16 Feb 2018

பெண்ணே நிதியெனும் நீதி வடிவம்

குறளதிகாரம் - 6.1 - விகடபாரதி
பெண்ணே நிதியெனும் நீதி வடிவம்
            இல்வாழ்க்கைத் தொடங்குகிறது. இல்வாழ்வு ஏற்று வரும் பெண் மனைவியாகிறாள். மனைக்குத் தலைவியாகிறாள். இல்லத்துக்கு இல்லாள் ஆகிறாள். வள்ளுவரின் பார்வையில் அவள் வாழ்க்கைத் துணைநலம் ஆகிறாள்.
            ஒரு நாட்டுக்கு பிரதமர் பொறுப்பு ஏற்பது போல ஒரு வீட்டுக்கு பிரமராகப் பெண்ணே பொறுப்பேற்கிறாள்.
            ஒரு பிரமருக்குத் துணை செய்ய உள்துறை மந்திரி, வெளியுறவுத் துறை மந்திரி, நிதி மந்திரி, கல்வி மந்திரி, பாதுகாப்புத் துறை மந்திரி என பல துறை மந்திரிகள் இருப்பது போல, வீட்டுக்குப் பிரதமராகப் பொறுப்பேற்ற மனையாளுக்குப் பல மந்திரிகள் இருப்பதில்லை. அவளே பிரதமர், அவளே எல்லாவற்றுக்கும் மந்திரி. மிக முக்கியமாக அவளே நிதி மந்திரி.
            இல்லத்தில் எவர் சம்பாதித்தாலும் அவளே அதை நிர்வகிக்கிறாள். பங்கீடு செய்கிறாள். சேமிப்புப் புரிகிறாள். இப்படித்தான் இருந்திருக்கிறது வள்ளுவர் கால தமிழர்ச் சமூகம்.
            நம் ஆதிச் சமூக வரலாறும் அதையே உறுதிபடுத்துகிறது. வேட்டையாடுதல் ஆணாக இருந்தாலும், அது பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டு அவளாலே பங்கீடு செய்யப்பட்டு இருக்கிறது, அவளாலே நிர்வகிக்கப்பட்டு இருக்கிறது.
            வேளாண் சமூகத்திலும் அவளே பயிரிட்டு இருக்கிறாள்.பயிர்களைக் காத்து இருக்கிறாள். களை பறித்திருக்கிறாள். வேளாண்மையைக் கண்டறிந்தவளாகவும் அவளே இருந்திருக்கிறாள். வேளாண்மையில் புதுப்புது உத்திகளைப் புகுத்தியவளாகவும் அவளே இருந்திருக்கிறாள்.
            ஆண்கள் வேளாண்மையில் விளைந்ததை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்ததை அவளே பராமரித்துப் பங்கீடு செய்து நிர்வகித்திருக்கிறாள்.
            இப்படி ஒரு தாய்வழிச் சமூக மரபே மரமாக நம்மிடம் வேர் விட்டு செழித்து கிளை பரப்பி இருந்திருக்கிறது.
            குடும்ப நிர்வாகம் என்ற பெயரளவில் இல்லாமல் அதிகாரப்பூர்வமான குடும்ப நிர்வாகமாக நிதி நிலை எனும் வருவாய் நிலையை ஏற்று அவர்களே மனையை ஆண்டிருக்கிறார்கள்.
            இப்படி வருவாயை ஏற்று மனையை தன் நிர்வாகத்தால் வளப்படுத்தியவர்களும் இருந்திருக்கிறார்கள், வறுமைபடுத்தியவர்களும் இருந்திருக்கிறார்கள்.
            வருவாய் ஆவதும் பெண்ணாலே, வருவாய் அழிவதும் பெண்ணாலே என்ற வழக்கு இப்படியே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வழக்கு மொழியாக ஏற்பட்டது.
            வருவாய்க்குத் தக்கபடி வாழ்க்கையை நிர்வகிப்பதும், வாழ்க்கைக்குத் தக்கபடி வருவாய்க்கான வழிவகைகளைப் பெருக்குவதும் பெண்களின் கையில் இருந்த காலக் கட்டத்தில் வள்ளுவர் இப்படி ஒரு சித்திரம் தீட்டுகிறார்,
            மனைத் தக்க மாண்பு உடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்று.
            மனைக்குத் தக்க மாண்புடையவளாகிறாள் இல்லாள்.
            தன்னைக் கொண்டவரின் வருவாய்க்குத் தக்கபடி இல்வாழ்க்கையை அமைத்து குறைந்த வருவாயையும் நிறைந்த வருவாயாக மாற்றி வளப்படுத்துகிறாள் இல்லாள்.
            அதனாலே அவள் வாழ்க்கைத் துணையாகவும் ஆகிறாள். இல்லத் தலைவியாகவும் ஆகி தன்னைக் கொண்டவனின் உள்ளத் தலைவியாகவும் ஆகிறாள்.
            சேர்த்தப் பணத்தைச் செலவு பண்ண சிக்கனமா அம்மா கையில் கொடுத்துபுடு சின்னகண்ணு - அவங்க ஆற நூறா ஆக்கிப்புடுவாங்க சின்னகண்ணு என்ற திரைப்பாடலும் இதையே உறுதிபடுத்துகிறது.
            கடவுள்கள் உருவான வரலாறு உவப்பானதாக இல்லை என்ற போதிலும் செல்வக் கடவுளாக லட்சுமி என்று பெண்ணே உருவகப்படுத்தப்பட்டு இருப்பதைப் ஒப்பு நோக்கும் போது நிதி நிர்வாகத்தின் ஆகச் சிறந்த வடிவமாக இருக்கத் தகுதியானவராக பெண்ணே தோற்றம் கொளகிறாள்.
            ஆக, இப்படிப் பார்ப்பினும் சரி, அப்படிப் பார்ப்பினும் சரி,
            அதாவது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி,
            இல்லாள் கையில் நிதி இருந்ததே அன்று நீதியாக இருந்திருக்கிறது.
            இன்று ஓர் ஆண் தன் சம்பாத்தியத்தையும் குடியில் அழித்து விட்டு, மனையாளின் சம்பாத்தியத்தையும் லவட்டிக் கொண்டு வந்து குடியில் ஒழித்து விட்டு வருவதைப் பார்த்திருந்தால் வள்ளுவர் எத்தகையச் சித்திரத்தைத் தீட்டியிருப்பார் என யோசிக்க முடியவில்லை.
            கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை டாஸ்மாக் செல்லாமை என மாற்றி இந்த வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்துக்கு முன் அதிகாரமாக வைத்து இருப்பாரா என்பதையும் கணிக்க முடியவில்லை.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...