3 Feb 2018

ஒழுகுவதைத் தடுக்க ஓட்டையை அடை!

குறளதிகாரம் - 4.8 - விகடபாரதி
ஒழுகுவதைத் தடுக்க ஓட்டையை அடை!
            வீணாகக் கழிவதோ வாழ்க்கை?
            நிலச்சுமை எனப் புரிகுவதோ? என்று வெகுண்டு தன்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டதாகப் பாரதி புலம்புவானே! அப்படிப் பயனற்றுக் கழிவதற்கோ வாழ்க்கை?
            ஒரு அங்குல தங்கத்தை வைத்து ஒரு அங்குல நேரத்தை வாங்க முடியாது என்று ஒரு சீனப் பழமொழி உண்டே.
            காலம் கழிந்தால் கழிந்ததுதான். பிறர்க்குப் பயன் தரும் வகையில் கழித்தக் காலங்கள்தான் காலத்தால் எப்போதும் நினைவு கூரப்படுகிறது.
            கசியும் பித்தளையை ஈயம் பூசி அடைப்பது போல,
            ஆணி ஏறிய டியூப்பை பஞ்சர் ஒட்டி அடைப்பது போல,
            கரையுடைத்து ஓடும் நதியை மணல் மூட்டைகளைக் கொண்டு அடைப்பது போல
            வீணாகக் கழியும் வாழ்நாளின் வழியை அடைக்கும் கல் ஒன்று கிடைத்தால் அடைத்து விடலாம் என்கிறீர்களா?
            வீணாகக் கழியும் வாழ்நாளை அடைப்பதற்கான கல், வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் தானாக முன்வந்து நல்லது ஆற்றுவதுதான்.
            நன்மை செய்யும் போதே விரயம் ஆகும் வாழ்நாள் அடைபட்டு வாழ்வுக்கான அர்த்தம் கிரயம் செய்யப்படுகிறது.
            நன்று ஆற்றுவதன் மூலம் ஒருவன் வீணாகப் படாமல் வாழ்நாளின் வழியடைத்து விடலாம். அதாவது பயனுள்ள வழியில் வாழ்நாளைத் திறந்து விட்டு விடலாம்.
            பாத்திரத்தில் பிடித்த நீர் பயனற்றுக் கசிவதால் யாருக்கு என்ன நன்மை?
            நீரைக் கொட்டிக் கொண்டே செல்லும் குடிநீர் லாரியால் எவரின் தாகம் தீரப் போகிறது?
            நதியைக் கூட ஆங்காங்கே மடை கட்டி வழி நடத்தும் போதுதான் பயன் தருகிறது.
            வாய்க்கால் வழி ஓடும் நீரும் மடை கட்டி வழி அடைக்கும் போதுதான் அதன் பயனை நிறைவேற்றுகிறது.
            வாழ்நாள் நதியைப் போல, வாய்க்கால் வழி ஓடும் நீரைப் போல ஓடிக் கொண்டு இருக்கிறது. அதை நற்செயல்கள் எனும் வழியடைக்கும் கல் மூலம் வீணாகக் கழிவதை வழியடைத்து பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
            விமர்சனக் கடிதம் ஒன்றின் பயனற்ற கருத்துகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, அதில் குத்தப்பட்டிருந்த குண்டூசியைப் பயன்படுத்திக் கொண்ட காந்தியைப் போல, எதையும் வீணாக்காமல் பயன்படுத்துவது அறம்.
            பந்திகளில் வீணாக்கப்படும் உணவு போலோ,
            திறந்து விட்டக் குழாயிலிருந்து வீணாக்கப்படும் நீர் போலோ,
            வாரிச் சுருட்டி யாருக்கும் பயன்படாமல் இரும்புப் பெட்டியில் உறங்கும் செல்வம் போலோ,
            ஒருவரின் வாழ்நாள் வீணாகி விடக் கூடாது.
            ஏனென்றால்,
            பந்தியில் வீணாகும் உணவில் எத்தனையோ பேரின் பசி மறைந்திருக்கிறது.
            மூட மறந்த குழாயில் எத்தனையோ பேரின் தாகம் மறைந்திருக்கிறது.
            இரும்புப் பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்கும் பணத்தில் எத்தனையோ பேரின் களையப்படாத வறுமை மறைந்து இருக்கிறது.
            அதோ போலத்தான் நன்று ஆற்றாமல் வீணாகும் ஒருவரின் வாழ்நாளில் எத்தனையோ பேரின் மலர்ச்சி உறைந்து இருக்கிறது.
            ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைத் தந்தால் எதையும் மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார் விவேகானந்தர். அப்படி ஆற்றல் மிக்க இளைஞர்களின் வாழ்நாள் நன்று ஆற்றாமல் வீணாகக் கழிந்தால் என்னவாகும்?
            ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாள் வீண் படாமல் நன்று ஆற்றினால் அஃதே அவர்களின் வீணாகும் வாழ்நாளை அடைக்கும் கல்லாகும்.
            An empty mind is a devil's workshop என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். வீணாகக் கழியும் வாழ்நாள் ஒருவனை தீய வழியில் செலுத்தும். அப்படி தீய வழியில் செலுத்தாமல் அதன் வழியை அடைத்து, வாழ்நாளை வீணாக்காமல் இருக்க மார்க்கம் என்னவெனில் அஃது நன்று ஆற்றுவதுதான்.
            தீமையை தீமையால் அழிக்க முடியாது. நன்மையால்தான் அழிக்க முடியும்.
            அது போல தீமைக்குக் காரணமான தீய செயல்களை தீய செயல்களால் அழிக்க முடியாது. நற்செயல்களால்தான் அழிக்க முடியும்.
            தீயப் பழக்கத்தை தீயப் பழக்கத்தால் அழிக்க முடியாது. நற்பழக்கத்தால்தான் அழிக்க முடியும்.
            தீயப் பழக்கத்துக்கும், தீயச் செயல்களுக்கும், இன்னும் எத்தனை வகை தீமையுள்ளதோ அத்தனை வகை தீமைக்கும் தடை போடும் நன்று ஆற்றல் மூலம் வாழ் நாளை வாழாத நாளாக இல்லாமல் வாழ்ந்த நாட்களாக ஆக்க முடியும்.
            இதைத்தான் வள்ளுவர்,
            வீழ்நாள் படாமல் நன்று ஆற்றின் அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்கிறார்.
            வாழ்நாள் வீணாக ஓட்டை விழுந்த பலூன் போல் சுருங்கி விடாமல், அந்த ஓட்டையை அடைத்து உயர்ந்து பறக்கும் பலூனாகப் பறக்க 'நன்று ஆற்ற' வேண்டும். அப்படி ஒருவன் ஆற்றிய நன்றைக் கண்டு உலகம் போற்ற வேண்டும்.
            வாழ்வில் ஆற்ற வேண்டிய அறத்தை, ஆற்றாமல் வாழ்வை வீணாகக் கழித்து விடக் கூடாது. வீணாகும் வாழ்நாளை அடைத்து நன்று ஆற்றாமல் இருந்து விடக் கூடாது. வள்ளுவரின் பேரவா இது.
            ஒழுகுவதைத் தடுக்க முதலில் ஓட்டையை அடைக்க வேண்டும் அல்லவா! வாழ்நாள் வீணாக ஒழுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...