மாய மனிதனின் மிரட்டல்கள்
அடேங்கப்பா! எஸ்.கே. படுத்துகிற பாடு இருக்கிறதே!
தாங்கொண்ணாது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவான். தேளைப் போலக் கொட்டுவான். எல்லாம்
செய்து விட்டு ஏன் கோபப்படுகிறீர்கள் என்று உபதேசம் வேறு செய்வான்.
எந்த மோசமான ஒன்றையும் நீங்கள் ஆரம்பிக்கவில்லை.
எஸ்.கே.தான் ஆரம்பிக்கிறான். பிறகு எல்லா பழிகளையும் உங்கள் மீது தூக்கிப் போட்டு
விடுகிறான். நீங்கள் எஸ்.கே.விடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதுவும் இல்லைதான். அதற்கே
அவன் உங்களைப் போட்டு படாத பாடு படுத்துவான்.
ஒரு ஜென்மத்துக்கு இவ்வளவு ஆகாது என்று
நீங்கள் புலம்புவது என் காதில் விழுகிறது.
என்ன பேசுகிறான் என்பது தெரியாமல் பேசி
விடுவான் எஸ்.கே. அவசரப்படக் கூடாது. அவனது மனதின் அவசரமும், விரைவும் இதற்கானக் காரணங்கள்.
பேசுவதற்கு முன் எஸ்.கே. என்ன பேசுகிறான் என்பதை நன்கு கேட்டு விட்டுப் பிறகு பேச வேண்டும்.
இங்கு பேச்சின் மூலம் ஆழம் பார்ப்பவர்கள் அதிகம்.
கோபப்படவும் கூடாது. கோபம் மனநிலையைத்
தீர்மானிக்கும். தன்னுடைய திசையில் இழுத்துக் கொண்டு செல்லும். கோபப்படாமல் இருந்தால்தான்
உங்கள் மனநிலையை நீங்கள் தீர்மானிக்கலாம். இல்லையென்றால் அதை எஸ்.கே. தீர்மானிப்பான்.
கோபமே கோபத்தைத் தீர்மானிக்கும். அமைதி
அமைதியைத் தீர்மானிக்கும்.
யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும்
பொறுமையும், அமைதியும் நல்ல தீர்வுகள் என்பது புரிய வரும். பொறுமையையும் அமைதியையும்
குழைத்துச் செய்யப்படும் எல்லா காரியங்களும் இறுதியில் பொறுமையையும், அமைதியையும்
தருகின்றன. அல்லாதவைகள் அவைகளையே விலையாகக் கேட்கின்றன.
இதற்கு மேல் நீங்களாக உங்கள் மனதில் எதையும்
இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். அது தேவையற்றது. அநாவசியமானது. களைப்பையும் சலிப்பையும்
உருவாக்கக் கூடியது.
ஒரு வேலையைச் செய்ய முயல்வதற்கு முன் ஆழ்ந்து
யோசியுங்கள். பிறகு செயல்படுங்கள். அவசரப்பட்டு நிறைய வேலைகளை ஒத்துக் கொண்டு தடுமாறிக்
கொண்டு இருக்காதீர்கள்.
இந்த உலகில் வாழ்வதற்கான காலம் நிறையவே
இருக்கிறது. நாம்தான் அவசர அவசரமாக வாழ்ந்து முடிக்க விரும்புகிறோம்.
மற்றபடி எஸ்.கே.வை அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.
அவனது மிரட்டல்கள் நிறைய இருக்கத்தான் செய்யும். அதற்கு என்ன செய்வது? ஒரு மாய மனிதனின்
மிரட்டல்கள் நம்மை அவ்வளவு மிரளச் செய்கிறதென்றால் எஸ்.கே. உங்களில் உயிர் வாழ்ந்து
கொண்டுதான் இருப்பான். எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டால் உடலில் எந்த கிருமிகளும்
இருக்காது. உங்களுக்கு நிஜத்தோற்றம் புலப்பட்டு விட்டால் எஸ்.கே. அழிந்து விடுவான்.
*****
No comments:
Post a Comment