9 Feb 2018

குடும்பத்தைக் காரணம் காட்டி குற்றம் செய்யாதே!

குறளதிகாரம் - 5.4 - விகடபாரதி
குடும்பத்தைக் காரணம் காட்டி குற்றம் செய்யாதே!
            வாழ்வுக்குத் தேவை அஞ்சாமையா? அஞ்சுதலா?
            இதென்னக் கேள்வி? வாழ்வுக்குத் தேவை அஞ்சாமைதான் என்கிறீர்களா!
            வாழ்வுக்கு அஞ்சுதலும் தேவை.
            எதற்கு இந்த வாழ்க்கையில் அஞ்ச வேண்டும்?
            நல்வழியில் நடக்கும் போது அஞ்சக் கூடாது.
            அல்வழியில் நடப்பதற்கு அஞ்ச வேண்டும்.
            நல்வழி அல்லாத அல்வழியில் உண்டாகும் பழிக்கு அஞ்ச வேண்டும்.
            பழிக்கு அஞ்சாமல் வாழ்க்கை நடத்துவது அஞ்சாமை ஆகாது.
            அஞ்சாமல் ஊழல் புரிந்த அயோக்கியர்,
            அஞ்சாமல் கையூட்டு வாங்கிய மனச்சான்றில்லாதவர்,
            அஞ்சாமல் கொலை, கொள்ளை செய்த மாபாதகர்,
            அஞ்சாமல் பிறன்மனை நயந்த வஞ்சகர்,
            அஞ்சாமல் பொறாமை, பேராசை, முன்கோபம் கொண்டு செயல்பட்ட ஈனர்,
            அஞ்சாமல் மது, மாது, சூது என்று தன் சுய இன்பத்தை மட்டும் கருத்தில் கொண்டு குடும்பத்தையும், சமூகத்தையும் பாழ்படுத்திய வீணர்,
            அஞ்சாமல் பொதுப் பணத்தையும், பொது வளத்தையும் கையகப்படுத்திய குறுக்குப்புத்திக்காரர் -
            என்பன போன்ற பழிகள் ஏதேனும் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டும்.  பழிகளுக்கு அஞ்சும் அதே நேரத்தில் அறத்தோடு அஞ்சாமல் பொருளை ஈட்ட வேண்டும். அப்படி ஈட்டியப் பொருளாயினும் கஞ்சன் என்றோ, கருமி என்றோ, பிசினாரி என்றோ, உலோபி என்றோ பழி வந்து விடாமல் ஈட்டியப் பொருளை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொண்டு தோழமையோடும், உறவோடும் வாழ வேண்டும்.
            கஞ்சன் என்பது நான்கெழுத்து, கருமி என்பது மூன்றெழுத்து என்பதினும் இரு சொல்லுக்கும் பொருள் வேறுபாடு உண்டோ எனில் கருமி என்பதில் எழுத்தொன்று குறைவதால் கஞ்சனினும் கஞ்சன் கருமி எனலாம்.
            இல்வாழ்வை ஏற்றுக் கொண்டோர் பழி வராமல் பொருள் சேர்க்க வேண்டும். அப்பொருள் சேர்த்த பின் கஞ்சன் என்றோ, கருமி என்றோ, பிசினாரி என்றோ, உலோபி என்றோ பழி நேர்ந்து விடாமல் பகிர்ந்து வாழ வேண்டும்.
            தாம் யாருக்கும் எந்தத் தீமையும் செய்யவில்லையே, தாம் அறத்தோடு சேர்த்தப் பொருளை வைத்து தாம் வாழ்கிறோம் என்று இல்வாழ்வோர் தாம் மட்டும் சுகித்துப் பகிராமல் வாழ்வது இல்வாழ்வுக்குப் புகழ் சேர்க்காது. பழியையே சேர்க்கும். அப்படி வாழ்வது இல்வாழ்வும் ஆகாது. சேர்த்த பின் சேர்ந்துண்ணுவதே இல்வாழ்வு.
            குடும்பத்தைச் சொல்லியோ அல்லது தனக்குக் குடும்பம் இல்லை என்பதைச் சொல்லியே சொத்துக் குவிப்பதே எல்லா குற்றங்களுக்கும் காரணமாகிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாததுமல்ல, அஃது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் அறியாததுமல்ல.
            செல்வக் குவிப்பு குற்றங்களின் குவிப்பு. அறத்தோடு சேர்த்ததாயினும் முறையாகப் பங்கிடப்படாதப் பொருள் குற்றங்களின் புகலிடம். திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, அறமற்ற அதிகாரம், பொய், புரட்டு, ஏமாற்று, வஞ்சகம் எல்லாம் அங்கிருந்துதான் வேர் விட்டு கிளை பரப்பி பேராசை எனும் காற்றுக்குப் பேயாட்டம் போடுகின்றன.
            குடும்ப வாழ்க்கையில் இருப்பதைக் காரணம் காட்டி வரம்பற்ற பொருள் குவிப்பதை வள்ளுவர் ஊக்குவிக்க மறுக்கிறார். வரம்பற்ற பொருள் குவியுமானால் அதனால் நேரப் போகும் தவறுகளுக்கான பழிகளுக்கு அஞ்சி பகிர்வது உடைத்தாயின் இல்வாழ்க்கையில் எவ்வித குறைவும் எப்போதும் வராது என்பது அவர்தம் முடிபு.
            பொருள் குவிவினால் நேரப்போகும் குற்றங்களுக்கானப் பழிக்காக அஞ்சியும்,
            பொருளை வழங்காமல் பெறப் போகும் உலோபி எனும் பழிக்காக அஞ்சியும் பகிர்ந்து வாழும் வாழ்வு முறையே குறையற்ற இல்வாழ்வு முறை. இணையர் இருவரும் இணைந்து இருப்பது மட்டுமா இல்வாழ்வு, இணையர் இருவரும் இணைந்து இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வதே இல்வாழ்வு. அந்தப் பகிர்வை முதலில் உணவிலிருந்துத் தொடங்க வலியுறுத்துகிறார் வள்ளுவர். பசிதானே எல்லா குற்றங்களையும் தொடங்கி வைக்கிறது. அப்படி பசி ஒரு மனிதரிடம் குற்றத்தைத் தொடங்கி வைக்காத வகையில் பசித்த ஒரு மனிதரின் அருகாமையில் உள்ள இல்வாழ்வோர் அவரை அரவணைத்து அவரோடு பகிர்ந்து உண்டு வாழ்ந்தால், அவர் வாழ்வுக்கும் மட்டுமல்லாது எவர் வாழ்வுக்கும் எந்த குறையும் நேராது.
            பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்தாயின் வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் என்கிறது வள்ளுவம்.
            கூட்டாஞ்சோறு உண்பது போல இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து உண்டு வாழ்ந்தால் இந்த இந்திய தேசத்தில் இரவு உணவு கிடைக்காமல் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் உறங்கப் போவார்களா என்ன? உறங்கும் பொழுதிலும் அவர் வயிற்றில் உறங்காமல் இருக்கும் பசி அதற்காக அவரைக் குற்றம் செய்யத் தூண்டினால் அது அவர் பழி மட்டுமன்று, பழிக்கு அஞ்சாமல் பகிர்ந்துண்ணல் செய்யாத இல்வாழ்வோரின் பழியுமாகும்.
            மாளிகைக்கு அருகில் அதன் அடிவாரத்தில் பசியோடு ஒருவர் உறங்குவார் எனில், அம்மாளிகை பசியைத் திருடித் தின்று கொழுத்த மாளிகை என்பதில் மாற்றுக் கருத்தென்ன இருக்க முடியும்?
            பகிர்ந்துண்ணும் இல்வாழ்வோரின் பழியற்ற எளிய குடில்களே வள்ளுவரின் அவா. பகிர்ந்துண்ணாது வாழ்வோரின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் இல்வாழ்வுக்கு உதவா.
            எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தைக் காரணம் காட்டி குற்றம் செய்வதும், குடும்பத்தைச் சாக்காக வைத்து கருமித்தனம் காட்டுவதும் ஆகிய இரண்டுமே பழிகள். பழிகளைத் திறந்து விடும் வழிகள்.
            பழியற்ற அழிவற்ற வாழ்வே இல்வாழ்வு.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...