9 Feb 2018

தக்காளி நறுக்கும் கத்தி

தக்காளி நறுக்கும் கத்தி
            எஸ்.கே. லேசாகக் கோபப்பட்டுப் பர்ப்போமே என்று நினைத்தால் அது பெரிய கோபமாக மாறி விடுகிறது. கோபத்தில் என்ன சின்ன கோபம்? பெரிய கோபம்? நெருப்பில் என்ன சின்ன பொறி? பெரிய பொறி?
            ‍அன்று ஒரு முக்கோணத்தைப் போன்ற மூன்று விதமான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல். மக்கள் முன்பு மாதிரி இல்லை. யாரும் யாருக்கும் அடங்குவதே இல்லை. கத்திக் குத்து சகஜமாகி விட்டது. எல்லாவற்றிற்கும் மேலே இருக்கும் தலைமை ஒரு காரணம். ஒரு முட்டாள்தனமான தலைமையை வைத்துக் கொண்டு படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இவைகளைச் சமாளித்து விட்டு வெளியே வந்தால் நிறைய நய்ய நய்யான்கள் புலம்பிக் தள்ளுகின்றன. எரிச்சல் வராமல் என்ன செய்யும்? எஸ்.கே.யின் எரிச்சல் இப்படித்தான் பற்ற வைக்கப்படுகிறது. பிறகு அது கொழுந்து விட்டு எரிவதை எஸ்.கே.தான் அணைக்க வேண்டும். பற்ற வைத்தது யாரோ எவரோ, அணைக்க வேண்டியது தீயணைப்பு வீரர்களின் கடமை என்பது போல.
            மேலே சொல்லப்பட்ட அது என்ன முக்கோணம் என்று யாராவது சிந்தித்தீர்களா? தான், சுற்றம், சமூகம் என்பதாகவோ, பேராசை, சாமர்த்தியம், ஏமாற்று என்பதாகவோ அல்லது காசு, பணம், துட்டு என்பதாகவோ இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கோணம். அவரவர் முக்கோணம் அவரவர் அறிந்தது. பிறருக்குப் புலனாகாது.
            இப்போது பழைய படி விசயத்துக்கு வரலாம்.
            எல்லாம் எரிந்து முடிந்து சாம்பலாகி விடுகின்றது. அப்புறம் நடந்து முடிந்த விட்ட ஒரு செயலைப் பற்றி எஸ்.கே. புலம்பி என்ன பயன்? அதை இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே என அங்கலாய்ப்பதில் என்ன வந்து விடப் போகிறது?
            ஒரு காரியத்தைச் சுலபமாகச் செய்யும் முறையில் எஸ்.கே. செய்கிறான். விளைவு நேர்மாறாக அமைந்தால் யார் என்ன செய்ய முடியும்?
            நிகழ்வுகள் அப்படித்தான் அமையும். அதைக் கண்டு கொள்ளக் கூடாது. நிகழ்வுகள் மனதைப்  பாதிக்க அனுமதித்தால் அமைதியற்றுப் போய் விடும் என்பதை எஸ்.கே. குத்துமதிப்பாகவேனும் அறிவான்.
            இன்றைய கால கட்ட நிகழ்வுகள், சூழல்கள் எல்லாம் மன இறுக்கத்தையும், மன அழுத்தத்தையும் பங்காளிகளாகக் கொண்டவை. பங்காளிச் சண்டைகளைப் பற்றி சொல்வதற்கில்லை. இந்த மனஇறுக்கம் மற்றும் மனஅழுத்தம் பற்றியும் அப்படியே.
            அநேகமாக ஒழுங்கு என்பது நாம் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் குறைவு. உயர்ரக வாகனத்தில் செல்லும் மிகு உயரதிகாரி கூட சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி சிறுநீர்க் கழிப்பதைப் பார்க்கலாம். நூறு விழுக்காடு பெர்பெக்ட்நெஸ்ஸை எதிர்பார்த்து குமைந்துப் போய் விடக் கூடாது.
            அந்தக் காலத்தைப் போலவே இந்தக் காலத்திலும் பொறுமை, அமைதி என்பன மாமருந்துகள். அடிக்கடிக் குடித்துக் கொள்ள வேண்டும். இழந்து விட்டால்தான் அவைகளின் அருமை புரியும். பாட்டில் மருந்தை உடைத்து விடாமல் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
            கொஞ்சம் சொன்ன மாதிரியாக இருந்தாலும், பஞ்ச் டயலாக் மாதிரி தோன்றினாலும், 'பொறுமையாக இருப்பதால் எதையும் இழக்க மாட்டோம், பொறுமையை இழப்பதால் எதையும் பெறவும் மாட்டோம்' என்பது நல்லதொரு தத்துவம். கஜினி சூரியாவைப் போல் இதயத்துக்கு நேராக பச்சைக் குத்திக் கொள்ளலாம். எஸ்.கே. அதன் அவசியம் கருதி நான்குக்கு மேற்பட்ட முறை பச்சைக் குத்தியிருக்கிறான். அவன் நெஞ்சைப் பார்த்தால் எழுத்துகள் ஒன்றோடொன்று கலந்து சற்று குழம்பலாகவும், கலங்கலாகவும் தெரிகிறது என்றாலும் எஸ்.கே. வுக்கு இது வசதி நான்கைந்து முறை படிப்பதற்கு.
            யோசித்துப் பார்த்தால் கோபப்பட நிறைய இருக்கின்றன. கோபப்படாமல் இருக்க கோபப்படாமல் இருப்பது ஒன்றே வழியாக இருக்கிறது. எதிரியைக் குத்துவதாகக் கருதிக் கொண்டு தலையணையைக் குத்துவதெல்லாம் ஆபத்தான விளையாட்டு. சில நேரங்களில் தலையணையைக் குத்துவதாக நினைத்துக் கொண்டு எதிரியைக் குத்தி விடும் ஆபத்து இருக்கிறது. குத்தும் நேரத்தில் கையில் கத்தி இருந்து தொலைத்து விட்டால் நிலைமையின் விபரீதத்துக்கு எல்லை இல்லை. கொலை செய்ய தெரியாத எஸ்.கே. பின் கொலைகாரனாகி விடலாம்.
            கோபப்பட அதிகமாகும் கோபம் போல வாழ்க்கையை எதிர்ப்பு மேல் எதிர்ப்பாக எதிர்த்துக் கொண்டே இருக்க முடியாது. ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். ஏற்றுக்கொள்ளல் ஒரு நல்ல வழிமுறைதான். மனம் அமைதி அடைந்து விடுகிறது. மன அமைதி அதன் பின் பலவற்றை மாற்றி விடுகிறது. கத்தியை தக்காளி நறுக்கப் பயன்படுத்த எஸ்.கே. உட்பட அனைவர்க்கும் அதை விட சிறந்த வழி வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகில் தயாரிக்கப்பட்ட சிறந்த கத்திகள் தக்காளி நறுக்குகின்றன. தக்காளி நறுக்கும் கத்தி உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். எஸ்.கே.யின் அனுமதிக்குக் காத்திராமல் விரல் நறுக்கும் கத்திகளைத் தூக்கி எறிந்து விடலாம்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...