8 Feb 2018

அசாத்தியக் கண்கள்

அசாத்தியக் கண்கள்
            ஒவ்வொன்றையும் பிரித்தறியும் திறனில்தான் எல்லாம் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். பிரித்ததைச் சேர்த்தறிய அலுப்பில்லாத, சோம்பலில்லாத ஊக்கம் தேவைப்படும் என்பதை மறந்தவர்கள் தன்னம்பிக்கைத் தரும் புத்தகங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.
            இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் கொடுக்கப்படும் அதிக அழுத்தம் அதன் இயல்பான தன்மையைக் கெடுக்கிறது என்பது எப்படி கண்களினின்று தப்புகிறது? எது இயற்கைத் தன்மை இல்லையோ, அதை எப்படி இயல்பாகச் செய்ய இயலுகிறது? நீண்ட காலத்துக்கு எப்படி அதை நிகழ்த்த முடிகிறது?
            சோம்பல் மிகப் பெரிய பிரச்சனை என்றால், எதை ஆரம்பித்தாலும் வேண்டாம் என்று தோன்றுவதுதான் ஆகப் பெரிய முட்டுக்கட்டை என்றால், அலுப்பால்தான் பல வேலைகள் தள்ளிப் போகிறது என்றால், பொதுவாக வேலைகளை இயல்பானப் போக்கில் செய்பவர்களாக இல்லாமல், உண்டாகப்பட்ட மனதால் துண்டாக்கப்பட்ட ஆளுமையாக இருப்பதாகப் பொருள்.
            புதியதை முயன்றுப் பார்க்கும் திருப்தியினின்று பின்வாங்கத் தேவையில்லாதத் தன்மை பிடுங்கப்பட்டு விட்டது. யார் யார் எப்படி முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் சொல்வார்கள் என்று நிலைமை ஆகி விட்டது. நெருப்புக்கு குளிரவும், நீருக்குத் தகிக்கவும் கற்றுக் கொடுப்பது போல ஆகி விட்டது. நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் மீன் குஞ்சுகளாக்கி விட்டார்கள் மனத்தை.
            அந்தந்த நொடியின் பேரானந்தத்தை அனுபவித்த ருசி தெரியாதவர்கள், ஒரு மனநிலையை உருவாக்கி அதன் மூலம் சாதிக்க வேண்டும் அறிவுரை பகர்ந்து, அதையே ஆணையாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆணைக்கு அடி பணியும் யானைகள் நாம்.
            நீங்கள் ஏன் எப்படியும் எதுவும் நிகழ்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கக் கூடாது! அதை விட உங்கள் பிறப்புக்கு நீங்கள் வேறென்ன மகோன்னதம் செய்து விட முடியும்!
            தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அவர்கள்தான் செய்யச் சொல்வார்கள். அப்படிச் செய்யச் சொல்லவில்லை என்றும் சொல்வார்கள். அப்படி எதிர்பார்க்கவில்லை என்ற ஒற்றை வாக்கியத்தில் அதுவரை உருவாக்கி வைத்த உங்களை உங்களுக்குத் தெரியாமலே தவிடுபொடி செய்து விடுவார்கள்.
            வருகிறதோ இல்லையோ நீங்கள் நீங்களாக தொடர்ந்து செல்லுங்கள். அதில் ஒன்று இருக்கிறது. அது நிஜமான நீங்கள்!
            நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதை, செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நெருக்கடியில் இருப்பவைகளை உடைத்து எறியுங்கள்.
            முதலாளியின் சுபாவத்தில் தொழிலாளிகள் பொறி வைக்கப்படுவார்கள். உருவாக்கப்படும் மனம் முதலாளிக்கான மனம். நீங்கள் முதலாளியாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கும் போது, மனத்தை ஏன் முதலாளியாக்குகிறீர்கள்? சொற்ப கூலிக்காக மனம் முதலாளியாக்கப்பட்ட மனிதர்கள் அடிமைகளென வலம் வருகிறார்கள் வரலாற்றில் என்பது தெரியுமா?
            யாருடைய மனநிலையை ஒப்பிட்டும் யாரும் யாரையும் பாதுகாக்க நினைக்க வேண்டாம். யாரோ ஒருவரின் சுபாவத்தில் இருப்பவர்கள் தன்னுடைய சுபாவத்தில் இருப்பதாகவே சொல்வார்கள்.
            இதைச் சொல்வதால் நீங்கள் எரிந்து விழுந்தால், கரித்துக் கொட்டினால், கோபப்பட்டால், குறை கூறிப் பேசி ஆனந்தப்பட்டால் நீங்கள் நீங்களாக இல்லாத அறிகுறியின் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள்.
            அழுக்குப் பிடித்தால் அது பிடித்தமாகக் கூடாது. துடைக்கும் காரியத்தைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...