10 Feb 2018

இரண்டில் இரண்டைப் பார்த்து விடுங்கள்!

குறளதிகாரம் - 5.5 - விகடபாரதி
இரண்டில் ஒன்றை இரண்டைப் பார்த்து விடுங்கள்!
            குடும்பத்தில் இருப்பவர்களிடம் அன்போடு இருந்து, அறமற்ற வழியில் பொருளீட்டுவதும்,
            அறத்தோடு பொருளை ஈட்டிக் கொண்டு, குடும்பத்தில் இருப்பவர்களிடம் அன்பில்லாமல் இருப்பதும் இல்வாழ்வின் சாபக்கேடுகள்.
            அன்பு என்பது இல்வாழ்வின் பண்பு.
            அறம் என்பது இல்வாழ்வின் பயன்.
            அன்பும் அறனும் வலது கண்ணும் இடது கண்ணும் போல.
            அன்பும் அறனும் வலது நாசியும், இடது நாசியும் போல.
            அன்பும் அறனும் வலது செவியும், இடது செவியும் போல.
            அன்பும் அறனும் வலது கையும், இடது கையும் போல.
            அன்பும் அறனும் வலது காலும், இடது காலும் போல.
            அன்பும் அறனும் கணவன் மனைவி போல.
            இப்படி அன்பையும் அறனையும் நகமும் சதையும் போல, கடலும் அலையும் போல, வானும் மேகமும் போல, மலரும் மணமும் போல என்று எப்படிச் சொன்னாலும் தகும். ஒன்றில்லாமல் ஒன்று இருப்பது என்பது இரண்டு காலணிகளில் ஒன்று இருப்பது போன்றதுதான்.
            இணைந்திருந்தால்தான் இரண்டுக்கும் சிறப்பும் அழகும். இல்வாழ்வில் இணையர் இருவர் இணைவது போல, இல்வாழ்வில் அன்பும் அறமும் இணைந்து இருப்பதுதான் சிறப்பு. அன்பற்ற அறமும், அறமற்ற அன்பும் குரோமோசோம் மாறிப் பிறந்த குழந்தைகள் போல, இல்வாழ்வின் மரபுக்கு குந்தகம் செய்யக் கூடியவைகள்.
            இல்வாழ்க்கை எனும் வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் அன்பும் அறமும். சக்கரம் ஒன்று குறைந்தால் எந்த வண்டி ஓடும்?
            அன்போடும், அறத்தோடும் நிற்றலுக்காகவே இல்வாழ்வு என்ற வழி திறக்கப்படுகிறது.
            அன்பில்லாத இல்வாழ்வு பிரிவை நோக்கிப் போகும். அறமற்ற இல்வாழ்வு குறைவை நோக்கிப் போகும்.
            இல்வாழ்வில் இணைந்த இணையர் இருவரும் உறவுகள், நட்புகள், சுற்றங்களோடு அன்பாக இருத்தலும், அப்படி அன்பாக இருந்த போதும் எழும் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்களில் அறத்தோடு நிற்றலும் அவசியம்.
            அன்பின் மிகுதி காரணமாக இல்வாழ்வில் இணையர் உட்பட உறவுகளுக்கோ, நட்புகளுக்கோ, சுற்றத்துக்கோ அறமற்ற வழியில் உதவுதலோ, அறமற்ற முறையில் அவர்கட்கு துணை நிற்றலோ இல்வாழ்வை இல்லாத வாழ்வாக்கி விடும்.
            அதே போலவே தம் குடும்பத்தினர் மேல் மட்டும் மிகுதியான அன்பைப் பொழிந்து நட்புகளுக்கும், சுற்றத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய அறங்களை ஆற்றாமல் போனாலும் இல்வாழ்வு சிறப்பற்றதாகி விடும்.
            இல்வாழ்வின் இணையர் இருவரும் பிரச்சனைகள், மனவருத்தங்கள், குழப்பங்கள் நேரிடும் நேரங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் அன்போடு இருத்தல் மிக மிக வேண்டப்படுவதாகும்.
            கள்ளோ? காவியமோ? என்ற புதினத்தில் முனைவர் மு.வரதராசனார் குறிப்பிடுவது போல, வாழ்வில் நெருக்கடி நேரும் நேரங்களில் அறிவு பயன் தருவதை விட அன்பே அதிகப் பயன் தரும்.
            இணையர் தமக்குள் அன்போடு இருப்பதோடு, நட்புகளோடும், சுற்றத்தோடும் சிறுசிறு மனவருத்தங்கள் நேரிடும் காலங்களில் அதைப் பெருந்தன்மையாகப் புரிந்து கொண்டு அவர்கள் பால் கொண்ட அன்பு குறையாமல் இருப்பதும் அவசியமாகும்.
            எதற்காகவும், எக்காரணத்துக்காகவும் அன்பு குறையாமலும், அறத்தை விட்டுக் கொடுக்காமலும் இரண்டையும் இரண்டு கண்கள் என்று எண்ணி பொன் போல் போற்றி ஓம்புவதற்கே இம்மாநிலத்தே இல்வாழ்வு.
            மனதின் நோய்களுக்கு அன்பே மாமருந்து. உலகின் சமனின்மைக்கு அறமே சமன் செய்யும் நெம்புகோல். அத்தகைய அன்பும், அறனும் இல்வாழ்விலிருந்து தொடங்கும் போது உலகம் அன்பு மயமாகவும், அறத்தை அச்சாணியாகவும் கொண்டு இயங்கும்.
            சரியான துவக்கமே பாதி முடிந்ததற்குச் சமம் என்ற பழமொழியோடு ஒப்பு நோக்கின் அன்போடு அறனோடும் தொடங்கிய இல்வாழ்வு அதன் பயனையும், சிறப்பயைும் தொடங்கிய பொழுதிலே பாதி அடைந்து விடுகிறது. மீதி, அத்தகைய அன்பையும், அறனையும் தம் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் நிறைவு பெற்று விடுகிறது.
            ஆக,
            இல்வாழ்வோர் என்போர் அண்டி வரும் யாவரோடும் அன்போடு இருத்தலும், அப்படி வருவோர்க்கு உரிய அறங்களைச் செய்தலும், ஒருவர் மீது கொண்ட அன்பின் மிகுதி காரணமாக அறத்தை மீறாமல் இருத்தலும், சிறுசிறு மனவருத்தங்களால் ஏற்படும் காயங்களால் அன்பு குறையாமல் இருத்தலும் வேண்டும்.
            ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து தண்ணீர் உருவாவது போலவே அன்பும் அறமும் இணைந்தே இல்வாழ்வும் உருவாகிறது. தண்ணீரைப் போலவே தண்மையாக வாழ்வதற்கும், பயனோடு இருப்பதற்கும் இல்வாழ்வில் அன்பும் அறனும் இணைபிரியாமல் இருப்பது வேண்டப்படுகிறது.
            அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்கிறார் வள்ளுவர்.
            இரண்டடிகள் (ஒன்றே முக்கால் அடி என்றாலும் தோராயமாக இரண்டடி) இணைந்து அழகாகும் திருக்குறள் போலவே இல்வாழ்வில் அன்பும் அறனும் ஆகிய இரண்டும் இணையும் போது அழகு பெற்று விடுகிறது. அதனால்தானோ என்னவோ வள்ளுவரும் திருக்குறள் ஒவ்வொன்றையும் இரண்டு அடிகளால் செய்தாரோ என்னவோ!
            ஈருடல் ஓருயிராய் வாழும் இல்வாழ்வில் இருவரும் இணைந்து ஒன்றாய்க் கடைபிடிக்க வேண்டியதுதான் அன்பும் அறனும்.
            இல்வாழ்வில் இரண்டில் ஒன்றை அல்ல, இந்த இரண்டில் இரண்டையும் பார்த்து விடுங்கள். இல்வாழ்வில் சிறந்து விடுங்கள்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...