13 Feb 2018

புனித நிகழ்வுக்குத் தயாராகுங்கள்!

புனித நிகழ்வுக்குத் தயாராகுங்கள்!
            பனி விழும் துருவப் பகுதிகளைப் போலாகி விட்டது, பணி சூழ் இவ்வாழ்வு. குடும்பம், சமூகம், பொதுவெளி என்று அவ்வளவு பணிகள். படிப்பது, படைப்பது, கடன்கள் கழிப்பது, அலைவது, உழல்வது என்று பணிகள், பணிகள் எப்போதும் பணிகள், எங்கும் பணிகள்.
            பணிகள் சுமை போல் ஏறி அமர்கின்றன. கழுத்தை இறுக்கும் கரங்கள் போல் அழுத்துகின்றன. ஒரே கெளண்டரில் கூடும் கூட்டம் போல சில நேரங்களில் ஒரே நேரத்தில் செய்ய வேண்டுமென ஏகப்பட்ட பணிகள் குவிந்து விடுகின்றன.
            பணிகளைச் செய்து செய்தே சோர்ந்து, சோர்ந்து சோர்ந்து பணிகளைச் செய்து அலுத்து, சலித்து விடுகிறது. இந்தப் பணிகளிலிருந்து எப்போது ஓய்வு கிடைப்பது, இந்தப் பணிகளிலிருந்து எப்போது மீள்வது என்பதெல்லாம் விடை தெரியாத புதைகுழிக்குள் சென்று விழுந்து புதைந்து போய்க் கொண்டு இருக்கின்றன.
            சுற்றி நிறைய சுயநலச் சோம்பேறிகள் பெருத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சுயலாபம் தரும் பணிகளை மட்டும் ஆர்வமாகச் செய்கிறார்கள். சுயலாபம் இல்லாத பணிகளில் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல நடந்து கொள்கிறார்கள்.
            நிர்வாகத் துறையின் லட்சணம் பாருங்கள் அவர்களைத்தான் போற்றிப் புகழ்வதாக இருக்கிறது. பணி செய்பவர்கள் மென்மேலும் பணி செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். செய்யும் பணிகளில் குறை கண்டுபிடித்து எச்சரிக்கவும் படுகிறார்கள்.
            சுயநலச் சோம்பேறிகளுக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு உட்கார்ந்து நாற்காலியைத் தேய்ப்பது கூட அலுப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் உட்காரும் போது யாராவது பிட்டத்தை அசைத்து நாற்காலியைத் தேய்க்க உதவினால் மகிழ்ச்சிதான்.
            பணி செய்ய நேரம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் மத்தியில், எவ்வளவு நேரம்தான் ஓய்வாக இருப்பது என அல்லாடுபவர்கள் இருக்கிறார்கள். சரியான முதலாளிகள் இல்லாவிட்டால், சரியான தொழிலாளிகளாக இருக்க மாட்டோம் என்பது எவ்வளவு வேதனையானது?
            நம் தடைகள் என்பது நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைகள்தான். வாய்ப்புகள் மறுக்கப்படும் போது அதை வென்றெடுப்பதுதான் மனித இயல்பு என்றால், இந்தச் சுயநலச் சோம்பேறிகளைத் திருத்த அவர்களின் சுயலாபத்தில் கை வைப்பதுதான் ஒட்டு மொத்த மனித சமூகத்துக்குமானப் புனித நிகழ்வு.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...