மனிதத் தின்னிகள்
எதிரே இருப்பவர் முனுக்கென்று கோபப்பட்டால்
தன்னை அறியாமலே தானும் கோபத்துக்கு ஆளாகுபவன் எஸ்.கே. அப்படி சரிசமமாகக் கோபப்பட
முடியவில்லை என்றால் தன்னை அறியாமல் தனக்குள் எரிச்சல் கொள்பவன் அவன். இயலாமையால்
ஏற்படும் விரக்தி, எரிச்சல், வேதனை என்று அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பான்
எஸ்.கே.
நீங்கள் எப்படி நடந்து கொண்டாலும் கூட
சமயங்களில் எஸ்.கே. கோபப்படுவான். அது அவனது இயல்பு. அதைத் தீர்க்க முயல்வதைப் போன்ற
முட்டாள்தனம் வேறுண்டோ? நடைமுறையில் அதைத்தான் பலரும் எஸ்.கே.வைப் பொருத்த மட்டில்
செய்கிறார்கள். பிடிவாதத்தால் உருவாகும் கோபத்துக்கு அது ஒரு போதும் செல்லாது. அது
மென்மேலும் கோபத்தை அதிகப்படுத்தத்தான் செய்யும்.
உண்மையைக் கேட்கும் போது பொய் சொல்வதும்,
பொய்யை எதிர்பார்க்கும் போது உண்மையைச் சொல்வதும் எஸ்.கே.வின் இயல்புகளில் ஒன்று.
எதை நினைத்துக் கேட்டாலும் அதற்கு மாறாக முடிவு கட்டிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வதே
அவனது பாணி.
இதை நீங்கள் கோபமாக வெளிபடுத்தி நிலைமையைச்
சமாளிப்பதை விட, உங்களுக்குள் நிலைமையைச் சமாளிப்பது எளிதாக இருக்கும். எந்த உணர்வையும்
வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பது எளிது என்பான் எஸ்.கே.
எஸ்.கே. சொல்வான், 'இது உங்களுக்குள்
ஏற்பட்ட பிரச்சனை. நீங்கள்தான் சமாளிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் கோபப்பட்டால்
மனதின் அடிமையாக வேண்டியதுதான். அது காட்டும் திசையில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இப்படித்தான் நீங்கள் மோசமானப் பிரச்சனைகளைச் சமாளிக்கிறீர்கள்!'
எஸ்.கே. இதில் தன்னிடம் நடந்து கொள்ளும்
ஒரு முறையைப் பற்றி மட்டும் உங்களுக்கு விளக்கவில்லை. எஸ்.கே. போன்ற மனிதர்களை நீங்கள்
எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கைக்கான பொதுத்தன்மையையே விளக்குகிறான்.
யாருக்கும் ஆறுதல் சொல்கிறேன் என்று முட்டாளாக
ஆகாதீர்கள். யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாது. ஒருவரின் ஈகோ அதை ஏற்காது.
தற்போது ஏற்றுக் கொள்வது போலத் தோன்றினாலும் ஏற்றுக் கொள்ளாது. அடிக்கடி இது போன்ற
முட்டாள்தனத்தைச் செய்யாதீர்கள்.
ஈகோவுடன் அலையும் மனிதர்கள் மற்றவர்களை
முட்டாளாக்கிக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் அகோரப்
பசியின் தீனிக்காக அலைகிறார்கள். அதற்காக மனிதர்களை வெட்டித் தின்னவும் அஞ்சாதவர்கள்.
கொஞ்சம் தீனிப் போட தவறினாலும் இரண்டில் ஒன்று பார்ப்பார்கள் தின்னுகுளிகள்.
எல்லாம் தற்காலிகம்தான். தற்காலிக ஒன்றுக்கு
எதற்கு அறிவுரை? பொறுத்துக் கொள்ளுங்கள். காலம் மாறும். காலம் ஒரே புள்ளியில் உறைவதில்லை.
மனதின் இயல்பும் அப்படியே. அது தன் இயல்பை நோக்கி திரும்பும். அது வரைக் காத்துக்
கிடங்களேன்.
*****
No comments:
Post a Comment