25 Feb 2018

பீடிகையின் சோடிப்புகள்

பீடிகையின் சோடிப்புகள்
            ஒரு மாதிரியான தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து விடுகிறான் எஸ்.கே. முன்பு செய்ததை விட அதே போன்ற தவறுகளைச் செய்வது தற்போது எண்ணிக்கையில் குறைவுதான். காலம் மாறியிருக்கிறது.
            சுற்றியிருப்பவர்களின் மனநிலையும் மாறியிருக்கிறது என்று நினைத்து விடுவதால் செய்த சில தவறுகளையே மீண்டும் செய்து விடுகிறான் எஸ்.கே.
            எஸ்.கே. தனக்குத் தேவையானதைத் தானே செய்து கொள்ள வேண்டும். சுற்றியிருப்பவர்களைச் செய்யச் சொல்லி தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கக் கூடாது. இதனால் அவர்கள் தங்களின் வேலைகளை ஒத்தி வைத்து விட்டு எஸ்.கே.வுக்காக வேலை செய்யும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
            எஸ்.கே.வுக்கு யாரும் எஸ்.கே.வை விட வேகமாகச் செய்து தர முடியாது. எஸ்.கே. கால் மணி நேரத்தில் செய்து விடும் வேலையை எஸ்.கே.வுக்காகச் செய்பவர்கள் அரை மணி நேரமாக்கி விடுகிறார்கள். எஸ்.கே.வுக்கு இதனால் கால விரயம்.
            பொதுவாக இணைத்துக் கொண்டு காரியங்களை முடித்துக் கொள்ள வேண்டும். தனியாக எதுவும் தேவையென்றால் எஸ்.கே.தான் செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறையானது, சரியானது, பிரச்சனைக்கும் வாய்ப்பில்லாதது.
            போகின்றப் போக்கில் அடித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் எஸ்.கே.வின் பாணி. அதில் பெர்பெக்சன் வேண்டும், போன முறை செய்ததை விட தாண்டிச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் காரியமே நடக்காது.
            ஒன்றுமே காரியமே நடக்காமல் இருப்பதைக் காட்டிலும் எதாவது சிறப்பாக செய்வது சிறப்பானதே.
            எதற்கு இந்த பீடிகை என்றால், இதுதான் அந்தச் சோடிப்புக்குக் காரணம், படித்துப் பின் தொடர்ந்து நீங்களே பாருங்கள்.
            மனம் மிகவும் அடம் பிடிக்கச் செய்யும் போதெல்லாம், கோபித்துக் கொண்டு ஓடும் போதெல்லாம், கண்டித்தால் என்ன என்று மனதைப் பார்த்தே மனதிடம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான் எஸ்.கே. இதே கேள்வியைத் திருப்பி உன்னிடம் கேட்டால் என்ன செய்வாய் என்று மனம் அவனைத் திருப்பிக் கேட்டு நிலைகுலையச் செய்திருக்கிறது.
            அந்த இடத்தில் வந்ததே கோபம். எஸ்.கே. கண்மண் தெரியாமல் தன்னைத் தானே அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான். தன்னைத் தானே கீழே பிடித்துத் தள்ளி, யார் வந்த தடுத்த போதும் தன்னைத் தானே அடித்துக் கொள்வதில் அவன் குறியாக இருந்தான்.
            தன்னை அடித்துக் கொண்டு எஸ்.கே.வுக்கு நீண்ட நாளாகிறது. அன்றுதான் மறுபடியும் அடித்தான். உண்மையில் அடிப்பதை விரும்பாதவன் அவன். ஆனால் கோபத்தில் நிகழ்ந்து விட்டது. கோபப்படுவது எளிது, பின் விளைவுகளைத் தவிர்ப்பது கடினம்தான்.
            கோபப்பட்டு எதையும் சாதிக்காத, மாறாக மோசமான பின் விளைவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.கே. ஏன் கோபப்பட வேண்டும்? அந்த உணர்ச்சியைத் திருப்தி செய்யத்தான் எஸ்.கே. கோபப்படுகிறான். அவனால் எந்த நேரத்து உணர்ச்சியையும் திருப்தி செய்ய முடியாமல் போய் விடுகிறது.
            கோபம் அதிருப்தியான நிலைக்கு இட்டுக் கொண்டே செல்லுமே தவிர குறைக்காது மற்றும் தணிக்காது. அதது அதனதன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டால் கூட அவ்வளவு மோசமாக எதுவும் நடந்து விடாது. கோபம் அவ்வளவு மோசமாக எல்லாவற்றையும் சீர்குலைத்து விடும்.
            உண்மையில் எஸ்.கே. தான் சொல்வதைக் கேட்பதில்லை என்று கோபப்படுகிறான். அவர்களது நிலைமை அதை விட பாவமாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
            அவர்களைப் போய் தான் சொல்லும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எஸ்.கே. வற்புறுத்துவது எவ்வளவு முட்டாள்தனமானது.
            எஸ்.கே. யாரையும் திருத்த வேண்டியதில்லை. திருந்துவதற்கான, திருத்துவதற்கான சூழ்நிலையைக் காலம் ஏற்படுத்தி விடுகிறது. இதற்கு ஏன் எஸ்.கே. வீண் முயற்சியைச் செய்ய வேண்டும் ஒரு ஹிம்சையான வழியைத் தேர்ந்து கொண்டு.
            உண்மையான வழிமுறையில் அகிம்சையும், சாத்வீகமும் நிறைந்திருக்கிறது.
            எல்லாம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இன்று நினைத்துப் பார்க்கும் போது நேற்று நடந்தது எவ்வளவு அபத்தமானது என்பது விளங்கும். அப்படி இருக்கும் போது தன்னைக் குறித்து எச்சரிக்கை இல்லாமல் இருக்கக் கூடாது எஸ்.கே.
            ஒவ்வொருவரும் தங்களின் மனநிலையில் மிக உறுதியாக இருப்பவர்கள். அதற்காக எதற்கும் துணிபவர்கள். அதுதான் இயற்கை. யாரையும் சம்பந்தம் இல்லாமல் மாற்ற நினைத்து மோசமான சூழ்நிலையை விதைத்து அதை அறுவடைச் செய்யும்படியான நிலைக்கு எஸ்.கே. ஆளாகி விடுவதுதான் அவனது ஜாதகம்.
            ஒரு சிறு கோபம் இயல்பான மனநிலையை அப்படியே மாற்றி விடும். சிறுகோபத்துக்கு இடம் கொடுக்காத மனம் சொர்க்கம். கோபம் என்பது திருப்தியின்மையின் விளைவு. அதாவது அப்படி நடக்கவில்லையே, அதாவது வெறொரு மாதிரி நடக்கிறதே என்ற மனநிலையின் வெளிப்பாடு அது. எது எப்படி நடந்தாலும் ஒவ்வொன்றிலும் பாடம் இருக்கிறது, எதுவும் எப்படியும் நடக்கலாம்.
            ஒருவேளை எதிரி கோபப்படுகிறான் என்று எஸ்.கே.யும் கோபப்பட்டால் எதிரி செய்யும் அதே தவற்றைத்தான் எஸ்.கே.யும் செய்கிறான் என்பதை யாரேனும் எஸ்.கே.வுக்கு யாராவது சொல்லித்தான் ஆக வேண்டும்.
            என்ன இதெல்லாம் என்று நீங்கள் கேட்கலாம்? எஸ்.கே. எஸ்.கே.வுக்குச் செய்து கொள்ளும் உபதேசம்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...