2 Feb 2018

எண்ணம் செத்துப் போன ஒரு மனிதன்

எண்ணம் செத்துப் போன ஒரு மனிதன்
            அயர்ந்து என்ன ஆகப் போகிறது? சோதனையில் தேறி என்ன ஆகப் போகிறது? சராசரியாகப் இருப்பதால் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது?
            அமைதியாக இருப்பதைக் கற்றுக் கொள்ள முடிகிறதா? அதுதானே வாழ்க்கையின் முதல் தேவை. இறுதித் தேவையும் அதுவே.
            அறிவுப் புலமை, படைப்பாற்றல் புதுமை என்றெல்லாம் வருத்திக் கொண்டு என்ன ஆகப் போகிறது?
            எஸ்.கே. அன்று எம்.கே.யிடமிருந்த எதிர்கொண்ட சொற்கள் இப்போதும் அவனை விட்டு அகலாமல் அதனின்று மீள முடியாமல் அவனுள் நிலைகுத்தி நிற்கின்றன. சொற்களால் ஏன் பல பேர் பைத்தியம் பிடித்தாற் போல் அலைகிறார்கள் என்பது அநேகமாக எஸ்.கே.வுக்கு அந்த இரவில் புரிந்திருக்கும்.
            அளவுக்கு மீறி ஒருவரைக் குற்றம் சுமத்தினால், அவர்கள் மனம் நொந்துப் போய் விடுவார்கள் என்பதற்கு தனது இந்த அனுபவமே சரியானச் சான்று என அந்நிகழ்வு குறித்து எஸ்.கே. பல இடங்களில் அதன் பின் பேசியிருக்கிறான்.
            அது போன்ற அப்போதைய மனநிலைகளில் எதையும் செய்ய முடியாதது போன்ற ஒரு நிலையை உணர்ந்திருக்கிறான். மனச்சோர்வின் உச்சம் இது. விரக்தியடைந்த ஒரு மனதின் வெளிப்பாடு அது. தன்னைத் தானே அழித்துக் கொள்ள விழையும் ஒரு மனதின் பித்து நிலை அது.
            இங்கு பலருக்குக் குழியில் தள்ளி விடத்தான் தெரியும். கரையேற்ற எத்தனைப் பேருக்குத் தெரியும். எஸ்.கே. கதை சொல்ல ஆரம்பித்ததன் பின்னணி இதுதான். கதை சொல்லல் ஒரு வகை கரையேற்றல்.
            தனிமனிதன், சமூகம் என்று பிரித்தும் பின்பு சேர்த்தும் பார்த்தால் பல கதைகள் கிடைக்கும்.            
            சமூகத் தன்மை தனிமனிதத் தன்மையை முக்கியமில்லை எனப் புறக்கணிக்கலாம். தனிமனிதத் தன்மை சமூகத் தன்மையை முக்கியமில்லை எனப் புறக்கணிக்கலாம். எஸ்.கே. வின் எழுத்து இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டது. இந்த இரண்டு தன்மைகளும் தனது தன்மைக்கு முக்கியமில்லை என்று புறக்கணிப்பது அவனது எழுத்து.
            எது உங்களைத் தொடர்ந்து கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறதோ, தடுமாற்றத்தில் கட்டிப் போடுகிறதோ, முடிவு எடுக்க விடாமல் குழப்புகிறதோ, அந்த பயம் - அந்தப் பயத்தை - நீங்களாக உருவாக்கிக் கொண்ட அந்தப் பயத்தை கேள்விக்கு உட்படுத்தி சின்னபின்னமாக சிதைப்பதுதான் எஸ்.கே.வின் எழுத்து.
            வெளியில் உருவாகுபவை ஒரு வகை என்றால், உள்ளுக்குள் உருவாவது ஒரு வகை. பெரும்பாலும் வெளியில் உருவாகுபவைகளை வைத்து செயல்படுவதை விட உள்ளுக்குள் உருவாகுபவைகளை வைத்து செயல்படுவதே அதிகம் என்பதுதான் எஸ்.கே.வின் வாதம்.
            அப்படி மனதில் உருவாகுபவைகள் எது வேண்டுமானால் அமையட்டுமே, விளைவுகளும் எப்படி வேண்டுமானாலும் அமையட்டுமே - அதற்காக விளைபவைகள், உருவாகுபவைகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று இறுக்கி நெருக்கிக் கொள்வதில் யாருக்குத் துன்பம்?
            இப்போது எஸ்.கே.யின் இந்தக் கேள்வி உங்களுக்குப் படபடப்பு தருவதாக இருந்தால் அதற்குக் காரணம் எண்ணங்களை உங்களை நோக்கி நீங்கள் திருப்பி வைத்துக் கொள்வதுதான்.
            எஸ்.கே. எண்ணம் செத்துப் போன ஒரு மனிதன். செத்தப் பிணத்தில் முளைத்தெழும் காளான்கள் போல அவன் எண்ணங்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...