27 Mar 2018

மலர் அது மென்மை இல்லை!


குறளதிகாரம் - 9.10 - விகடபாரதி
மலர் அது மென்மை இல்லை!
            உலகிலேயே மிக மென்மையானது மலர் என்பர். மிக மென்மையானது மனம்தான்.
            உலகிலேயே மிக வலிமையானது வைரம் என்பர். பாரதியும் வைரம் போன்ற நெஞ்சு வேண்டும் என்பார். வைரத்தை விட மிக வலிமையானது மனமே.
            உலகில் மென்மையாகவும், வலிமையாகவும் இருக்கும் ஒரு பொருள் மனமாகத்தான் இருக்கும்.
            எதிர்ப்பில் வலிமையும், நெகிழ்வில் மென்மையும் மனதால் மட்டுமே கொள்ள முடியும்.
            விரைவில் வாடுவது பூக்களா? மனமா? என்றால் மனம்தான். பூவை விடவும் மிக விரைவாக வாடும் தன்மை மனதுக்கு உண்டு. மனதின் வாடலை மனவாட்டம் என்று சொல்வது இதனால்தான்.
            அதே போல மிக விரைவாக மலர்வது பூக்களா? மனமா? என்றால் மனம்தான். மிக விரைவாக மலரும் தன்மை மனதுக்கு உண்டு. மனதின் மகிழ்ச்சியை மன மலர்ச்சி என்று சொல்வது இதனால்தான்.
            பூக்களில் காலையில் மலர்வது, மாலையில் மலர்வது, இரவில் மலர்வது, சூரியனைக் கண்டு மலர்வது, நிலவைக் கண்டு மலர்வது, பன்னிரு ஆண்டுக்கொரு முறை மலர்வது என்று பல வகைகள் உள்ளன.
            மனமோ எந்த வேளையிலும் மலரக் கூடியது. சில மலர்களைப் போல சூரியன் வர வேண்டும், நிலவு வர வேண்டும் என்ற கணக்கு எல்லாம் அதற்குக் கிடையாது. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது போன்ற இடைவெளிகள் அதற்குக் கிடையாது.
            ஒரு சின்ன சிரிப்பு போதும், மனதைப் பூவாய் பூக்க விட.
            ஒரு சிறு புன்னகை போதும், மனதை மலராய் மலர விட.
            அன்பான சிறு தழுவல், சிறு அரவணைப்பு போதும் மனதைப் பூந்தோட்டமாய்ப் பூத்துக் குலுங்கச் செய்ய.
            ஓர் எளிய வரவேற்பு போதும் மனம் இறக்கைக் கட்டிப் பறக்க.
            ஒரு சிறிய விருந்தோம்பல் போதும் மனம் சொர்க்கத்துக்குச் சென்று வர.
            புதிததாக விருந்தாக வரும் விருந்தாளிகளுக்கு அந்நியமான ஓர் உணர்வு இருக்கும். விருந்து என்றாலே புதிது என்பதுதானே பொருள். புதியச் சூழ்நிலையில் அந்நியம் என்பது இயற்கைதானே.
            அப்படி அந்நியமாய் உணர்ந்து வரும் விருந்தாளிகளைக் கண்ணியமாய் உணரச் செய்து மகிழ்ச்சி மயமாய் எண்ணச் செய்வதே சரியான விருந்தோம்பல் ஆகும்.
            அதற்கு முகம் முக்கியம். மனம் நினைப்பதைத்தானே முகம் காட்டுகிறது. மனதின் கண்ணாடிதானே முகம்.
            மனதுக்குப் பிடிக்காது போனால் அது வெறுப்பாக முகத்தில் படரும்.
            மனதுக்குப் பிடித்தால் அது விருப்பமாக முகத்தில் படரும்.
            வள்ளுவரே இதை,
            அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டி விடும் முகம் என்கிறார்.
            அத்தோடு விடாமல் மேலும்,
            முகத்தின் முது குறைந்து உண்டோ உவப்பினும் காயினும் தான் முந்து உறும் என்று அதன் இயல்பை, தன்மையை, பண்பை நுட்பமாய் கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பது போல, அடுத்தது காட்டும் பளிங்கு என்பது போன்ற உவமையெல்லாம் எதற்கு என்பது போல, சிதறு தேங்காயைப் போட்டு உடைப்பது போல, வெட்டு ஒன்று துண்டு இரண்டு ‍என்பது போல விளக்குகிறார்.
            விருந்தோம்பலில் வரவேற்பு முதன்மை. அரவணைத்துத் தழுவல் அவசியம். அன்போடு பரிமாறல் அது அன்போ, உணவோ இரண்டும் முக்கியம்.
            வரவேற்பதோ, அரவணைத்துத் தழுவலோ, பரிமாறலோ இவைகள் நிகழ்வதற்கு முன்பே கட்டியங்காரரைப் போல முகம் விருந்தாளிகளுக்குப் பல செய்திகளைச் சொல்லி விடும்.
            வரவேற்புத் தோரணங்கள் கட்டி, ‍அலங்கார, ஆடம்பர வாயில்கள் அமைத்து, வரவேற்று அரவணைத்துத் தழுவ ஒரு பெரும்படையைத் திரட்டி, பரிமாற விருந்துகள் பல சமைத்து அமைத்து இருந்தாலும், முகம் சற்றுக் கோணியிருந்தாலும் விருந்தினர் முகம் வாடி விடும். இன்முகம் இல்லாவிட்டால் இது போன்ற இன்ன பிற இருந்தும் பயனில்லாமல் போய் விடும்.
            விருந்தினர்கள் வருவதும், நம்மை நாடுவதும் நம் ஆடம்பர விருந்தோம்பலுக்கா என்ன? நம் அன்பான நன்முகமாம் இன்முகத்துக்குத்தானே. மலரும் நம் முகத்துக்காகத்தான் விருந்தாளிகள் பலரும் வருகிறார்கள். அவர்கள் மனம் குழையாமல் எளிமையாக விருந்தோம்பினாலும் அதுவே மாபெரும் விருந்தோம்பல் ஆகும். அவர்கள் மனம் குழைந்தால் மாபெரும் விருந்தோம்பலும் மிக மோசமான விருந்தோம்பலே ஆகும்.
            இதை மிக நுட்பமாக விளக்குகிறார் வள்ளுவர்.
            அவர் தாம் அறிந்த பூக்களில் மிக மென்மையானதாக அனிச்சப் பூவைக் குறிப்பிடுகிறார். முகர்ந்தாலே வாடி விடுவதால் அதை மிக மென்மையான மலராகக் கருதுவதாக காரணமும் சொல்கிறார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பவர் அல்லவா!
            அப்படிப்பட்ட அனிச்சப்பூவே முகர்ந்தால்தான் வாடுகிறது. ஆனால் விருந்தாளிகள் மனமோ முகந்திரிந்து நோக்கினாலே வாடி விடும் என்கிறார்.
            முகர மலரை அருகில் கொண்டு வர வேண்டும். மூச்சுக் காற்றை இழுத்து முகர வேண்டும். இவ்வளவு வேலைகள் இருக்கிறது. இவ்வளவு நிகழ்வுகள் நடந்த பின்னே அனிச்சப்பூ வாடுகிறது.
            நோக்குவதற்கு அருகில் செல்ல வேண்டாம். மூச்சுக் காற்றை இழுப்பது போன்று எதையும் பிரயத்தனப்பட்டுச்  செய்ய வேண்டாம். வெறுமனே பார்த்தாலே போதும். இப்படி எந்தப் பாடு இல்லாமல் வெறுமனே முகம் திரிந்து நோக்குதல் எனும் நிகழ்வுக்கே மனம் வாடி விடுகிறது.
            அருகில் கொண்டு வந்து, முகர்ந்த பின்னே வாடுகிறது அனிச்சம்.
            தூரத்தில் நின்று, வெறுமனே முகம் திரிந்து நோக்கினாலே வாடுகிறது மனம்.
            இப்போது நீங்களே சொல்லுங்கள்! எது மெல்லிது?
            மலரினும் மெல்லிது மனம். அதுவும் அனிச்சம் போன்ற மிக மெல்லிய மலரினும் மிக மெல்லிது விருந்தினர் மனம். அவர் மனம் குழையாமல் ஓம்புவதில் இருக்கிறது மிகச் சிறந்த விருந்தோம்பலின் குணம்.
            மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...