பயமாக இருந்தால் இதைப் படிக்காமல் விட்டு
விடுங்கள்!
எஸ்.கே. ஒரு நெடும்பயணம் மேற்கொண்டான்.
மாதத்தின் இரண்டாம் தேதி கிளம்பி பனிரெண்டாம் தேதி மீண்டான். உடலில் ஒரு தளர்ச்சி ஏற்பட்டிருந்தது.
தூக்க கலக்கமாக இருந்தது. மனதிலும் ஒரு தளர்ச்சி இருந்தது. சிந்திக்கும் திறன் மட்டுப்பட்டுப்
போயிருந்து. ஏற்கனவே சிறிய மூளையை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தவன் இதனால் மிகவும்
தடுமாறிப் போனான்.
உணவு பிடிக்காமல் போனது. அவனுக்கு உணவு
பிடிக்காமல் போனதற்கு - உணவை அக்கறையில்லாமல்,
சுவையில்லாமல் சமைப்பதாக குடும்ப உறுப்பினர்களைத் திட்டித் தீர்த்தான்.
இனிப்பான பண்டங்களை விரும்பியவன் அதை வாங்கிச்
சாப்பிட ஆரம்பித்தான். குறிப்பாக அல்வா என்றால் ஒரே நேரத்தில் அரை கிலோ என்ற அளவில்.
இப்படி ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என்று மருந்து எடுத்துக் கொள்ளும் முறையைப்
போல் நான்கு முறை சாப்பிட்டு இரண்டு கிலோ அல்வாவைத் தீர்த்துக் கட்டினான்.
எவ்வளவு தின்று தீர்த்தும், எல்லாரையும்
திட்டித் தீர்த்தும் வேலைகளைச் சரியாக செய்ய முடியவில்லை அவனால். மனதுக்குள் ஒரு சலிப்பு
தோன்றியது. எதையும் ஒரு கோர்வையாக நினைவில் வைத்துக் கொள்ளா முடியாமல் சிரமப்பட்டான்.
எல்லாம் மறந்து போனது. மறதி என்றால் சிறுநீர் கழிக்க மறந்து போனவனாக படுக்கையிலேயே
கழித்து விடும் நிலைமை வரை சென்றது.
எஸ்.கே. தன் சிந்தனையைக் குறித்து வெளியே
சொல்லும் முயற்சியில் மிக தீவிரமாக இருந்தான். இப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது
போன்றதான ஒரு நிலையிலும் சிந்திப்பதை கை விட விரும்பாதவனாக இருந்த அவன் சிந்தனையில்
தோன்றுவதெல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. நூறு சிந்தித்தால் ஒன்று வித்தியாசமாக இருந்தது.
பின்னர் அதுவும் நூற்றில் ஒன்று போல தோற்றம் தந்தது.
சிந்தனையைப் பொருத்த வரையில் மேலும் எஸ்.கே.வுக்கு
தன்னைப் போல எத்தனை பேர் சிந்திக்கின்றனரோ என்ற குழப்பமும் இருந்தது. அவர்களைப் போல
சிந்தித்து அவர்களை நகலெடுத்து விட்டதான ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடுவோமா என்ற
நடுக்கமும் இப்போது எஸ்.கே.வைப் பற்றிக் கொண்டது.
இப்படியெல்லாம் சிந்தித்தாலும் அந்தச்
சிந்தனை ஏற்கப்பட வேண்டுமே என்ற கவலையும் எஸ்.கே.வைப் பீடித்து வாட்டியது. மக்கள் ஏற்பதை,
அறிவு ஜீவிகள் ஏற்க வேண்டும். அறிவு ஜீவிகள் ஏற்பதை மக்களும் ஏற்க வேண்டும். இரண்டும்
எப்போதும் எகனைக்கு மொகனை. நீரை ஊற்றி நெருப்பைப் பற்ற வைப்பதோ, நெருப்பை எடுத்துப்
போட்டு நீரைக் குளிர்விப்பதோ எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மக்களையும், அறிவு ஜீவிகளையும்
ஒரு கோட்டில் கொண்டு வருவது அவ்வளவு கஷ்டம்.
எஸ்.கே.யின் சிந்தனைச் சவால் இங்குதான்
அல்லோகலப்பட்டது. அறிவு ஜீவிகள் பரிந்துரைப்பதை மக்கள் ஏற்க வேண்டும். மக்கள் ஏற்றதை
அறிவு ஜீவிகள் குறைந்தபட்சம் அசட்டைச் செய்யாமல் சட்டையாவது செய்ய வேண்டும். இவையெல்லாம்
நடக்க வேண்டும் பஞ்சும் நெருப்பும் சேர்ந்து பற்றிக் கொள்ளாமல் இருப்பது போல.
கடைசியில் இருக்கின்ற உடல்நிலைக்கும்,
சிந்தனை நிலைக்கும் ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் எஸ்.கே. பின்வரும் சுய
பிரகடனத்தைச் செய்வதென முடிவுக்கு வந்தான்.
அச்சுயபிரகடன ஷரத்துகளாவன -
ஆத்ம திருப்திக்காகச் சிந்திப்பது. சிந்தனை
சரிவரவில்லையென்றால் எதிரில் இருப்பவர் மேல் விழுந்து விடாத வண்ணம் சர்வ ஜாக்கிரதையாகக்
கழற்றி வீசுவது.
சிந்தனைக்கு ஓர் அங்கீகாரம் வேண்டும் என்று
சிந்திக்க ஆரம்பித்தால், ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற சிந்தனையாளர்கள் எங்கே போய் கடை
விரிப்பார்கள் என்பதை உணர்ந்து அமைதி காப்பது.
நிறைய சிந்திக்க வேண்டும். தேர்வு செய்யப்படாத
சிந்தனைகளுக்கு முறையாக பாடை கட்டி மரியாதை செய்வது. இறந்து போனச் சிந்தனைகள் ஆவியாக
உலவும் பேராபத்தை இதன் மூலம் தவிர்ப்பது.
சிந்தனைகளைப் பார்வைக்கு வைப்பது. அதற்காகவேனும்
சிந்திக்கத்தான் வேண்டும். பார்வைக்கு வைக்க வேண்டியது கடமை. பார்க்காமல் போகுபவர்களைக்
குறித்து அடுத்து நிறைய சிந்திக்க வேண்டியது அவசியம்.
எல்லா சிந்தனைகளும் கற்பனை எனும் மாபெரும்
சக்தியால் புதுமை அடைகின்றன. மாறுபாடும் அடைகின்றன. மாறுபட்ட பிரமாண்டங்களை கற்பனை
மூலம் உருவாக்க முடியும். பார்வைகள்தான் அதைத் தீர்மானிக்கின்றன. அதிசயமாக அது பேன்டசியாகவும்,
பரவசமாகவும் உரு கொள்ளலாம். அது அற்புதமான ரசவாதம் என்பது கற்பனை செய்பவர்களுக்குப்
புரியும். முடிவில் அது சிந்தனையா, கற்பனையா என்ற குழப்பம் இருக்க வேண்டும். நெருங்க
முடியாத பாதுகாப்பு கவசத்தை அது தரும்.
நிறைய சிந்தனைகளை இழுத்துப் போட்டுக்
கொள்ள வேண்டும். இன்ன பிற முன்னவர்களின் சிந்தனைகளையும் பதிவேடுகளாக்கிப் பராமரித்து
உற்றுநோக்க வேண்டும். இடையிடையே பழுதுகளையும் பார்க்க வேண்டும். பழுது பார்க்கும்
போதுதான் சேத விவரம் தெளிவாகத் தெரிய வரும்.
ஷரத்து விவரங்கள் இத்துடன் நிறைவு பெற,
சம்பிரதாயப்படியான ஒரு முடிவுரையாக,
வெளியே ஊர் சுற்றி வருவது அப்படி ஒரு பழுது
பார்க்கும் முயற்சி. நெடும்பயணம் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அந்தப் பழுதின் விவரங்களைத்தான்
எஸ்.கே. துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளான். இப்போது புரிந்திருக்குமே நெடும்பயணத்தால்
நேர்ந்த பழுதல்ல அவைகள் என்று.
*****
No comments:
Post a Comment