குறளதிகாரம் - 6.10 - விகடபாரதி
குடும்பத்தின்
916 தங்கம்
மங்கலம் என்பது
மஞ்சளா? குங்குமமா?
மங்கலப் பொருட்கள்
என்றே ஒரு பட்டியல் உண்டே! அதுவா?
நல்ல அணிகலம்
என்பது முத்து மாலையா? பவள மோதிரமா? தங்கத் தோடா? வைர அட்டிகையா? வெள்ளிக் கொலுசா?
மங்கலம் என்பது
மங்கலப் பொருட்களில் இல்லை. அது மனையாளின் ஆட்சியில் இருக்கிறது.
நல்ல அணிகலம்
என்பது நகைகளில் இல்லை. அந்நகைக்கும் மேலான புன்னகையைத் தரும் குழந்தைகளாக இருக்கிறது.
புத்தகத்தின்
பயன் என்பது எப்படிப் புத்தகத்தில் இல்லாமல் அதை வாசிப்பதில் இருக்கிறதோ, அப்படியே
மங்கலம் என்பது மங்கலப் பொருட்களில் இல்லாமல் அந்த மங்கலப் பொருட்களுக்கு உரித்தவளான
மனையாளின் மனைமாட்சியிலே இருக்கிறது.
மனையாளின்
மனை ஆட்சியிலே மனையின் மங்கலம் உண்டாகிறது. மனையின் மங்கலம் அவளாலே பெறப்படுவதால் குலம்
ஒளி பெறும் குல விளக்கு அவள். குடும்பம் விளக்கம் பெறும் குடும்ப விளக்கு அவள். தலைமுறையே
வெளிச்சம் பெறும் கலங்கரை விளக்கும் அவள்.
இல்லத்தின்
அணிகலம் என்பது இல்லத்தில் பதித்த சலவைக் கற்களில் தெரிவதில்லை. இல்லத்தில் வாங்கி
வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்களில் புலப்படுவதில்லை. கோடிகளைக் கொட்டிக் கட்டி
வைத்திருக்கும் அதன் மதிப்பில் அறியப்படுவதில்லை.
இல்லத்தின்
அணிகலம் என்பது குழந்தைகளே. அதுவும் நன்மக்களைப் பெற்றிருக்கும் பேறாக அமையும் போதுதான்
அது நன்கலம் எனும் நல் அணிகலமாகிறது. இல்லையேல் அக்குழந்தைகளாலே குடும்பம் போர்க்களமாகிறது.
எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே
எனும் ஒரு திரைப்பாடல் நன்மக்கள் எப்படி உருப்பெறுகிறார்கள் என்பதைச் சுட்டும்.
பெறுதலோடு
முடியாமல், பெற்ற குழந்தையை நன்மக்களாக வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பும் மனையாளுக்கு
இருக்கிறது.
வள்ளுவர்
வாக்கினிலேயே சொல்வது என்றால்,
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் தன் மகனை(மகளை)ச் சான்றோன்(சான்றோர்) எனக் கேட்ட தாய் எனும் வகையில்
அத்தாய் தன்மக்களை நன்மக்களாகப் பேணியிருக்க வேண்டும் என்ற குறிப்பே நன்மக்கள் என்பதற்கான
தெளிவு ஆகும்.
மனைக்கு மங்கலம்
ஆகும் பெண், அம்மனைக்கு நல்ல அழகு ஆகுமாறு குழந்தைகளை நன்முறையில் நெறியாள்கைச் செய்து
பேண வேண்டும். மங்கலம் என்ற பெயர் பெண்களுக்குச் சூட்டப்படுவதன் ரகசியம் இதுவாகவும்
இருக்கலாம்.
மனைமாட்சி
எனும் மங்கலமும், நன்மக்கள் எனும் அணிகலமும் மனையை அழகாக்குகிறது. அப்படி அதை அழகாக்குபவள்
மனையான் என்பதை,
மங்கலம் என்ப
மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்கிறார் வள்ளுவர்.
*****
No comments:
Post a Comment