சராசரித்தனம் கற்றுக் கொள்ளப்படுவதாக!
பணிகள் கடுமையாக வேலை வாங்குகின்றன. பெரும்பாலான
நேரம் அதிலே செலவாகிறது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிதானமாகச் சாப்பிட, நிம்மதியாக தூங்கிட,
சுற்றத்தோடு பேசிட வாய்ப்பில்லாமல் எந்நேரமும் பணி மயமாக ஓடிக் கொண்டிருக்கிறது தனக்கும்,
யாருக்கும் பயனற்ற இந்த வாழ்வு.
இதற்கு இடைப்பட்ட நாள்களில் விபத்தொன்று
நேரும் போது, குற்ற உணர்ச்சியால் குமைந்துப் போக வேண்டியதாக இருக்கிறது. கொஞ்சம்
கவனமாக இருந்திருக்கலாமோ, அலட்சியமாக இருந்து விட்டோமோ என்று பல்வேறு விதமாக எண்ண
அலைகள் எழுந்து வருத்துகின்றன. எல்லாம் அனுபவிக்க வேண்டிய ஒன்றே. அதனால்தான் இது நிகழ்ந்ததா?
சில நிகழ்வுகளை யாராலும் தடுக்க முடியாதா? அது நடந்தேதான் தீருமா? இப்படிக் கேள்விகளால்
எழும் பாதிப்புகள் அதிகம் விபத்தை விட.
யார் நம் பேச்சைக் கேட்பார்கள் நம் மனம்
உட்பட. என்றாலும் அது அப்படித்தானா? அதை எதுவும் செய்ய முடியாதா? அதுவே அதன் மற்றும்
அவர்களின் இயல்பா?
எதுவும் கட்டுக்குள் வருவதில்லை என்ற வருத்தம்
ஏற்படத்தான் செய்கிறது. இப்போதெல்லாம் அதில் பெரிய திருப்தி எதுவும் இல்லை. சுய திருப்திக்காக
ஒன்றிரண்டு எதையாவது செய்து கொள்வது தவிர, எதையும் கட்டுக்குள் வைக்கத் தோன்றுவதும்
இல்லை.
அந்தந்த நேரத்தில் எழும் பிரசன்னங்கள்
என்னவென்று அறிவதற்காகவே அந்தந்த நொடியில் வாழ்வது ஓர் அற்புதமாகத்தான் இருக்கிறது.
புதிதாய்ப் பிறப்பது போன்ற அழுகையில்லாத ஆனந்தம் அப்போது.
மீத்திறன் பெறக் கற்றுக் கொள்வதை விட
சராசரியாக இருக்கக் கற்றுக் கொள்வது சிரமம். இயல்பாக என்ன வருகிறதோ அதைச் செய்து
கொண்டு, ஆசைக்காகத் தன்னை வருத்திக் கொள்வதை விட்டு விட்டு, நிகழ்வதைத் சாதாரணமாக
எதார்த்தக் கண்கள் கொண்டு பார்க்கும் சராசரித்தனம் அசாத்தியம். அதெப்படி அசாத்தியம்?
காண்பதை மிகை கொண்டு நோக்கி அப்படியல்ல இப்படித்தான் என்று வடிவமைக்கும் மனத்தைத்
தூக்கி எறிந்து எது எப்படியோ, அதை அப்படியே நோக்கும் துணிச்சல் எளிதில் வாய்த்து
விடுமோ என்ன!
சாதாரணம் அவ்வளவு அசாதாரணம். அசாதாரணத்தைச்
சாதாரணமாகச் செய்து கொண்டு அயர்ந்து போய்க் கொண்டு இருப்பவர்களுக்கு இது புரியுமோ
என்னவோ!
*****
No comments:
Post a Comment