19 Feb 2018

ஆண்மையா? பெண்மையா? எது பெருஞ்சிறப்பு?

குறளதிகாரம் - 6.4 - விகடபாரதி
ஆண்மையா? பெண்மையா? எது பெருஞ்சிறப்பு?
            கற்பு என்று சொன்னால் அதை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்பார் பாரதி.
            கற்பு என்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?
            இந்த உலகம் எப்படி ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதோ அப்படியே கற்பும் இருவருக்கும் பொதுவானது.
            கற்பு பெண்ணுக்கு உயிர் என்றால் ஆணுக்கும் அஃதே.
            கற்பு பெண்ணுக்குப் பெருஞ்சிறப்பு என்றால் ஆணுக்கும் பெருஞ்சிறப்பு அஃதே.
            கற்பை ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகக் கொள்ளுவதனால் இந்த பூமி உய்யும். பிரபஞ்சம் பெருமிதம் கொள்ளும்.
            பெண்ணின் கற்பு மீறலுக்கு பெண்ணே மட்டும் காரணமன்று, அதற்கு இடம் கொடுக்கும் ஏதோ ஓர் ஆணும்தான் காரணம். இவ்விடயத்தில் ஒருவர் இடம் கொடுக்காமல் இன்னொருவர் மீற முடியாது.
            கற்பு மீறலின் பழியை பெண்ணின் மீது மட்டுமே சுமத்தி விட முடியாது. ஆணுக்கும் அப்பழியில் பங்கு இருக்கிறது.
            ஆனால் வதந்திகள்...? கற்பு மீறியப் பெண்ணை கற்பூரம் போல் பற்றிக் கொண்டு, அதற்குக் காரணமான ஆணை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றன. வதந்திகள் கூட ஆணாதிக்கம் சார்ந்ததாகவே இருக்கிறது. பெண்ணுக்கு ஓர வஞ்சனைப் புரிவதாக இருக்கிறது.
            உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப் போல கற்பில்லா வாழ்வும் குப்பையில்தான் தள்ளப்படுகிறது.
            கற்பு எனும் உறுதியால் காத்துக் கொள்ளும் போதுதான் மனித வர்க்கம் கவச குண்டலம் அணிந்த கர்ணன் போல காக்கப்படுகிறது. கற்பு எனும் உறுதியால் காத்துக் கொள்ளாத மனித வர்க்கம் கவச குண்டலம் இல்லாத கர்ணன் போல அழிக்கப்படுகிறது.
            கற்பு எனும் உறுதிக் குலைவே குற்றங்களையும், தண்டனைகளையும், பால்வினை நோய்களையும் இந்த உலகில் உருவாக்கி வைத்து இருக்கிறது.
            கற்பு எனும் திண்மை எனப்படும் வைராக்கியம் மட்டும் வாய்க்கப் பெற்றால், போகாத இடம் நோக்கி மனம் போகாது, நடக்கக் கூடாத பாதையை நோக்கி கால்கள் நடை போடாது.
            கற்பு இல்வாழ்வுக்கு மட்டும் பெருஞ்சிறப்பைத் தருவதில்லை, உடல், மனம் சார்ந்த நல்வாழ்வுக்கும் அதுவே பெருஞ்சிறப்பைத் தருகிறது.
            கற்பே ஆணுக்கும், பெண்ணுக்கும், துறவிக்கும் பெருஞ்சிறப்பைத் தருகிறது.
            துறவிக்கும் கற்புக்கும் என்ன சம்பந்தம் என்பீர்களானால், கற்பு மீறிய ஆனந்தத் துறவிகள் அதனாலேயே இழிநிலை அடைவதை காமிராக்கள் வந்த பிறகு நிறையவே பார்த்து விட்டோம்தானே.
            கற்பே இல்வாழ்வின் பெருஞ்சிறப்பு.
            இத்தகைய கற்பால் பெண்ணுக்குப் பெருஞ்சிறப்பா? ஆணுக்குப் பெருஞ்சிறப்பா? என்றால், ஆணுக்கேப் பெருஞ்சிறப்பு.
            ஆம்! ஓர் ஆணுக்கு 'ஒருவனுக்கு ஒருத்தி' எனும் கற்பு உண்டானால் மட்டுமே தான் கரம் கோர்த்தப் பெண்ணின் பெருஞ்சிறப்பை உணர முடியும்.
            ஆணுக்கு 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெற்றால்தான் அவனால் பெண்ணின் பெருந்தக்க யாவுள? என்ற பெண்ணின் பெருஞ்சிறப்பை உணர முடியும். அதோ போல பெண்ணும் அத்தகைய கற்பு என்னும் திண்மையில் நின்றால்தான் பெண்ணாகிய தன்னுடைய பெருஞ்சிறப்பைத் தானும் உணர முடியும்.
            வள்ளுவர் இதைத்தான்,
            பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் என்கிறார்.     
            ஒருவர் இடம் கொடுக்காமல் இன்னொருவர் தவறு செய்ய முடியாது என்பதால் கற்பு என்னும் திண்மை ஆண், பெண் இருவர்க்கும் உண்டாகி விட்டால் பெண்ணின் பெருந்தக்கச் சிறப்புக்கு முன் வேறு பெருந்தக்கச் சிறப்பு இந்த உலகில் வேறு யாதுதான் உள?
            இல்வாழ்வின் பெருஞ்சிறப்பு பெண்மைப் பொலிவதில் இருக்கிறது. அப்போலிவு கற்பு என்னும் திண்மையில் பொதிந்து இருக்கிறது.
            ஏன் இல்வாழ்வின் பெருஞ்சிறப்பு ஆண்மைப் பொலிவதில் இல்லையா என்றால் ஆண்மைப் பொலிவை விட பெண்மைப் போலிவையே இல்வாழ்வின் பெருஞ்சிறப்பாக முதன்மைபடுத்துகிறார் வள்ளுவர்.
            வீரத்தை விட தீரம் பெரிதல்லவா! ஆண்மை வீரம் என்றால் பெண்மை தீரம்! அதனாலேயே ஆண்மையை விட பெண்மை பெருஞ்சிறப்பைப் பெறுகிறது.
            பெண்ணின் பெருந்தக்க யாவுள? அதில் ஆணின் சிறப்பு ஒரு சில! பெண்ணுக்கு மிகப் பல!

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...