13 Feb 2018

வலிமையற்றவர்கள் துறவைத் தேடி ஓடலாம்!

குறளதிகாரம் - 5.8 - விகடபாரதி
வலிமையற்றவர்கள் துறவைத் தேடி ஓடலாம்!
            துறந்து விட்டுச் செல்வது துறவு. அப்படிச் செல்பவர்கள் துறவிகள். அவர்கள் யாரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.
            அவர்கள் யாருக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
            அவர்களே துறந்தவர்கள் என்பதால் அவர்கள் எதையும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
            இல்வாழ்வோர் அப்படி இருக்க முடியாது.
            அவர்களுக்குப் பொறுப்புகள் இருக்கின்றன. துறந்து விட்டு ஓட முடியாது.
            அவர்களுக்கு கடமைகள் இருக்கின்றன. விலகி விட்டு நகர முடியாது.
            அவர்களுக்கு நியதிகள் இருக்கின்றன. தவிர்த்து விட்டு நடக்க முடியாது.
            இல்வாழ்வோர் தாம் எப்படி அன்போடும், அறத்தோடும் இல்வாழ்வு நடத்துகின்றனரோ, அதன் படி மற்ற இல்வாழ்வோரையும் வழிநடத்தும் பொறுப்பைப் பெற்று இருக்கின்றனர்.
            இல்வாழ்வோர் தாம் எப்படி உற்றோர்க்கும், உறவோர்க்கும், அயலோர்க்கும் கடமைகள் ஆற்றுகின்றனரோ அதன்படி தம்மைச் சார்ந்த மற்றவர்களையும் நெறிபடுத்தும் கடமையைப் பெற்று இருக்கின்றனர்.
            பழிக்கு அஞ்சுவதும், அறத்தோடு நிற்பதற்கு அஞ்சாமல் இருப்பதும், பகிர்ந்து வாழ்தலும் ஆகிய நியதிகளோடு தாம் வாழ்தலோடு அவ்வாறே தம்மைச் சூழ்ந்துள்ளவர்களையும் வாழச் செய்ய வேண்டிய கடப்பாட்டைப் பெற்று இருக்கின்றனர்.
            விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எளிதாக துறந்து விட்டுச் செல்லும் துறவு போல இல்வாழ்வில் எதையும் தூக்கி எறிந்து விட்டுச் செல்ல முடியாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இல்வாழ்வுக்கான நெறிகளை ஏற்று, மற்றவர்களையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்திக் கட்டுக்கோப்போடு வழிநடத்தி தாமும் அவ்வழியில் நடக்க வேண்டும். இது தவத்தை விட கடுமையானதாகும். தவத்தை விட சிரமமானதாகும். தவத்தை விட வலிமையானதாகும்.
            அந்த இல்வாழ்வின் வலிமையே,
                         கொக்கு என்று நினைத்தாயா கொங்கணவா? என்று தவசிகளின் வலிமையை மிஞ்சிய வலிமையை இல்வாழ்வோர்க்குக் கொடுத்து இருக்கிறது.
            எல்லாவற்றையும் துறந்தாலும் உணவு உண்ணுவதை எந்தத் துறவியால் துறக்க முடியும்?
            நிகழ்காலத்தில் இரண்டு மணி நேரத்துக்குக் கூட உண்ணாவிரதத்தைத் தாக்குப் பிடிக்க முடியாத அவர்களுக்கும் சேர்த்து உணவை விளைவிப்போர் இல்வாழ்வோரே.
            இப்போது சொல்லுங்கள் உணவு உண்ணுவதைத் துறக்க முடியாத துறவிகளுக்கும் சேர்த்துச் சோறிடும் இல்வாழ்வை விடச் சிறந்ததா தவம்?
            தவத்தால் சோறிட முடியாது. உழைத்தால்தான் சோறு. அப்படி தவமியற்றும் தவசிகளுக்கும் சேர்த்து சோறிட உழைக்கும் இல்வாழ்வோரே தவசிகளை விடச் சிறந்தோர். அத்தகைய இல்வாழ்வோரின் இல்வாழ்வே தவசிகளின் தவத்தை விட வலிமை வாய்ந்தது.
            எப்போதும் அன்பு செலுத்துவதற்கும், அன்புக்கு ஆட்படுவதற்கும், பகிர்ந்து கொடுப்பதற்கும், பகிரப்படுதலுக்கும் உரிய இல்வாழ்வோரே அவைகளெல்லாம் வாய்க்கப்படாத துறவிகளினும் மேலானோர்.
            எல்லாவற்றையும் துறந்த பிறகு துறவிகளின் தவம் துறவிகளுக்குக் கூட பயன்படாது. எதையும் துறக்காமல் எல்லாவற்றையும் ஏற்று அன்பு செய்து பகிர்ந்து கொடுக்கும் இல்வாழ்வோரின் உழைப்போ துறவிகளுக்கும் பயன்படும்.
            ஆகவேத்தான் தவத்தை விடச் சிறந்தது இல்வாழ்வு.
            தவசிகளை விடச் சிறந்தோர் இல்வாழ்வோர்.
            துறவிகள் இல்லாமல் இல்வாழ்வோர் வாழ்வோர்.
            இல்வாழ்வோர் இல்லாமல் துறவிகள் வாழ முடியாது.
            துறவு ஏற்று தவம் செய்ய தவசிகளுக்கு இல்வாழ்வோரின் துணை வேண்டும். ஆக இல்வாழ்வோர்க்கு துணை நிற்பதோடு தவசிகளின் தவத்துக்கும் துணை நிற்போர் இல்வாழ்வோரே என்பதால்,
            ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து என்று வள்ளுவர் சொல்வது நூற்றுக்கு இருநூறு மடங்கு உண்மை.
            இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லப்படுவது என்னவென்றால்...
            1. தவசிகளைத் தேடி இல்வாழ்வோர் ஓட வேண்டிய அவசியமில்லை. இல்வாழ்வோரைத் தேடித்தான் தவசிகள் ஓடி வர வேண்டும்.
            2. தவத்தை விட வலிமையானது இல்வாழ்வு என்பதால் வலிமையுள்ளவர்கள் இல்வாழ்வு வாழலாம். அஃது அற்றவர்கள் துறவைத் தேடி ஓடலாம்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...