15 Feb 2018

தெய்வங்கள் உருவாக்கப்படுகிறார்கள்!

குறளதிகாரம் - 5.10 - விகடபாரதி
தெய்வங்கள் உருவாக்கப்படுகிறார்கள்!
            ‍ஆசிரியர்கள் உருவாகிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா? என்ற வினாவுக்கு ஆசிரியர்கள் பயிற்சியினால் உருவாக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சொல்லப்படுவதுண்டு.
            தெய்வங்கள் உருவாகிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா? என்றால் தெய்வங்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம் திருக்குறளில் சொல்லப்படுகிறது.
            ஏழு கன்னிமார்களின் கதை அதைத்தான் சொல்கிறது.
            நம் நடுகல் வழிபாட்டிலிருந்து கிளைத்த சிறுதெய்வ வழிபாடு அதைத்தான் சொல்கிறது.
            இயேசு பிரானின் வாழ்க்கை அதைத்தான் சொல்கிறது.
            நபி பெருமானின் வாழ்க்கையும் அதைத்தான் சொல்கிறது.
            புத்தர் பிரானின் வாழ்க்கையும் அதைத்தான் சொல்கிறது.
            மகாவீரரின் வாழ்க்கையும் அதைத்தான் சொல்கிறது.
            தெய்வங்கள் யாரும் அமானுஷ்யமானவர்கள் இல்லை. ஆனால் அமானுஷ்யமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.
            அவர்கள் மண்ணில் வாழ்ந்தே தெய்வமாகியிருக்கிறார்கள். விண்ணிலிருந்து குதித்து வந்து தெய்வம் ஆகவில்லை.
            அநேக மதங்களின் தெய்வங்களின் கதைகள் கூட மனிதர்களோடு வாழ்ந்த கதையைத்தான் பேசுகின்றன. அவர்கள் மனிதர்களாக வாழ்ந்தவர்களே. ஒரு புனிதத் தன்மையை ஏற்றுவதற்காக மனிதரிலிருந்து தோன்றிய தெய்வங்களை மாற்றி, தெய்வங்களே மனிதர்களை உருவாக்கினார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
            குரங்கிலிருந்து மனிதன் உருவானவன் என்பது போலத்தான் மனிதரிலிருந்து உருவானவர்களே தெய்வங்கள். மனிதப் பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டத்தை நோக்கிக் கொண்டு சென்ற மனிதர்கள் தெய்வங்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
            மற்றபடி அவதாரங்கள் என்பதும், அதிசயங்கள் என்பதும் அவர்களை மனிதர்களினின்று மாறுபட்ட உயர்வானவர்களாகக் காட்ட மேற்கொள்ளப்பட்ட மனிதப் புனைவின் வடிவங்களே.
            வார்டு கவுன்சிலர்களையே எங்கள் இமயமே, வருங்கால தமிழகமே என்று மனிதர்கள் புகழும் போது, வியத்தகுச் சாதனைகளைப் புரிந்தவர்களைத் தெய்வங்களாகக் கொண்டாடினார்கள் என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா என்ன?
            தென் தமிழக மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். குஷ்பூ என்ற திரைநாயகிக்குக் கோயிலே கட்டப்பட்டிருக்கிறது. என்.டி.இராமாராவ் ஆந்திராவில் தெய்வமாகவே வணங்கப்பட்டிருக்கிறார். பாபா படம் பார்த்து விட்டு இரஜினியைப் பாபாவின் அவதாரமாகக் குறிப்பிட்ட ரசிகர்களைப் பார்த்திருப்பீர்கள்.
            இப்படித்தான், இப்படியேத்தான் தெய்வங்கள் உருவாக்கப்படுகிறார்கள். இப்படி தெய்வம் உருவானச் சூத்திரம் விளங்கி விட்டால் அனைவரும் தெய்வத்துக்கான பதவிக்கு விண்ணப்பித்து விடுவார்கள் என்றுதான் தெய்வம் என்ற கருத்தாக்கம் அமானுஷ்யத்துக்குள் அமுக்கப்பட்டு கண்மூடித்தனமாக வணங்கும் பழக்கம் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
            அப்படியெல்லாம் இல்லை - மனிதக் குலத்தைக் காப்பவைகளே தெய்வங்கள் என்றால், நெடுஞ்சாலை விரிவாக்கங்களின் போது இடிபடும் ஆலயங்களையே அந்தத் தெய்வங்களால் காக்க முடியவில்லையே! ஆலயங்களில் நடைபெறும் திருட்டுகளையே அந்தத் தெய்வங்களால் தடுக்க முடியவில்லையே! அதற்கு மேல் சில வகை ஆலயங்களில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் சொல்வதற்கில்லை.
            நடப்பதெல்லாம் மனித வேலைகளே. அதில் செய்யப்பட்ட புனித வேலைகளே தெய்வ சக்தி என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்ற பயமுறுத்தும் கருத்தாக்கம்.
            மனிதரில் மகத்தானவர்,
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்,
            அவரைச் சற்று உயர்த்தி கூற வேண்டும் என்பதற்காக
            வான் உறையும் தெய்வமாக வைக்கப்பட்டார் என்பதுதான் உண்மை.
            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று இதை மிக அழகாக தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.
            இக்குறள் இல்வாழ்க்கையின் இறுதி குறளாக வைக்கப்பட்டிருப்பதை நோக்கும் போது இல்வாழ்வை நல்வாழ்வாகக் கொண்டு வாழ்பவர்கள், வாழ்ந்து மறைந்த பின்னும் என்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் வகையில் வான் உறையும் தெய்வங்களாக வைக்கப்படுகிறார்கள் என்பது தெளிவுபடும்.
            நம் முன்னோர்களை நாம் தெய்வங்களாகத்தானே வைத்துள்ளோம். அப்படியானால் தெய்வங்கள் எல்லாம் நம் முன்னோர்கள்.
            வாழ்வை ரசித்து ருசித்து வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்களே நம் தெய்வங்கள். நாம் வணங்கும் அத்தனை தெய்வங்களும் நம் முன்னோர்களே.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...