2 Feb 2018

குந்தாங் கூறாக விளங்கிக் கொள்வதன்று அறம்!

குறளதிகாரம் - 4.7 - விகடபாரதி
குந்தாங் கூறாக விளங்கிக் கொள்வதன்று அறம்!
            உழைப்பவர் கஞ்சிக்கு இல்லாமல் கிடப்பதும், உழைக்காதச் சோம்பேறிகள் செரியாமைக்கு மருந்துண்டு இருப்பதும் அறம் என எண்ண வேண்டாம்.
            நெய்தவன் அம்மணமாய் நிற்பதும், நெய்ததைச் சாமர்த்தியமாய்க் கொய்தவன் படாடோபாய் உடுத்தி மினுக்குவதையும் அறம் என எண்ண வேண்டாம்.
            வயலில் இறங்கி பாடுபட்டவர் கால் வயிற்குக்கு இல்லாமல் இருப்பதும், வயலை ரியல் எஸ்டேட்டாக்கி தொப்பையும், தொந்தியும் கொண்டு சிலர் அலைவதையும் அறம் என எண்ண வேண்டாம்.
            மண்ணைக் காத்தவர் மண்ணோடு மண்ணாகி மக்கி அழிவதும், மணலைச் சுரண்டியவர் விண்ணோடு விண்ணாகக் கொடி கட்டிப் பறப்பதையும் அறம் என எண்ண வேண்டாம்.
            காடுகளைக் காத்தவர் பட்ட மரமாக நிற்பதையும், காடுகளை அழித்தவர் நெட்டை மரங்களாய் வளர்ந்து நிற்பதையும் அறம் என எண்ண வேண்டாம்.
            நாட்டைக் காத்தவர் வீட்டுக்குள் பைத்தியமென புலம்புவதும், நாட்டை விற்றவர் வீர வசனம் பேசி வாக்குகளை வியாபாரம் செய்வதையும் அறம் என எண்ண வேண்டாம்.
            நேர்மையோடு இருப்பவர் பிழைக்கத் தெரியாதவர் என்று பெயர் வாங்கி அழிவதையும், அஃதற்றவர் பிழைக்கத் தெரிந்த மாமணி எனப் பெயர் வாங்கி கொழுப்பதையும் அறம் என எண்ண வேண்டாம்.
            இவைகளெல்லாம் அறம் அல்ல என்று தெரியாதா என்ன என்று சொல்கிறீர்களா?
            இவைகளெல்லாம் எப்படி அறம் அல்லவோ, அப்படித்தான் பல்லக்கில் ஒருவன் பயணிப்பதும், அவனை நான்கு பேர் சுமப்பதும் அறம் அன்று. மனிதனை மனிதன் சுமப்பது அறம் அன்று என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுதியிட்டு உறுதியிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.
            இது போன்ற செயல்களெல்லாம் மனித உரிமைகளை மீறிய அறமற்ற செயல் என்பதை வள்ளுவர் அன்றே எண்ணிப் பார்க்கிறார். இப்படிப்பட்ட அறமற்ற செயல்கள் மாற்றப்பட்டு அறம் பொருந்திய பாதைக்கு உலகம் வரும் என்று அவர் கணிக்கிறார்.
            அவர் எண்ணிப் பார்த்த அறத்தை நோக்கி மனித குலம் நடைபோட்டு வருகிறது. வள்ளுவரின் அந்த அறச்சீற்றம்தான் சிந்தனைகளாக, புரட்சிகளாக, சமூக மாற்றங்களாக வடிவெடுத்து கை ரிக்சாவை மாற்றியது. மகிழ்வுந்துகள் வந்தப் பிறகும் பல்லக்கில் பயணித்தவர்களை நடந்து பயணிக்க வைத்தது.
            பல்லக்கில் ஒருவர் சுகமாகப் பயணிக்க, அதை வலியோடு நால்வர் சுமக்க, இதுதான் அறம் என எண்ண வேண்டா என்கிறார் வள்ளுவர்.
            அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்பது வள்ளுவர் குறள்.
            மனிதக் கழிவை மனிதன் அள்ளுவது போல் போன்ற அறமற்ற செயல்களில் அதுவும் ஒன்று.
            வள்ளுவர் தன் காலத்தில் நிலவிய அறமற்ற ஒன்றை இக்குறள் மூலம் பதிவு செய்து, பல்லக்கில் சுகமாகப் பயணிப்பவர் அறம் செய்தவர் என்றும், பல்லக்கை வலியோடு சுமப்பவர் அறம் செய்யாதவர் என்றும் தவறாக எண்ணி, அறத்தாறு இது என வேண்டா என்று அறுதியிட்டு அதாவது அதை அறமாகக் கருதி விட வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.
            அறம் செய்தவர் அதன் பலனாகப் பல்லக்கில் சுகமாகப் பயணிக்கிறார், அறம் செய்யாதவர் அதன் பலனாக வலியோடு பல்லக்கைச் சுமக்கிறார் என்று சொன்னால் அது அறமாகுமா?
            அந்தக் காலத்தில் பல்லக்கில் பயணம் செய்தவர் ஒரு சிலர்தான் இருந்திருப்பார்கள். மற்ற கோடானு கோடி மக்கள் நடந்தே பயணம் செய்து இருப்பர். அப்படிப் பார்ப்பின் பல்லக்கில் பயணித்த அந்த ஒரு சிலர்தான் அறவோர்களாக இருந்தார்களா என்ன?
            சிலப்பதிகாரத்தில் காவுந்தியடிகள் நடந்தேதான் மதுரை செல்கிறார். அதற்காக காவுந்தியடிகளை அறமற்றவர் என்று சொல்லி விட முடியுமா?
            அதுவுமல்லாமல் அந்தக் காலத்தில் அரசர் என்றால் பல்லக்கில்தான் பயணித்திருப்பார். நிச்சயம் கொடுங்கோல் அரசரும் பல்லக்கில்தான் பயணித்திருப்பார்.
            அறம் செய்த எங்கள் கொடுங்கோல் அரசர் பல்லக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது பரிவாரங்கள் அந்தக் காலத்தில் முழங்கியிருப்பார்களோ என்னவோ!
            எவைகள் எல்லாம் அறம் என கருதவோ, கருதப்படவோ வேண்டாம் என்பதை ஒரு எடுத்துக்காட்டோடு கூறி வள்ளுவர் எச்சரிக்கும் குறள்தான்,
            அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்ற இக்குறள் ஆகும்.
            ஆக,
            ஒரு சில உரையாசிரியர்கள் மாறுபட்ட குந்தாங் கூறான கோமுட்டித் தனமான ஒரு விளக்கத்தை இக்குறளுக்கு வழங்குவதைப் பார்க்கையில்...
            அறம் செய்ததால் கடன் வாங்கிய மல்லையா வானில் வானூர்தியில் பறந்து லண்டனில் சுகமாக இருக்கிறார், அறம் செய்யாததால் கடன் வாங்கிய விவசாயி மண்ணில் கூட நடக்க முடியாமல் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று விளக்கம் சென்னால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தமே அறம் செய்தவர் பல்லக்கில் பயணிக்கிறார், அறம் செய்யாதவர் பல்லக்கைச் சுமக்கிறார் என்று இக்குறளுக்கு விளக்கம் சொல்வதும் ஆகும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...