20 Feb 2018

கடவுளைக் கும்பிட மாட்டாள் பெண்!

குறளதிகாரம் - 6.5 - விகடபாரதி
கடவுளைக் கும்பிட மாட்டாள் பெண்!
            வா என்று சொன்னவுடன் நதியில் (குறிப்பாக நம் காவிரி) நீர் வந்தால் எப்படி இருக்கும்?
            தா என்று சொன்னவுடன் கையில் தங்கக் காசுகள் கொட்டினால் எப்படி இருக்கும்?
            வேண்டும் என்று நினைத்தவுடன் அதிகார அமைப்புகள் அதை நிறைவேற்றிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
            மூடு என்று சொன்னவுடன் டாஸ்மாக்குகளை மூடினால் எப்படி இருக்கும்?
            குறைத்தால் என்ன என்று கேட்டவுடன் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தால் எப்படி இருக்கும்? அப்படியே விலைவாசி, பேருந்து கட்டணம் வரைக்கும் இது நிகழ்ந்தால் எப்படி இருக்கும்?
            வேண்டாம் என்று சொன்னவுடன் நீட் தேர்வை நிறுத்தி வைத்தால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தி வைத்தால் எப்படி இருக்கும்?
            செய் என்று சொன்னவுடன் தமிழ் மொழியைத் தமிழ்நாட்டுப் பள்ளிகள் தோறும் கட்டாயப் பாடமாக்கினால் எப்படி இருக்கும்?
            மெய் என்று தெரிந்தவுடன் தாங்கள் செய்த தவறுகளை அரசியல் வர்க்கம் தானாக முன்வந்து ஒப்புக் கொண்டால் எப்படி இருக்கும்?
            இவைகள் எல்லாம் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ? ஆனால்...
            பெய் என்று சொன்னவுடன் மழை பெய்தால் எப்படி இருக்கும்?
            காவிரிப் படுகையில் இத்தனை உழவர்கள் தூக்குக்கும், பூச்சிக் கொல்லிக்கும், கடனுக்கும் உயிரை விட்டு இருக்க மாட்டார்கள்.
            பெய் என்று சொன்னவுடன் பெய்தால் அது மழையே அன்று.
            அப்புறம் என்னவாம் என்கிறீர்களா?
            அதுதான் தெய்வம்.
            மழையை மாரியம்மனாய் ஆக்கி வணங்குகிறோமே, அப்படி ஒரு தெய்வம்.
            அந்தத் தெய்வம் வந்து விட்டால், பிறகு நாம் எந்தத் தெய்வத்திடம் முறையிடப் போகிறோம்? காவிரித் தீர்ப்புக்காக உச்ச நீதி மன்றம் வரை சென்று ஏன் நிற்கப் போகிறோம்?
            ஆம்! பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை மழையே அன்று. அது தெய்வம்.
            அது போல பெண்ணின் பெருஞ்சிறப்பை உணர்ந்து, இல்வாழ்வின் இணையற்ற சிறப்பை அறிந்து ஒழுகும் கணவன் கணவனே அன்று. அவன் தெய்வம். வையத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வம்.
            ஆசை பட்டது நிறைவேற வேண்டும் என்றுதானே நாம் தெய்வத்தை வணங்கப் போகிறோம். அதாவது ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொடுக்கும் அது என்ற நம்பிக்கையில்.
            ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொடுப்பது நமக்குத் தெய்வம்.
            மனிதர்களின் மிகப் பெரிய ஆசையும் தேவையும் மழைதான். பெய் எனச் சொல்லி மழை பெய்து விட்டால் மனிதர்கள் மழையைத் தவிர வேறு எதனையும் தெய்வமாக வணங்க மாட்டார்கள்.
            அதுபோல பெண்ணின் மிகப் பெரிய அவாவும், அவளது அன்பிற்கானத் தேவையும் அவள் மனம் அறிந்து ஒழுகும் கணவனே.
            அப்படிப்பட்ட கணவன் கிடைத்து விட்டால் பெண்டிர் தெய்வத்தைத் தொழ மாட்டார்கள். தங்கட்கு தெய்வமாக விளங்கும் கணவரையேத் தொழுவார்கள்.
            பெய்யெனப் பெய்யும் மழை தெய்வமாய் வணங்கப்படுவதைப் போல, செய் என இல்வாழ்வுச் செய்யும் கணவன் மனைவியால் தெய்வமென வணங்கப்படுகிறான்.
            இப்படிதான் இல்லாளுக்குக் கணவனே கண் கண்ட தெய்வமாகிறான். கண்ணில் காணும் தெய்வமாகிறான்.
            மக்களின் உள்ளக் குறிப்பு அறிந்த மாத்திரத்திலே பெய் எனப் பெய்யும் மழை தெய்வமாவதைப் போல, இல்லாளின் உள்ளக் குறிப்பு அறிந்த மாத்திரத்திலே செய் எனச் செய்யும் அவளுக்குத் தெய்வம்.
            நம் சட்டைப் பையில் காசிருந்தால், நாம் ஏன் பிறரிடம் கையேந்தப் போகிறோம்?
            இல்லத்திலே தெய்வம் இருக்கும் போது இல்லாள் ஏன் தெய்வம் என்று பிறதொன்றைத் தொழப் போகிறாள்?
            தெய்வம் எனக் கருதத் தக்கச் சிறப்போடு கணவன் இல்வாழ்வில் திகழ்ந்தால் அவனைத் தெய்வமாகத் தொழுது, தெய்வமெனச் சொல்லப்படும் மூட நம்பிக்கைகளைத் தொழாமல் இருக்கவும் தயாராக இருக்கிறாள் பெண்.
            இதைத்தான் வள்ளுவர்,
            தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் மழை என்கிறார்.
            இக்குறளுக்கான விளக்கம் மேலே சொல்லியதோடு முடிந்ததா என்றால், இல்லை. மிகச் சரியான விளக்கம், மேலே சொல்லியதை நுட்பமாக நோக்குமிடத்து,
            அதாவது,
            இல்வாழ்வைச் செய் எனச் செய்யும் செய்யும் கணவன் கிடைத்தால் பெய் எனப் பெய்யும் மழையாகிய தெய்வத்தையும் தொழாமல் பெண் கணவனையே தெய்வமாகத் தொழுவாள் என்பது வள்ளுவர் வாக்கு.
            பெய் எனப் பெய்யும் மழை தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் என்று குறளைப் பிடித்துப் பாருங்கள்.
            சரியானப் பொருள் விளக்கம் கிடைத்து விடுகிறதுதானே!
            மழையாகிய தெய்வத்தையும் தொழ மாட்டாள் பெண், தெய்வம் போல கணவன் கிடைத்து விட்டால்!
            நம் பழந்தமிழர்க்கு இயற்கையே தெய்வமாக இருந்திருக்கிறது. இயற்கையான மழையே தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறது.
            ஐம்பூதங்கள்தான நம் மூதாதைகளின் தெய்வம்!
            நம் மூதாதைகள் சுட்டிய தெய்வத்தையும் தொழாமல் தாம் கட்டிய கணவரைத் தெய்வமாகத் தொழ பெண் எத்தகைய தீரம் பெற்றவளாக இருக்க வேண்டும். அதற்குரித்தான நெஞ்சில் ஈரம் பெற்றவனாக கணவன் இருக்க வேண்டும்.
            தெய்வமாக வணங்கவும் பெண் தயாராக இருக்கிறாள் எனும் போது, தெய்வமாக விளங்க கணவனும் தயாராக இருக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...