீத்த பாண்டிய நெடுஞ்செழியனோடு உயிர் நீத்த கோப்பேருந்தெவியின் இல்லறம் மேல் கொண்ட அன்பும்,...
            இந்த உலகுக்குப் பறை சாற்றுவது ஒன்றைத்தான். அது என்னவெனில்,
            அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பதைத்தான்.
            அன்புடையவர் எதையும் தமக்கு என வைத்து இருப்பது இல்லை, தன் உயிர் உட்பட. தம் உயிரைக் கூட அன்புக்காக அவர்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
            அன்புக்காக உயிரையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்,
                        பணத்துக்காக,
                        சொத்து சுகம் சொகுசு வாழ்க்கைக்காக,
                        ஈகோ எனப்படும் தன்முனைப்புக்காக,
                        வறட்டு கெளரவத்துக்காக,
                        அதிகார போதைக்காகவா
                                    விட்டுக் கொடுக்காமல் இருந்து விடுவார்கள்? விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போகாது என்றால் விட்டுக் கொடுப்பதையே விரும்புவார்கள் அன்புடையவர்கள். அன்புடையவர்களால்தான் விட்டுக் கொடுக்கவும் முடியும். அன்பற்றவர்களால் எதையும் விட்டுக் கொடுக்க முடியாது.
            தன்னிடம் இருப்பதை எடுத்துக் கொடுக்கவும், தன்னையே விட்டுக் கொடுக்கவும் ஒரு பெரிய மனம் வேண்டும். அந்தப் பெரிய மனம் அன்பினாலேயே உண்டாகிறது. அதனால்தான் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறார் பாரதி.
            அன்பே சிவம் என்பார் திருமூலர்.
            உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும் என்பார் வேர்ட்ஸ்வொர்த்.
            வள்ளுவர் அதையும் விஞ்சுகிறாரே, அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்று.
            கொடுப்பதற்குப் பணம் தேவையில்லை, கொடுக்க வேண்டும் என்ற மனம்தான் தேவை என்பார்கள் கிராமத்தில். ஒளவை அந்த மனதை அறம் செய விரும்பு என்பாள். அந்த மனம்தான் அன்பு.
            அன்பு கொடுக்கிறது. அன்பின்மை கொடுப்பதையும் தடுக்கிறது. அந்த அன்பின்மையே உலகத்து உயிர்களையும் எடுக்கிறது.
            அன்பால் உலகம் சிறக்கும். அன்பால் மட்டுமே உலகம் சிறக்கும். புது உலகம் பிறக்கும். அன்பு இருக்கும் வரையே உலகமும் இருக்கும்.
            அன்பு அகில உலகுக்கும் அழகாகும். அது மட்டுமா அதுவே இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் நிழலாகும்.
            அன்புக்காக எதையும் கொடுப்போம்! அதை ஏற்று இந்த உலகமும் அன்பையே கொடுக்கட்டும்! கொடுப்பதற்கும், கொடுக்கப்படுவதற்கும் அன்பைத் தவிர சிறந்த ஒன்று இந்த உலகில் வெறென்ன இருக்கிறது!
            கொடுத்தாலும் குறைவு படாத அன்பே கொடுப்பதற்கும் சிறந்தது! அன்பு எதைக் கொடுக்கும் என்றால் அன்பு எதையும் கொடுக்கும். அதுவே அன்பு!
*****

No comments:

Post a Comment