12 Feb 2018

துறவுக்கு இரண்டாம் பரிசு கொடுக்கலாம்!

குறளதிகாரம் - 5.7 - விகடபாரதி
துறவுக்கு இரண்டாம் பரிசு கொடுக்கலாம்!
            குரங்கிலிருந்து தோன்றியது மனித இனம் என்கிறார் டார்வின். பரிணாம வளர்ச்சி முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறது. பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படை உயிர்கள் மேற்கொள்ளும் முயற்சியே.
            முயற்சி பரிணாமத்தை மாற்றி அமைக்கிறது.
            குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் நிமிர முயன்றிருப்பான். அந்த முயற்சியின் விளைவாக நிமிர்ந்து நடை பயில ஆரம்பித்திருப்பான். நடப்பதிலிருந்த ஓட முயன்றிருப்பான். வேகம், வேகம் இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்று முயன்றிருப்பான். அப்போது சக்கரத்தைக் கண்டுபிடித்து வாகனத்தை உருவாக்கியிருப்பான்.
            நடந்து, ஓடி, வாகனத்தில் விரைவாகக் கடந்த மனிதன் நீரில் நீந்த முயன்றிருப்பான். அந்த முயற்சியின் விளைவாக கட்டுமரம், படகு என்று முன்னேறி கப்பல் வரை வந்து வந்திருப்பான்.
            நிலத்தில் விரைந்து, நீரில் விரைந்து அடுத்து வானில் பறக்க முயன்றிருப்பான். விமானத்தை உருவாக்கி வானில் பறந்திருப்பான்.
            வானம் போதாது, இன்னும் மேலே மேலேப் போக வேண்டும் என்று முயன்றிருப்பான். சந்திரன், செவ்வாய் இன்னும் சூரியனைத் தாண்டிச் செல்லும் ராக்கெட்டுகளை உருவாக்கியிருப்பான்.
            இப்படி மனித குல முன்னேற்றத்தின் வரலாறு மனிதர்தம் முயற்சியின் வரலாறே.
            இப்படி மனிதன் முயன்று கண்டுபிடித்ததில் சிறந்தது எது? அதாவது தலையாது எது?
            நெருப்பைக் கண்டுபிடித்ததா?
            சக்கரத்தைக் கண்டுபிடித்ததா?
            பயிர்த் தொழில் செய்வதைக் கண்டுபிடித்ததா?
            வாகனங்களைக் கண்டுபிடித்ததா?
            கப்பல்களையும், விமானங்களையும், ராக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததா?
            இருந்த இடத்திலிருந்தே ஒட்டு மொத்த உலகத்தையும் உள்ளங்கைக்குள் கைக்குள் கொண்டு வரும் தகவல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததா?
            மனித முயற்சியில் சிறந்தது அதாவது தலையாயது எது?
            மனித வாழ்க்கையை மனித வாழ்க்கையாக மாற்றியது எதுவோ அதுவே சிறந்த முயற்சியாகும்.
            மனித வாழ்க்கையை மீண்டும் மிருக வாழ்க்கையாகவோ, பயனற்ற இயந்திர வாழ்க்கையாகவோ மாற்றும் எந்த முயற்சியும் சிறந்த முயற்சியாகாது.
            மனித வாழ்க்கை மனித வாழ்க்கையாக இன்னும் இந்தப் பூமியில் எஞ்சியிருப்பதற்குக் காரணம் இல்வாழ்க்கையே.
            இல்வாழ்க்கையே அன்பை விதைக்கிறது. அறத்தை வலியுறுத்துகிறது. பகிர்ந்து வாழ, கலந்து வாழ பயிற்றுவிக்கிறது. மனதை மூடியுள்ள மிருகத் தோலை உரித்து மனிதத் தோலைப் போர்த்துகிறது. இயந்திர வாழ்க்கை முறைக்கு இந்த வாழ்க்கை முறை மாறும் போதெல்லாம் மடை மாற்றி மனித வாழ்க்கை முறைக்கு மாற்றுகிறது.
            மனிதன் முயன்று கண்டுபிடித்த அனைத்து முயற்சிகளிலும் சிறந்த முயற்சி, சிறந்த கண்டுபிடிப்பு இல்வாழ்க்கையே ஆகும். அதற்கு நிகரான கண்டுபிடிப்பு இனி கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பில்லை.
            இல்வாழ்க்கையே சிறந்த முயற்சியாகும். இல்வாழ்க்கைக்குரிய இயல்புகளான ஓம்பல், அன்பு, அறம் கொண்டு வாழும் இணையரே முயற்சியாளர்களில் எல்லாம் சிறந்த முயற்சியாளர் ஆவார். இல்வாழ்வு வாழும் இணையர் இருவரின் இனிய முயற்சியை துறவியராக இருப்பினும் முந்த முடியாது.
            எவ்வளவு கடினமாக முயன்று துறவின் மூலம் வரங்கள், சக்திகள், அசாத்தியங்கள், சித்திகள், முக்திகள் பெற்றாலும் அவைகள் எல்லாம் இல்வாழ்வோரின் இனிய இல்லற முயற்சிக்குப் பின்னரே வைக்கப்படும்.
            இல்வாழ்வே சக்தி. இல்வாழ்வே வரம். இல்வாழ்வே சாத்தியமும் அசாத்தியமும். இல்வாழ்வே சித்தி. இல்வாழ்வே முக்தி. இல்வாழ்வே யாவும். இல்வாழ்வே இவ்வுலகம்.
            முயல்வோரில் முதன்மையானவர் இல்வாழ்வாரோ? துறவியரா? என்றால் முதன்மையானவர், தலையாயவர் இல்வாழ்வோரே. அவருக்கு அடுத்த இரண்டாமிடமே துறவியர்க்கு.
            அனைத்துச் சிறப்பும், அனைத்துப் புகழும், அனைத்துப் பெருமையும், அனைத்துப் பாராட்டும், அனைத்து வாழ்த்தும் இல்வாழ்வோர்க்கே முதலில் வழங்கப்பட்டு எஞ்சியதே மற்றோர்க்கு வழங்கப்படும்.
            இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை என்கிறார் வள்ளுவர்.
            வள்ளுவமே தலை என்று சொல்லி விட்டப் பிறகு,
            தலையிருக்க வால் ஆடலாமா?
            எல்லாவற்றினும் சிறந்த இல்வாழ்க்கை தலையென இருக்க, அதன் எச்சமாய் கருதப்படும் துறவு வாழ்க்கை சிறந்ததென ஆட்டம் போடலாமா?
            வாலிழந்த பல்லி வாழ்ந்து விடும். தலையிழந்த பல்லி மாண்டு விடும்.
            துறவு வாழ்க்கை இல்லாது போனாலும் உலகம் நிலைத்து விடும். இல்வாழ்க்கை இல்லாது போனால் உலகம் அழிந்து விடும்.
            இல்வாழ்க்கையே முதன்மை. பிற வாழ்க்கை அதன் அடுத்த நிலைமை.
            இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் என்பது போல, இவ்வாழ்வில் முதன்மையானவர் இல்வாழ்வோர். இவ்வுலகில் முயல்வோரில் எல்லாம் தலையாயோர் இல்வாழ்வோர்.
            இவ்வாழ்வுக்கும், இவ்வுலகுக்கும் முதலானோர், முதன்மையானோர் இல்வாழ்வுக்குரிய இயல்புகளோடு இல்வாழ்வு நடத்தும் இல்வாழ்வோரே.
            முதல் பரிசுக்கான எல்லாப் புகழும் இல்வாழ்வோர்க்கே.
            ஆக,
            எப்படிப் பார்ப்பினும் இரண்டாம் பரிசைத் துறவுக்குக் கொடுக்கலாம். முதல் பரிசு இல்வாழ்வுக்கே உரியது.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...