15 Feb 2018

புத்தகக் காட்சி பூமியின் வித்தகக் காட்சி

புத்தகக் காட்சி பூமியின் வித்தகக் காட்சி
            ஆயிரம் புத்தகங்களை வாசித்தவர் யாரோ அவரே என் வழிகாட்டி என்கிறார் ஜூலியஸ் சீசர்.
            புத்தகங்கள் வாசிப்பதற்காகவே லண்டனில் நூலகத்துக்கு அருகே குடியேறினார் கார்ல் மார்க்ஸ்.
            ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகின்றன என்றார் விவேகானந்தர். இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு டாஸ்மாக்கின் கதவுகள் கூட மூடப்படலாம்.
            எவ்வளவோ அரசியல் பணிகளுக்கும் மத்தியிலும் ஒவ்வொரு நாளும் படிக்காமல் உறங்கச் சென்றதில்லை ஜவஹர்லால் நேரு.
            ஒரு புத்தகத்தைப் படித்து முடிப்பதற்காக அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப் போடுமாறு மருத்துவர்களிடம் மன்றாடியவர் அண்ணா.
            நூலகம் இல்லாத ஊரை நான் ஓர் ஊராகவே மதிப்பதில்லை என்றார் லெனின்.
            உங்களிடம் கோடி ரூபாய் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதில் சொன்னார் காந்தியடிகள்.
            நான் தெரிந்து கொள்ளாத பல புதிய விசயங்கள் புத்தகத்தில்தான் இருக்கின்றன என்கிறார் ஆபிரஹாம் லிங்கன்.
            மெய்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய் என்கிறார் பாரதி.
            போர்க் களத்துக்குச் சென்ற போதெல்லாம் ஒடிசி, இலியட் என்ற இரண்டு நூல்களைத்தான் தனக்குத் துணையாக எடுத்துச் சென்றார் அலெக்ஸாண்டர்.
            ஜூன் டொமினிக் பாபி என்பவர் பக்கவாதத்தால் இடது கண் இமை தவிர உடல் முழுவதும் செயலிழக்க, இடது கண் இமைத்தலைக் கொண்டு எழுத்துகளை அடையாளப்படுத்தி தி டைவிங் பெல் அன்ட் தி பட்டர்பிளை என்று ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
            புத்தகங்களால் மொழியைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள் இருவர்.
            ஒருவர் திருவள்ளுவர். தன் திருக்குறளால் தமிழ் மொழியை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
            இன்னொருவர் ஷேக்ஸ்பியர். தன் நாடகப் புத்தகங்களால் ஆங்கில மொழியையேத் தூக்கிப் பிடித்தவர்.
            கற்க கசடற என்றும்,
            கற்றனைத்து ஊறும் மணற்கேணி என்றும்,
            தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவார் என்றும் கூறி,
            யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்று புத்தகங்களைக் கற்காமல் ஏன் இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார் வள்ளுவர்.
            ஆங்கிலத்தில் Knowledge is power என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அறிவைப் பெறுவதற்கான வாயிலே புத்தகங்கள்.
            அவ்வகையில் புத்தகக் கண்காட்சி ஒவ்வொன்றும் பூமியின் வித்தகக் காட்சி என்றே சொல்ல வேண்டும்.
            உலகை மாற்றிய உன்னத அறிவு சேகரங்கள்தான் புத்தகங்கள்.
            இதுவரை புத்தகங்கள் குறித்த பெரியோர்களின், அறிஞர்களின் அனுபவ மொழிகளைச் சொன்னேன்.
            அத்துடன் என்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
            படிப்பில் ஆர்வமில்லாத ஒரு மந்தமான பிள்ளையாகவே எனது பள்ளிப் படிப்புத் துவங்கியது. அப்போது என் அம்மா எனக்கு நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். எல்லாம் நாட்டுப்புறக் கதைகள். அதில் கொஞ்சம் இதிகாசக் கதைகளும் உண்டு.
            அப்போது என் அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்த, 'தேன்மொழி நல்லப் பெண், தினமும் பள்ளிக்குச் செல்வாள், பாடங்களைப் படிப்பாள்' என்ற வாசகம் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. பிறகு சுயமாக நான் படிக்கத் தொடங்கிய போது புத்தகங்கள் எனக்குத் தேன்மொழியாய் இனிக்கத் தொடங்கின.
            நான் நன்றாகப் படிக்கத் துவங்கியது எனது நான்காம் வகுப்பிலிருந்துதான் ஆரம்பமானது. அதற்குக் காரணம் அப்போதுதான் வாசிப்பு எனக்குக் கை கூடியது. நான் கதை புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதற்காகவே வாசிக்க ஆர்வமாகக் கற்றுக் கொண்டு புதுப் புது புத்தகங்களாகப் படிக்கத் தொடங்கினேன். அந்த ஆர்வமே பாடப்புத்தகங்களையும் படிக்கத் தூண்டி மதிப்பெண்களை வாங்கித் தந்தது.
            அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் எனக்கு என் அம்மா சொன்னதைப் போல நிறைய கதைகளைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
            இப்படி கதைகள் கேட்டு, அக்கதைகளை நானாகப் படிக்கப் போய், புத்தகத்தால் சிறை பிடிக்கப்பட்ட அனுவம்தான் என் வாசிப்புத் துவக்கம்.
            புத்தக வாசிப்பு என்பது பல புத்தகங்களை வாசிப்பதுதான். எனக்கு என்னவோ இன்றும் கதைப் புத்தகங்கள் வாசிப்பதே புத்தக வாசிப்பாக இருக்கிறது. அப்படி உங்களுக்கு ஆர்வமான ஒன்றில் தொடர்ந்து புத்தகங்களை வாசிப்பதை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
            நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கணித வகுப்பில் மறைவாகக் கதைப் புத்தகம் ஒன்றைப் பாடப்புத்தகத்துக்குள் வைத்து வாசித்து, ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டி, அதற்காக வகுப்பறைக்கு வெளியே முட்டிப் போட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. அப்படி ஒரு மாணவன் எனக்குக் கிடைப்பானா என்று நான் தேடிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன். பள்ளி அளவிலான புத்தகக் கண்காட்சிகள் இல்லாததுதான் காரணமோ என்று யோசித்துப் பார்க்கிறேன்.
            ஒரு பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட்டில் புத்தகங்களுக்கான ராக்குகள் இருக்கின்றன. ஆனால் பினாயில் வைக்கப்பட்ட ராக்குகளின் அருகில் உள்ள கூட்டம் கூட புத்தக ராக்குகளின் அருகில் பார்க்க முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். பள்ளி அளவிலிருந்தே புத்தகங்களை வாங்கும் ஒரு பழக்கத்தை உருவாக்காததுதானோ என்று எண்ணுகிறேன்.
            தற்போது திருவாரூரில் தெற்கு வீதியில் ஒரு புத்தகக் கண்காட்சி போட்டு இருக்கிறார்கள். ஒரு தேநீர்க் கடையில் இருக்கும் கூட்டம் கூட அங்கு இல்லை. அதற்காகப் படிப்பு குறைந்து விட்டதாக பொருள் இல்லை.
            என்னைக் கேட்டால் நீங்கள் நிறைய படிக்கிறீர்கள். நாங்கள் படித்ததை விட எல்லாம் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் பெரிது பெரிதாக இருக்கின்றன. நாங்கள் கையடக்கமான புத்தகங்களில் படித்தோம். நீங்கள் முதுகு அடக்கமான அளவுக்குப் புத்தகங்கள் படிக்கிறீர்கள்.
            ஆனால் நீங்கள் நிறைய படிக்கவில்லை.
            இதென்ன முரண்பாடு?
            நாங்கள் நிறைய படிப்பதாகக் கூறி விட்டு, நாங்கள் நிறைய படிக்கவில்லை என்று கூறுகிறேனே என்று கேட்கிறீர்களா?
            பாடப் புத்தகங்களை நிறையப் படிக்கிறீர்கள். அதைத் தாண்டி இந்தத் தலைமுறையாகிய நீங்கள் வேறு எந்தப் புத்தகங்களையும் நிறைய படிக்கவில்லை என்பதுதானே உண்மை.
            பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்கள் எப்போது நிறைய படிக்கிறீர்களோ அப்போதுதான் நீங்கள் நிறைய அறிவைக் கண்டடைய முடியும். வீட்டுத் தேனை விட காட்டுத் தேனின் ருசி அதிகம் என்பதைப் பாடப்புத்தகங்களைத் தாண்டி பல புத்தகங்களைப் படிக்கும் போதுதான் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
            இன்னொன்று,
            நீங்கள் மனப்பாடத்தைத் தாண்டி, மனப்பாடம் எனும் சிறையைத் தாண்டி விடுபட்டு புதிய வானில் சிறகடிக்க வாசிப்புதான் வழி.
            அறிவு என்பது என்ன?
            நீங்கள் சொற்களையும், வாக்கியங்களையும் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அது மனனம், செய்தி அறிதல் என்பதை நீங்களாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வாசிப்பு அனுபவம்தான் வழி.
            அறிவு என்பது அறிவை ஆராய்வது. எதெல்லாம் அறிவு என்று சொல்லப்படுகிறதோ அதையெல்லாம் ஆராய்ந்து அறிவதுதான் அறிவு.
            எதையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் அறிவு. ஒவ்வொரு புத்தகமும் மெளனப்புரட்சியாக அந்த கேள்விக்கு உட்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன.
            நீங்கள் வாழ்க்கை முழுவதும் நண்பர்களையும், புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
            நண்பர்களைச் சேர்த்தவர்கள் புத்தகங்களைச் சேர்க்காமல் இருப்பதும், புத்தகங்களைச் சேர்த்தவர்கள் நண்பர்களைச் சேர்க்காமல் இருப்பதும் தவறு.
            நண்பர்களைச் சேர்த்து புத்தகங்களைச் சேர்ப்பது எதற்காக என்றால் நட்பு சுருங்கி விடக் கூடாது என்பதற்காகத்தான். புத்தக அறிவினால் விரிந்த நட்பே வாழ்க்கை முழுவதும் குறுகி விடாமல், சுயநலத்தால் இறுகி விடாமல் தொடர்கிறது.
            புத்தகங்களைச் சேர்த்து நண்பர்களைச் சேர்ப்பது எதற்காக என்றால் படித்த அறிவை பகிராமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக.
            புத்தகமா? நண்பனா? யார் சிறந்தவர் என்று கேள்வி எழுந்தால், தயங்காமல் புத்தகமே சிறந்த நண்பன் என்று சொல்லுங்கள்.
            வாழ்நாள் முழுவதும் உங்களோடு ஒட்டியே உங்களோடு மட்டும் இருக்க எந்த நண்பன் சம்மதிப்பான்? புத்தகம் எனும் நண்பன் அதற்குச் சம்மதிப்பான். அந்த வகையில் நண்பனுக்கு நண்பனாக, நண்பனை விட மேலானவனாக இருப்பது புத்தகங்கள்.
            புத்தகங்கள் தமிழாக, ஆங்கிலமாக, கணக்காக, அறிவியலாக, சமூகவியலாக உங்கள் பார்வையில் பிரிந்து கிடக்கலாம். உங்களுக்குப் பிடித்தமான ஒன்றில் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் நிறைய வாசியுங்கள். அறிஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் அப்படித்தான் உருவாகிறார்கள்.
            நீங்களும் அப்படி உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு புத்தகக் காட்சி ஒவ்வொன்றையும் கண்ணே போல், பொன்னே போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
            உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருந்தாலும் கதைப் புத்தகங்களை எப்போதும் படியுங்கள். பல உன்னதங்கள் அதில் ஒளிந்து கிடக்கின்றன.
            அப்படி நீங்கள் வாசிக்க வேண்டும் என நான் நினைக்கும் சில புத்தகங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
            1. பஞ்ச தந்திரக் கதைகள்
            குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொன்ன டார்வினின் கூற்றை மெய்பிப்பதைப் போல மிருகங்களுடன் கூடிய கதைகள். மனிதனுக்குள் இருக்கும் மிருகக் குணத்தை மிருகங்களை வைத்தே கதை கதையாக வடித்தெடுத்த கதைகள்தான் பஞ்ச தந்திரக் கதைகள். பின்னாட்களில் நீங்கள் விசித்திரமான மனிதர்களைச் சந்திக்கும் போது இக்கதைகளை முன்னரே படித்திருந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்பட மாட்டீர்கள்.
            2. ஈசாப் நீதிக் கதைகள்
            அடிமையாக இருந்த ஒருவர் தன் அறிவால் ஆளுமை கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கும் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள். நிலைமை எப்படி இருந்தாலும், சூழல் எப்படி இருந்தாலும், உலகமே உனக்கு எதிராக இருந்தாலும் அறிவால் எதையும் மாற்ற முடியும் என்பதை இக்கதைகளைப் படிக்க படிக்க நீங்கள் உணர்வீர்கள்.
            3. தெனாலிராமன் கதைகள்
            சாமர்த்தியம், சாதுர்யமான அறிவோடு அதை எப்படி நகைச்சுவையாக வெளிப்படுத்தி அதிகாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை நைச்சியமாக ஈர்த்து காரியம் சாதிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கதைகள்.
            4. முல்லா கதைகள்
            ஒரு மனிதன் எப்போதும் புத்திசாலியாகக் காட்சியளிக்கக் கூடாது. தேவையான போது முட்டாளாக காட்சியளிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கதைகள், முட்டாள்தனத்தைக் காட்டும் இடத்திலும் தான் ஒரு புத்திசாலி என்பதை எப்படி நிலைநாட்ட வேண்டும் என்பதைச் சிரிக்க சிரிக்க சிந்திக்க சிந்திக்கச் சொல்லித் தரும் கதைகள்.
            5. அக்பர் - பீர்பால் கதைகள்
            பேரதிகாரம் மிக்க ஆளுமையோடும் நட்பாக பழக முடியும், நல்லவற்றை நாசுக்காக எடுத்துச் சொல்லி நல்லவற்றை நிறைவேற்ற முடியும் என்பதைச் சொல்லும் கதைகள்.
            இப்படி கதைகளின் வழியே, வாசிப்பின் வழியே நீங்கள் பழைய உலகத்தைத்தான் வாசிக்கிறீர்கள். ஆனால் பாருங்கள் அது உங்களுக்குள் அது புதிய உலகத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. அந்தப் புதிய உலகைக் காண நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பை உங்கள் தாயைப் போல நேசிக்க வேண்டும்.
            பிறந்து பழைய மனிதனாகி விட்ட நீங்கள் மீண்டும் புதிய மனிதனாய்ப் பூமிக்குத் திரும்ப புத்தக வாசிப்பு உதவும். வாசியுங்கள். வாசியுங்கள். வாசித்துக் கொண்டே இருங்கள். புதிய மனிதனாக ஆகிக் கொண்டே இருங்கள். தினம் தினம் துலக்கி வைக்கும் பாத்திரம்தானே பளிச்சென்று இருக்கிறது. அது போல தினம் தினம் வாசிக்கும் மனிதனே புதிய மனிதனாக இருக்கிறான். நீங்கள் புதிய மனிதனாகத் துலங்கப் போகிறீர்களா? பழைய மனிதனாகவே விளங்கப் போகிறீர்களா? என்ற முடிவு உங்கள் கையில். உங்கள் கையில் ஒரு புத்தகத்தை ஏந்தி நீங்கள் ஏன் ஒரு புதிய மனிதனாகவே இருக்கக் கூடாது!
 (15. 02. 2018 (வியாழன்) அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தென்குவளவேலியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கட்டுரையாற்றியது)
*****

2 comments:

  1. Replies
    1. நன்றிகளும் வாழ்த்துகளும் தங்களுக்கு உரித்தே ஆகட்டும் ஐயா!

      Delete

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...