7 Feb 2018

அகதிகள் எங்கும் இல்லை!

குறளதிகாரம் - 5.2 - விகடபாரதி
அகதிகள் எங்கும் இல்லை!
            ஒவ்வொரு மனிதருக்கும் குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்ற இரு வகை வாழ்க்கை இருக்கிறது.
            இல்வாழ்க்கை எனும் குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டதால் சமூக வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்வதோ, சமூகப் பணியை ஏற்றுக் கொண்டதால் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்வதோ முழுமையான வாழ்வாகாது.
            இல்வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர்கள் குடும்பம் சார்ந்து உருவாகும் 1. பெற்றோர்கள், 2. இணையர், 3. குழந்தைகள் ஆகிய மூவர்க்கும் நல்லாற்றின் துணையாக இருப்பதோடு,
            சமூக வாழ்க்கை சார்ந்து உருவாகும்
                        1. துறந்து வாழ்வோர்க்கும்,
                        2. இயலாதோர்க்கும்,
                        3. ஆதரவற்றோர்க்கும்
                                    இல்வாழ்வோரே துணையாவர் என்கிறார் வள்ளுவர்.
            தன் பெண்டு, தன் குடும்பம் என்றில்லாமல் சமூகத்துக்கும் ஆவன செய்ய வேண்டும் என்பாரே பாவேந்தர் பாரதிதாசன்.
            இல்வாழ்வு என்பது வெறும் குடும்ப வாழ்வு மட்டுமன்று அது சமூக வாழ்வின் நீட்சி என்பதை வள்ளுவர் மேற்காணும் கருத்து மூலம் தெளிவு செய்ய விழைகிறார்.
            குடும்பத் துணையாகவும், சமூகத் துணையாகவும் இல்வாழ்வு ஏற்றோர் செயல்பட வேண்டும் என்கிற உயரிய பொறுப்பை வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.
            குடும்பத்தையும், உறவுகளையும் துறந்து வாழ்வோராக இருந்தாலும், துறவு மேற்கொண்டு துறவியாக இருப்போராக இருந்தாலும் அவர்களுக்கு இல்வாழ்வோர் துணை செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். பற்றற்ற துறவிக்கும் பற்றுக்கோடாக இல்வாழ்வோர் அமைய வேண்டும். அப்படிப் பார்ப்பின் துறவை விட மேன்மையானது இல்வாழ்வு என்ப‍து புலனாகும்.
            உடலால் இயலாதோராக இருந்தாலும், மனதால் இயலாதோராக இருந்தாலும், நோய்மையினால் இயலாதோராக இருந்தாலும், முதுமையினால் இயலாதோராக இருந்தாலும் அதாவது மாற்றுத்திறனாளிகள், மனநோயாளிகள், நோயாளிகள், முதியோர்கள் ஆகியோர்க்கும் இல்வாழ்வோர் துணையாக நிற்க வேண்டும் என்று கட்டுத்திட்டம் செய்கிறார் வள்ளுவர்.
            ஆதரவற்றோர், அனாதைகளாக்கப்பட்டோர், குடும்பத்தாலோ உறவுகளாலோ கைவிடப்பட்டோர், நாடுகளால் அகதியென ஆக்கப்பட்டோர் ஆகியோர்க்கும் இல்வாழ்வோர் துணையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கிறார் வள்ளுவர்.
            துணையாக இருப்பது என்றால் எப்படி? அவர்களின் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும், அன்பு, பரிவு, மதிப்பு போன்ற உளவியல் மற்றும் சமூகவியல் தேவைகளுக்கும் துணையாக நின்று அவர்களையும் தமக்கு இணையாக போற்றிப் பராமரிப்பது ஆகும்.
            இல்வாழ்வு மூலம் வள்ளுவர் காணும் உலகம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்துபட்ட நேசம் கொண்டதும், துன்பப்படுவோர், நிராதரவாக்கப்பட்டோர், விலக்கப்பட்டோர் என்று யாருமில்லை என்ற வகையில் அனைவரையும் அரவணைக்கும் பரந்த மனப்பான்மையையும், தொண்டுள்ளத்தையும் விதைப்பதும் ஆகும்.
            குடும்பம் என்பது சிறிய சமூகம், சமூகம் என்பது பெரிய குடும்பம் என்ற பார்வையை முன் வைக்கும் நோக்கம் கொண்டது வள்ளுவரின் இல்வாழ்வு குறித்த குறட்பாக்கள். குடும்பத்தில் யார் யாரை விலக்க முடியும்? யார் யாரை தவிர்க்க முடியும்? யார் யாரை நீக்க முடியும்? அப்படிப்பட்ட மிகப் பெரிய குடும்பமே சமூகம். யாரும் இங்கு விலக்கப்பட்டோர் இல்லை, யாரும் இங்கு தவிர்க்கப்பட்டோர் இல்லை, யாரும் இங்கு நீக்கப்பட்டோர் இல்லை ஏனென்றால் அவர்களுக்கு துணை நிற்க இல்வாழ்க்கை ஏற்றோர் இருக்கிறார்கள் என்ற மண ஒப்பந்தமே இல்வாழ்வு என்பதை வள்ளுவர் உறுதிபடுத்தி நிறுவ விரும்புகிறார்.
            இணையரைக் கை பிடிப்பது மட்டுமோ இல்வாழ்வு? இல்லாதோரை கை தூக்கி விடுவதே இல்வாழ்வு என்ற வள்ளுவரின் குரலைத்தான் இக்குறள் தூக்கிப் பிடிக்கிறது.
            அக்குறள்தான்,
            துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
            ஆம்! இல்வாழ்வோர் இருக்கும் வரையில் எங்கும் அகதிகள் இல்லை, அனாதைகள் இல்லை, ஆதரவற்றோர்கள் இல்லை, கைவிடப்பட்டோர்கள் இல்லை, விலக்கப்பட்டோர்கள் இல்லை. அப்படி இருப்பின் அவர்களை இல்வாழ்வோர் காப்பர்.
            இல்வாழ்வோர் குடும்ப உறவுகளையும் காப்பர். சமூக உறவுகளையும் காப்பர். அக்காப்புக்கான ஒப்பந்தமே இல்வாழ்க்கை என்கிறார் வள்ளுவர்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...