குறளதிகாரம் - 5.3 - விகடபாரதி
அஞ்சாமல் செய்ய
வேண்டிய அஞ்சு!
வாழ்க்கை
என்பது மரபின் தொடர்ச்சி. நமது அறிவு, உணர்வு, பண்பாடு, கலாச்சாரம், சிந்தனை எல்லாம்
மரபின் தொடர்ச்சியாக கடத்தப்படுகிறது. மரபின் தொடர்ச்சியாக இருப்போர் நம் முன்னோர்கள்.
நம் மரபைத்
தொடங்கி வைத்தவர்கள் நம் பெற்றோர்கள் என்றால், அவர்களின் மரபைத் தொடங்கி வைத்தவர்
அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்களின் மரபைத் தொடங்கி வைத்தவர்கள் அவர்களின்
பெற்றோர்கள்.
இப்படி நாம்
தொடர்ந்து கொண்டே சென்றால் பெற்றோர்களின் பெற்றோர்களின் பெற்றோர்களின் பெற்றோர்கள்
என்ற ஒரு முடிவில்லாத சங்கிலி நீளும். சுருங்கச் சொன்னால் நாம் முன்னோர்களின் எச்சம்.
அவர்கள் உருவாக்கி வைத்த பண்பாட்டின் மிச்சம்.
மரபைத் தொடங்கி,
தொடர வைத்த நம் முன்னோர்களின் வழிவந்தோர் எத்தனை பேர் இருப்பினும் அத்தனை பேரும்
தென்புலத்தார் ஆவார். மனித குலம் தெற்கே தோன்றி வடக்கு நோக்கி நகர்ந்ததற்கான தரவுகளை
ஆய்வாளர்கள் முன்வைப்பதை நோக்கும் போதும், வள்ளுவர் தம் உள்ளுணர்வால் அவர்களை தென்புலத்தார்
என முன்வைப்பதை நோக்கும் போதும் வியப்பு மேலிடுகிறது.
நம் ஆதி மரபின்
முன்னோர் வழிவந்த அவர்களை அதாவது நம் தென்புலத்தாரை அதாவது நம் ஆதிப் பழங்குடிகளைப்
போற்றிக் காத்தல் செய்தல் இல்வாழ்வு ஏற்றோரின் முதன்மையான கடமையாகும்.
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவர் எவரோ அவரே வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுபவர் ஆவார். அத்தகைய
தெய்வம் போன்று நம்மிடையே வாழ்வோர்களைப் போற்றிக் காத்தல் செய்தல் இல்வாழ்வு ஏற்றோரின்
இரண்டாவது முக்கியமானக் கடமையாகும்.
பசியென வந்தோர்க்கு
புசியெனத் தந்து புதிதாக வந்தோரை - அதாவது அவர் அறிந்தவரா, அறியாதவரா என நோக்காது
- சொந்தமாக பந்தமா உற்றாரா உறவினரா எனப் பார்க்காது - விருந்தினராக ஏற்று விருந்தோம்பல்
செய்தல் இல்வாழ்வு ஏற்றோரின் மூன்றாவது கடமையாகும்.
இல்வாழ்வு
ஏற்றல் என்பது தம் குடும்பத்துக்கு மட்டும் ஏற்கும் பொறுப்போ, தம் குடும்பத்தின்
பசியை மட்டும் போக்கும் சுயநல நோக்கோ இல்லாது இவ்வுலகையே தம் குடும்பமாக ஏற்றுச்
செயல்படும் பொறுப்பும், பொதுநல நோக்கும் உடையதாகும் என்பதை இல்வாழ்வு ஏற்றோர் செய்ய
வேண்டிய மூன்றாவது கடமையினின்று அறியலாகலாம்.
அதன் அடிப்படையிலேயே
இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தின் முதல் குறளில் மட்டும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிக்
குறிப்பிடும் வள்ளுவர் அடுத்தடுத்த குறட்பாக்களில் உலக உறுப்பினர்களைப் பற்றியே அதிகம்
குறிப்பிடுகிறார்.
புதிதாக வந்தோரைக்
காத்தல் செய்யும் இல்வாழ்வோர் தம் சுற்றத்தாரைப் போற்றிக் காத்தல் செய்ய மாட்டாரா
என்ன? இருப்பினும் புதிதாக வந்தோர்க்கு மதிப்பளித்து சுற்றத்தாரை மறந்து விடும் தமிழர்
போல் ஆகி விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ வள்ளுவர் தம்மைச் சுற்றியுள்ள சுற்றத்தாரைப்
போற்றிக் காத்தல் செய்தலை இல்வாழ்வோரின் நான்காவது கடமையாகக் குறிப்பிடுகிறார்.
இப்படி முன்னோர்
வழி வந்தோர், தெய்வம் என வணங்கத் தக்கோர், புதியவராக இருப்பினும் அண்டி வந்தவர் எவராக
இருப்பினும் அவ்விருந்தினர், அண்டை அயலார், உறவினர் என வாழும் சுற்றத்தினர் எனக் கூறி
கடைசியாக தம்மையும், தம் குடும்பம் சார்ந்தவர்களையும் போற்றிக் காத்தல் செய்தல் இல்வாழ்வோரின்
ஐந்தாவது கடமையாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
போற்றிக்
காக்கும் இக்கடமையை வள்ளுவர் ஓம்பல் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
வரிசை முறைப்படி,
1. நம் மூதாதையர்,முன்னோர்
வழி வந்தோரே ஓம்ப வேண்டிய முதன்மையானோர். நம் வாழ்வின் அறிவை, உணர்வை, பண்பாட்டைத்
தந்தவர்கள் அவர்கள். அதற்கான முதல் வணக்கமும், முதல் ஓம்பலும் அவர்களுக்கு. நம் ஆதிப்
பழங்குடிகளான அவர்களை ஓம்ப வேண்டும். நாமோ அவ்வாதிப் பழங்குடிகளை அழித்து ஒழிப்போம்
என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவருக்குத் தெரிந்திருக்கும் போலிருக்கிறது.
ஆகவே அவர்களைக் காத்தல் செய்தல் வேண்டும் அதாவது ஓம்ப வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே குரல் கொடுத்து ஓம்ப வேண்டிய பட்டியலில் முதல் இடத்தில் வைத்து இருக்கிறார்
வள்ளுவர்.
2. நம்மிடையே
வாழ்வாங்கு வாழத் தெய்வமென வணங்கத்தக்க வகையில் வழிகாட்டிக் கொண்டிருக்கும் மாமனிதர்கள்
யாரோ அவர்களே இரண்டாவது ஓம்ப வேண்டிய சிறப்புக்குரியவர். அவர்களைப் போற்றிக் காத்தல் செய்ய வேண்டும் அல்லாது
கோட்ஸேக்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து மகாத்மாக்களைக் கொன்று தீர்த்து
விடுதல் போல காலி செய்து விட்டு பின் கொண்டாடுதல் கூடாது. அவ்வகையில் ஓம்பல் என்ற
சொல்லின் பொருள் அதி முக்கியத்துவமும், ஆழமும் உடையதாகும்.
3. புதிதாக
வந்தோரை யாரெனத் தெரியாது என விரட்டி விடாது, அகதிகள் என்றோ, அனாதைகள் என்றோ, ஆதரவற்றோர்
என்றோ அவர்களை விலக்கி விடாது அவர்களை விருந்தினராய் ஏற்று மூன்றாவதாக (வரிசைமுறைப்படி)
ஓம்ப வேண்டிய சிறப்புக்குரியவர்கள் அவர்கள்.
4. மதம்,
இனம், சாதி, சொந்தம், பந்தம், திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்பதோடு அல்லாது
பாலினம் உட்பட பேதம் பாராது சுற்றமாக யார் இருப்பினும் அவர்கள் அனைவரும் நான்காவதாக
ஓம்ப வேண்டிய சிறப்புக்குரியவர்கள். அண்டையில் இருப்பவர் திருநங்கை, திருநம்பி, பேச்சுலர்,
மாற்றுத் திறனாளி, ஒரு குறிப்பிட்டச் சாதியை, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்
அதாவது சிறுபான்மையினர் எனப் பாராது அவர்கள் அனைவரும் தம் சுற்றத்தார் என்ற பார்வையோடு
ஓம்ப வேண்டியது இல்வாழ்வோரின் கடமையாகும். அப்படி ஒரு பார்வையோடு கடமையாற்ற முடியாதவர்கள்
மனித குலத்தினின்று விலகி இல்வாழ்வு ஏற்காமல் இருப்பதும் சிறப்பே.
5. ஆண் -
பெண் என்ற தன்முனைப்பு இல்லாமல், ஆண் குழந்தை - பெண் குழந்தை என்ற பால் பேதமில்லாமல்
- மாற்றுத் திறனாளி என்ற மாற்றுப் பார்வையில்லாமல், சம்பாதிப்போர் - சம்பாதிக்காதவர்
என்ற பாகுபாடு இல்லாமல் தம் குடும்பத்தில் உள்ள அனைவரும் சமமாக ஐந்தாவதாக (வரிசைமுறைப்படி)
ஓம்ப வேண்டிய சிறப்பிற்குரியோர்களாவர்.
இப்படி ஐம்பெரும்
ஓம்பல்களைச் செய்யும் திராணியும், தில்லும் இருப்பவர்கள் இல்வாழ்வில் இருக்கத் தகுதியானவர்கள்.
இல்லாதவர்கள் துறவிகளாய் இருக்கத் தகுதியானவர்கள்.
மேற்சுட்டிய
ஐம்பெரும் ஓம்பல்களைச் செய்யாமல் இல்வாழ்வில் இருப்போர் இல்வாழ்வில் இல்லாதோராகவே
கருதப்படுவர், கண் -காது - மூக்கு - வாய் - உடல் என இருந்தாலும் பொம்மையையும் சிலையையும்
மனிதராகக் கருத முடியாததைப் போல.
தென்புலத்தார்
தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை என்று பொட்டில்
அடித்தாற் போல் சொல்கிறார் வள்ளுவர்.
*****
No comments:
Post a Comment