3 Feb 2018

புதிய கும்மிப் பாட்டு

புதிய கும்மிப் பாட்டு
            ஒரு பலனை அல்லது ஒரு மன திருப்தியை எதிர்பார்க்கும் மனநிலைதான் வாழ்க்கை. அந்த மனநிலையே நம்மைத் தீர்மானிப்பதாக, நம் வாழ்வை தீர்மானிப்பதாக மாறி விடும் அபத்தம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
            இப்படி எழுதி விட்டு, தான் எதையும் எண்ணாமல், எதையும் எதிர்பாராமல் எழுதித் தள்ளிய கடந்த காலத்தை நினைவில் கடந்து பார்த்தான் எஸ்.கே. உற்சாகமாக எழுதிய அந்த நாட்களை காசுக்காக எழுதும் இந்த நாளில் மீட்டெடுத்து விட முடியாத என அவனுக்குப் புரிந்தது.
            நீங்கள் எடுத்துக் கொள்கிற அளவில், கொண்டு போகிற அளவில்தான் விசயங்கள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி ஒரு செயலின் விளைவு அமையாவிட்டாலும், ஒரு செயலைச் செய்வதன் மூலம் ஏதோ ஒரு விளைவு ஏற்படவே செய்யும்.
            இந்தச் செயலின் மூலம் இன்ன விளைவுதான் ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை எப்படியாகினும் புரிந்து கொள்ளுங்கள்.
            எதிர்பார்ப்பது கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இருமை எண்ணம் நரகம். அதைப் பயன்படுத்தித்தான் உங்களின் எதிரி பீச்சாங்கையை உங்கள் முகத்தின் மீது வைத்து விட்டுப் போகிறான்.
            விருப்பம் இல்லாத வேலையை விட்டு விடுங்கள். வலுகட்டாயமாக செய்வதற்கு வாழ்க்கை எல்.கே.ஜி. படிப்பு போன்றது அல்ல.
            அவநம்பிக்கை மிகப்பெரிய மனச்சோர்வைத் தரும் என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
            மனம் விரைவாக நிகழ்த்துவது போலத் தோன்றும். ஆனால் அது படிப்படியாகத்தான் நிகழ்த்தும்.
            அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று பிரயாசைப் படுவதை நிறுத்தி உங்களுக்கு எது வருகிறதோ அதை ஆர்வமாகச் செய்து பார்க்கலாம். அடுத்தவர்கள் செய்வதைப் போலச் செய்து பார்ப்பதில்தான் ஆர்வம் வருகிறது என்றால் நீங்கள் நிச்சயம் ஆபத்தான் ஆளாக மாறிக் கொண்டு இருக்கிறீர்கள்.
            நிறைவு என்பது வந்து விட்டால் மனம் சலனம் உறுவதில்லை. நிறைவின்மை எல்லா வகையிலும் ஏதோ ஒரு பிரச்சனைதான்.
            நடப்பதெல்லாம் ஏதோ ஒரு வகையில் நன்மைக்கே. இந்த உணர்வை மிக எளிதில் உருவாக்கிக் கொண்டு விடலாம். அதன் பின் முன்னேற்றம் அவ்வளவாக இருக்காது என்பதால் யாரும் அவ்வளவு எளிதாக இப்படி ஒரு மனநிலையை உருவாக்கிக் கொள்ள முன்வர மாட்டார்கள்.
            புரியாத ஒரு தத்துவ நூலை எடுத்து சில பக்கங்கள் தினம் எழுதிப் பார்க்கலாம். அப்படி ஒரு நூல் கிடைக்காவிட்டால் எஸ்.கே.வாகிய நான் எழுதிய இதையே கூட எழுதிப் பார்க்கலாம்.
            இப்படி எழுதிப் பார்ப்பதன் மூலம், இதை விட வாழ்வது கடினமில்லை என்ற உணர்வை நீங்கள் பெறுவீர்கள்.
            கடினமான பொருள் புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்யுள் கூட இந்த சோதனைக்கு ஏற்றதுதான். அதை மனப்பாடமாகச் சொல்லிப் பாருங்கள்.
            நிறைய விசயங்களை மனதில் வைத்துக் கொள்ள முடியாது, குறைவான விசயங்களே போதும் என்ற முடிவுக்கு வந்து விடுவீர்கள். கிரகம் பாருங்கள், எதை ஞாபகம் வைத்து இருக்கிறோம் என்று தெரியாமல் எவ்வளவு விசயங்களை நாம் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறோம்.
            அவைகள் எப்போதோ ஒரு முறை வந்து விட்டு அழையா விருந்தாடியைப் போல் போய் விட்டால் கண்டு கொள்ளாதீர்கள். மனதை நெருக்கி அடித்துத் திரும்பத் திரும்ப வருவதாக இருந்தால் உஷாராகுங்கள். நீங்கள் கும்மியடிக்கப்படுகிறீர்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...