17 Feb 2018

யார் அந்த எஸ்.கே.?

யார் அந்த எஸ்.கே.?
            ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தடுமாறித்தான் போவீர்கள். சூழ்நிலைகள் அப்படி அமையும் போது தடுமாறாமல் இருப்பது கடினம். ஆனால் எந்தச் சூழ்நிலையும் நிலையானது அல்ல. மாறிக் கொண்டேதான் இருக்கிறது, இனியும் இருக்கும்.
            சூழ்நிலையால் ஏற்பட்ட தடுமாற்றத்தில் முதன் முதலாகத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டவன்தான் எஸ்.கே.
            சூழ்நிலைகள் நம்பிக்கையையும், விரக்தியையும் அளிக்கக் கூடியவை. சூழ்நிலைகள் நேரடியாக மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது போலத் தோற்றம் தருபவை. நீங்கள் பாதிக்கப்படாத வரை சுண்டுவிரலை அசைப்பது கூட சூழ்நிலைகளால் சாத்தியப்படாதது.
            ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால் சூழ்நிலையை அனுசரித்தோ, எதிர்த்தோ எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. எதைச் செய்தாலும் அது முட்டாள்தனமானது என்பதைச் சூழ்நிலை வெகு விரைவில் காட்டி விடும். ஆக சூழ்நிலைக்காக எதையும் செய்யாதீர்கள். எந்தச் சூழ்நிலையும் நிலையானதல்ல. எல்லாம் தற்காலிகமானதே.
            எஸ்.கே. பேசுவதும் எழுதுவம் எஸ்.கே.வுக்கா? இதைப் படிக்கும் உங்களுக்கா? என்ற குழப்பம் இதைப் படிக்கும் போது உங்களுக்கு எழுந்திருக்க வேண்டும்.
            எஸ்.கே. இன்னொரு மனிதனாகப் பிரிவதால் ஏற்படும் நிலை இது.
            அவனுக்கே இப்படி ஒரு குழப்பம் உண்டு, அவன் தனக்குத்தான் இதைச் சொல்கிறானா இல்லை மற்றவர்களுக்கு இதைச் சொல்கிறானா என்று.
            பயப்படும் ஒரு மனிதனாகவும், பயத்தை எதிர்த்துப் போராடும் இன்னொரு மனிதனாகவும் ஒரே நேரத்தில் இரண்டு மனிதனாக இருப்பதன் பலவீனத்தைச் சுவைத்துப் பார்த்தால் இதை நீங்கள் கண்டடைந்து விடலாம்.
            எஸ்.கே.வைப் போலவே பல நேரங்களில் மனம் எப்படி இருப்பது என்று மனமே பல நேரங்களில் குழம்பி விடுகிறது. அதனால்தான் எஸ்.கே. மனமா? மனிதனா? என்பதில் உங்களுக்கு குழப்பம் நேரிட்டு விடுகிறது.
            மேம்போக்காகப் படிப்பவர்களுக்கு இப்பத்திகள் எஸ்.கே. எழுதுவது போலவும், எஸ்.கே.வுக்காக இன்னொருவர் எழுதுவது போலவும் இருவித தோற்ற மாயையைத் தரும். நீங்கள் எந்த மாயையை நோக்குகிறீர்கள் என்று தெரியவில்லை.
            இப்படி உங்களுக்குள்ளே சந்தேகச் சண்டைகள் நிகழும் போது வலிமை குறைந்து விடுகிறது. பகுதி பகுதியாக நீங்கள் உங்களுக்குள் பிரிந்து இருப்பதுதான் உங்களுடையக் குழப்பம் மற்றும் உங்களுடைய பிரச்சனை. முழுமையாகப் பார்த்தால் அனைத்துப் பிரச்சனைகளிலிருந்து இன்ஸ்டன்ட் நிவாரணத்தைப் பெற்று விடலாம். துண்டாடப்பட்ட கண்களுக்கு அத்தகைய சக்தி இருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கண்கள் உங்களுடையது.
            உண்மையில் இங்கு பிரச்சனை என்பது இல்லை. பகுதி பகுதியாக பிரிந்து கிடப்பதுதான் பிரச்சனை. தமிழர்களுக்கும் இதுதான் பிரச்சனை என்றால் மனதுக்கும் இதுதான் பிரச்சனை. முழுமையடைந்து விட்டால் மாயத்தோற்றங்கள் விலகி விடும்.
            பிளவுபட்ட மனம்தான் பல விசயங்களுக்கும், விஷேசங்களுக்கும் காரணம். ஏதாவது ஓர் உணர்வை அதுவாக ஏற்படுத்திக் கொள்கிறது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் அது தன் முழு மனத்தையும் இயக்குகிறது ஒரு பிளவுப்பட்ட மனம். முழு மனம் இயங்குவதும் ஒரு பிளவுப்பட்ட மனதின் பின்னணியில்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உண்மை அதுதான்.
            எஸ்.கே. இதைத்தான் கண்ட மேனிக்கு நின்று சகட்டு மேனிக்கு விளக்கித் தள்ளுகிறான். இதை கழிவிரக்கமாகப் பார்க்காதீர்கள். கழிவு வெளியேற்றமாக வேண்டுமானால் பாருங்கள், பிரயோஜனப்படலாம்.    

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...