1 Mar 2018

கூழைக் கும்பிடு போடு!

குறளதிகாரம் - 7.4 - விகடபாரதி
கூழைக் கும்பிடு போடு!
            இனியது எது?
            அதைத் தேடி அலைய விடாமல் ஆற்றுப்படுத்தும் வகையில், 'இனியவை நாற்பது' எனும் இலக்கியமே தமிழில் இருக்கிறது.
            இனியன் என்று பெயர் சூட்டும் மரபும் தமிழில் உண்டு.
            சர்க்கரை என்று தாளில் எழுதினால் தித்திக்காது என்ற வழக்கும் நம்மிடையே உண்டு.
            ஆக, இனிப்பு என்பது சுவைத்துப் பார்ப்பதில் இருக்கிறது. அதாவது அனுபவிப்பதில் இருக்கிறது.
            ஆறு சுவைகள் இருப்பினும் அதில் பிரதானம் இனிப்பு. இனிப்பே நம் விருப்பம் என்பதற்கு இனிப்புக் கடைகள் சாட்சி. கடைகளில் மிக அதிகமாக விற்பனையாகும் மிட்டாய்களும் சாட்சி.
            நோய்களில் சுவையை அடிப்படையாகக் கொண்ட நோயாக சர்க்கரை நோய் இருக்கிறது என்பது இனிப்பில் நீந்தும் நம் வாழ்வைக் காட்டுகிறது.
            வெற்றிகளை இனிப்போடுதான் கொண்டாடுகிறோம், 'சாக்லேட்'களை வழங்கி.
            நமது பாரம்பரிய விழாவான பொங்கலில் வெண் பொங்கலோடு சர்க்கரைப் பொங்கலும் சேர்ந்தே தித்திக்கிறது. பொங்கலுக்கானக் கரும்பு என்பது பொங்கலின் அடையாளம் மற்றும் பொங்கலைத் தித்திக்கச் செய்யும் கட்டியங்காரன்.
            கரும்பு இனியது, சர்க்கரை இனியது, தேன் இனியது என்று சொல்லும் போது 'செந்தமிழ் நாடு எனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பாரதியின் வரிகள் நினைவில் வந்து நிற்கும்.          இனியது என்பது நாவுக்கு இனிமை தருவதா? செவிக்கு இனிமை தருவதா? என்ற புதிய கேள்வியைப் பாரதியின் வரிகள் எழுப்பிச் செல்லும்.
            அதாவது 'செந்தமிழ் நாடு எனும் போதினிலே' என்ற அந்தச் சொல் இன்பத் தேன் போல காதில் பாய்ந்து மனதுக்கு இனிமை தருவது என்று சொல்லலாம்.
            அப்படியானால் இனிமை என்பது நாவுக்கு இனிமை தருவதா? மனதுக்கு இனிமை தருவதா?
            இனிப்புப் பொருட்கள் அனைத்தும் நாவுக்கு இனிமை தருவன. நாவோடு மனதுக்கும் சேர்த்து இனிப்பு தரும் பொருட்கள் இனிப்புப் பொருட்களை விட ஒரு படி மேல்தான்.
            அப்படி ஏதேனும் பொருள் இந்த உலகில் இருக்கிறதா?
            இருக்கிறது.
            மழலைச் செல்வம் கைகளால் அளாவிய கூழ்தான் அது.
            கூழா இனியது?
            கூழை விட அறுசுவை உணவு சிறந்ததாயிற்றே.
            கூழில் ஒரு சுவை இருக்குமா? அறுசுவை உணவில் ஆறு சுவைகள் அல்லவா இருக்கும்!
            அப்படி இருக்க அறுசுவை உணவை விட கூழ் எப்படிச் சிறந்ததாக இருக்கும் என்று கேள்வி எழுகிறது அல்லவா!
            அறுசுவை உணவை விட கூழ் சிறந்ததாக இருக்காது என்று நினைக்கிறோம். வள்ளுவர் வேறு விதமாக நம்மோடு முரண்படும் வகையில் அதையும் தாண்டிப் போகிறார்.
            நாமாக இருந்தால்,
            அறுசுவை உணவை விட கூழ் சிறந்தது கிடையாது,
            அமிழ்தத்தை விட அறுசுவை உணவை விட சிறந்தது கிடையாது என்ற முடிவுக்கே வருவோம்.
            வள்ளுவர் அப்படியே நேர்மாறான முடிவுக்கு வருகிறார்.
            அறுசுவை உணவு என்ன? அந்த அமிழ்தத்தை விட சிறந்தது மழலை தன் சிறு கைகளால் அளாவிய கூழே என்கிறார்.
            மெய்யாலுமா என்கிறீர்களா?
            சர்க்கரை என்று எழுதினால் தாள் தித்திக்குமா என்று மேலேயே பார்த்து விட்டோம். சுவைத்துப் பார்த்தவர்களுக்கே சர்க்கரை தித்திக்குமா இல்லையா என்பது தெரியும். அதுபோலவே அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அறுசுவை உணவு சிறந்ததா? அதை விட அமுதம் சிறந்ததா? அதை விட மழலை அளாவிய கூழ் சிறந்ததா என்பது!
            தீ சுடும் என்பது எத்தனை உண்மையோ,
            சர்க்கரை இனியது என்பது எத்தனை உண்மையோ,
            அத்தனை உண்மை அமிழ்தினும் இனிது மழலையின் கை பட்ட கூழ் என்பது.
            தீ சுடும் என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா என்ன? அல்லது சர்க்கரை தித்திக்கும் என்பதற்கு கூடுதல் சாட்சிகள் வேண்டுமா என்ன?
            அனுபவ உண்மைகளுக்கு சான்றாதாரங்கள் தேவையில்லை.
            அது அப்படித்தான். மாற்ற முடியாதது. பொய் ஆகாதது. உரைக்கல் தேவைப்படாதது.
            ஆம்,
            அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்.
            அமிழ்தம் சாவைத் தராத மருந்தாக இருந்தாலும், குழந்தையின் கை பட்ட கூழ் அமிழ்தை விஞ்சிய விருந்தாக இருக்கிறது.
            அமிழ்தம் என்பது உண்ண வாய்ப்பில்லாத, யாரும் உண்டு உய்யத்தறியாததாக இருந்தாலும் அதை விட விஞ்சியது, இனியதில் மிஞ்சியது உண்ண வழியுள்ள, உண்டு உய்த்தறிய வாய்ப்புள்ள குழந்தையின் கை பட்ட கூழ் என்கிறார் வள்ளுவர்.
            வானத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பூமியைத் தாழ்வாகப் பார்ப்பவர் அல்லர் வள்ளுவர். பூமியில் இருந்தபடியே வானத்தைக் கேலி பேசுபவரன்றோ அவர்!
            கடவுள்கள் உண்ணுவதாகச் சொல்லப்படும் அமிழ்தை விடச் சிறந்தது என்றால்... இனி ஏன் கடவுள்களைக் கும்பிடு போட வேண்டும்? அதை விடச் சிறந்ததான குழந்தையின் கை அளாவியக் கூழைக் கும்பிடுப் போடலாம் அல்லவா!
            கூழைக் கும்பிடுதான் போடக் கூடாது. ஆனால், மழலையின் சிறு கை அளாவியக் கூழை தாராளமாகக் கும்பிடு போடலாம்தானே!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...