16 Feb 2018

ப்ராஜெக்ட் வெற்றிக்கான மறைமுக ரகசியங்கள்

ப்ராஜெக்ட் வெற்றிக்கான மறைமுக ரகசியங்கள்
            எஸ்.கே.வாகிய நான் இதில் சொல்வததெல்லாம் சத்தியப்பூர்வமான உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. பொய் என்றால் அது குறித்து குறுக்கு விசாரணையில் பார்த்துக் கொள்ளலாம்.
            இனி ப்ராஜெக்ட் வெற்றிக்கான மறைமுக ரகசியங்கள். இப்படி எழுதினால்தான் ரகசியமாக லேகியம் விற்பவனை ரகசியமாக மொய்த்துக் கொண்டு வாங்குபவர்கள் போல் ரகசியமாக யாருக்கும் சொல்லாமல் நீங்கள் மட்டும் படிப்பதாக நினைத்துக் கொண்டு மொய்த்துக் கொண்டு படிப்பீர்கள் என்பது தெரியும். சங்கதிகள் இதோ. ஒருமையில் பேசுவது சற்று வசதி என்பதால் அப்படிப் பேசியுள்ளேன். மரியாதை குறைவாகக் கருதுபவர்கள் உன் என்பதை உங்கள் என்றும், நீ என்பதை நீங்கள் என்று திருத்தி வாசித்துக் கொள்ளுமாறு கால் பணிந்து கைகளால் எழுதிக் கேட்டுக் கொள்கிறேன்.
            உன் கடன் கடமையைச் செய்வது மட்டுமே என்பதன் பொருள், அதற்கு மேல் கவலைப்பட வேண்டாம் என்பதுதான். கடமையைச் செய்து விட்டு ஓவராகக் கவலைப்படுபவர்கள் அநேகம். பலனை எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்பாருங்கள். கிடைக்கவில்லை என்பதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள். அடுத்தது என்ன? என்று சென்று கொண்டே இருங்கள்.
            இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதன் நோக்கத்தை அடையவே செய்யும். இது மாற்றமில்லாத உண்மை. உங்கள் நோக்கத்தை அடைவதற்குத் தடையாக நீங்களே இருக்காதீர்கள். அதாவது உங்கள் எண்ணங்களையே உங்களுக்கு எதிரானத் தடையாக நீங்களே உருவாக்கி வைக்காதீர்கள். உங்களுக்கானத் தடையை எவரோ ஒருவர் போட்டால் அதை ஒரு பொருட்டாகப் பரிசீலிக்கலாம். நீங்களே போட்டக் கொண்டால்...?!
            உங்களுடைய கோபத்தையும், அவசரத்தையும் மிகைபடுத்தும் மனிதர்கள்தான் இங்கு அதிகம். அதை அறிந்து பேசுங்கள், கருத்துகளை வெளிப்படுத்துங்கள். கஷ்ட காலத்தில் நஷ்டம் ஏற்படுத்திக் கொள்வது போல பேசவோ, கருத்துகளை வெளிப்படுத்தவோ செய்யாதீர்கள்.
            நீங்கள் நினைப்பது போலவே உங்கள் உணர்வுகளை, கருத்துகளை - அதாவது நீங்கள் நினைக்கின்ற மாதிரியே எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் இங்குக் குறைவு. உண்மையில் உண்மையையே திரித்து எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் இங்கு அதிகம். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எச்சரிக்கையாக இருப்பது கடினம் என்றால் வாயைக் கொடுக்காமல் இருப்பது பாதுகாப்பு.
            எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்க்கும் மனிதர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றனர் தெரியுமா? மனிதன் படைக்கப்பட்டதே கவலைப்படுவதற்குதான் என்ற கொள்கையுள்ள கட்சிக்காரர்கள் எத்தனை பேர் என்று எண்ணி விட முடியாது. எதிர்மறையாகப் பார்க்கும் மனிதர்களிடம் கருத்துக் கூறிக் கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் கருத்துகளை உண்டு செரித்துதான் எதிர்மறையை கிளைபரப்பி வைத்துள்ளார்கள்.
            எந்த மனிதன் தன் சுபாவத்தை விட்டுக் கொடுக்க சம்மதிப்பான். இது எதிர்மறை மனிதர்களின் விசயத்தில் நூற்றுக்கு இருநூறு பொருந்தும். முந்நூறு பொருந்தாதா என்று கேட்காதீர்கள். நானூறு பொருந்தினாலும் ஆச்சரியமில்லை.
            மனதுக்குள் கோபம் மிகுந்தாலும், மன உளைச்சல் ஆயிரம் மடங்கு அதிகரித்தாலும் கோபப்பட்டு பேசி விடாதீர்கள். உங்கள் பலகீனத்தை எந்த இடத்தில் கோர்த்து எப்படி மாட்டி விடுவது என்று பார்ப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரும்பாலானாவர்கள் அப்படித்தான். உங்கள் பலகீனம் எது என்று கோபமாகக் கேட்காதீர்கள். உங்கள் பலகீனம் கோபம்தான்.
            உங்களுடைய அந்தரங்கங்களைத் தெரிந்து கொண்டு அதை சாமர்த்தியமாக மாட்டி விடும் சங்கதியில் இணைக்கும் வேலையைச் செய்பவர்களாகிய கில்லாடிகள் சுற்றிச் சுற்றி உலாவிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தரங்கம் இல்லாமல் அம்மணமாய் இருப்பது நல்லதுதான். அவ்வளவு முடியாவிட்டாலும் அவ்வபோது உள்ளாடையைக் கழற்றி அதன் நாற்றத்தை வீசி எறியுங்கள். சுவாசிப்பவர்கள் சங்கடப்பட்டுக் கொள்ளட்டும். அவ்வளவுதான் நடக்கும் அந்தரங்கள் வெளியாவாதால். அதற்காக ஒரு முழக் கயிறு தேடும் மனத்தைத் தூக்கில் கட்டித் தொங்க விடுங்கள்.
            எந்த விசயத்தையாவது யாரிடமாவது கேட்பதாக இருந்தால், மிகப் பணிவாகக் கேளுங்கள். அகந்தையை வெளிப்படுத்தும் வகையில் கேட்காதீர்கள். தெரியாமல் கூட அப்படி ஒரு தன்மையை வெளிப்படுத்தும் சொற்களை உபயோகித்து விடாதீர்கள்.
            ஒரு பிராஜெக்ட் முடியும் வரை அதைப் பற்றிய எந்தச் செய்தியையும் நீங்களாக வெளிப்படுத்தாதீர்கள். அது வெற்றிகரமாக முடிந்தால் அதுவே தன்னைப் பற்றித் தானே வெளிப்படுத்திக் கொள்ளும். செய்திகள் தானாக கசிவது பற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லை, நீங்கள் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில். அயோக்கியர்களாக இருக்கும் பட்சத்தில் ஆபத்துதான். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அயோக்கியத்தனம் வேண்டாம் என்று அடித்துக் கொள்கிறேன்.

*****

3 comments:

  1. ஒரு பிராஜெக்ட் முடியும் வரை அதைப் பற்றிய எந்தச் செய்தியையும் நீங்களாக வெளிப்படுத்தாதீர்கள். அது வெற்றிகரமாக முடிந்தால் அதுவே தன்னைப் பற்றித் தானே வெளிப்படுத்திக் கொள்ளும்.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ரகசியம் வெளியாகி விட்டதே ஐயா!
      பரவாயில்லை! நான்கு பேருக்கு நல்லது என்றால் எந்த ரகசியமும் வெளியாவதில் தவறே இல்லை!
      அருமையும் பெருமையும் உணர்ந்து வாசித்து தங்களுக்கும்!

      Delete

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...