10 Feb 2018

அவிழ்த்தெடுத்தலும், அறுத்தெறிதலும்...

அவிழ்த்தெடுத்தலும், அறுத்தெறிதலும்...
            எஸ்.கே.யிடம் எதையும் கேட்பதற்கில்லை. அதற்கு அவன் அன் பிட்டாகக் கூட இருக்கலாம். தனக்கென ஒரு மனநிலை இல்லாதவன், இல்லாததனாலே அதிலிருந்து வெளியேறி வர முடியாதவன், யாரும் எந்த மனநிலையிலும் சிக்கி விடக் கூடாது என்பதற்காக இழுத்துப் போட்டு எல்லாவற்றையும் கும்மாங்குத்து குத்துபவன், இந்த உலகின் திருப்தியுள்ள ஒரே ஜீவன்.
            மனம் ஒரு திருப்தியுராத கிண்ணம். அடியில் ஓட்டைப் போட்டு விட்டால் எந்தக் கிண்ணம்தான் நிரம்பும்? இதைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் திருப்தியை ஊற்றிக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் அதிருப்தியை உருவாக்கிக் கொண்டு இருப்பார்கள். இதைத்தான் எஸ்.கே. ஒவ்வொரு மனநிலையும் ஓர் ஓட்டைக் கிண்ணம் என்கிறான். கேட்பவர்கள் நல்ல கிண்ணம் என்று அடம் பிடிக்கிறார்கள்.
            அவர்கள் அப்படியே இருக்க முனைகிறார்கள் அந்த ஓட்டைக் கிண்ணவாதிகள். அவர்களை மாற்ற முடிவதில்லை. மாற்றவில்லை என்று புலம்புகிறார்கள். அவர்களை அப்படியே விட்டு விட்டு தப்பித்துக் கொள்வதான புத்திசாலித்தனமான அபத்தத்தைத்தான் அன்றிலிருந்து இன்று வரை எஸ்.கே. செய்து வருகிறான்.
            அவர்களை அப்படியே அனுமதியுங்கள். அதுதான் அவர்கள் என்பது போல அவர்கள் நம்பிக் கொண்டு இருக்கட்டும்.
            ஒவ்வொருவரையும் அப்படியே ஏற்றுக் கொண்டால் யாரைத்தான் மாற்ற முயல்வது? உலகத்தில் இருக்கின்ற புத்தகங்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும் இதனால் வேலையில்லாமல் போய் விடும். அதுவாக என்ன மாற்றம் நிகழ வேண்டுமோ அது நிகழத்தான் செய்கிறது. அவசரப்பட வேண்டாம். கூடுதல் எதிர்பார்ப்பையும், ஆசைகளையும் உருவாக்கிக் கொண்டு மாற்றத்தை நோக்கிச் சித்திரவதை செய்ய வேண்டாம்.
            முடியுமானால் யாரையும் திருப்தி செய்யாதீர்கள். திருப்தி செய்ய முடியாத அவ்வளவு பெரிய மனத்தை வைத்து இருப்பவர்களிடம் அதற்கானச் செயலில் இறங்கி ஆபத்தை விலைக்கு வாங்கி அடிமாட்டு விலைக்கு விற்று நட்டத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். எதிலும் திருப்தி அடையாதவர்கள் திருப்திபடுத்துவதில் மட்டும் திருப்தி அடைந்து விடுவார்கள் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது?
            அயோக்கியத்தனம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் அளவுக்கு எஸ்.கே. உருவாக்க நினைக்கும் மாற்றம் அவ்வளவு மோசம் கிடையாது. அந்த அளவுக்கு வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அளவுக்கும் சில சமயங்களில் அவன் சிக்கி விடுகிறான்.
            எஸ்.கே. நினைக்கும் பக்கம் சாய்ந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றில்லை. எதிர்பக்கம் சாய்ந்தாலும் வெற்றி பெற முடியும். இங்கு பேசப்படுவது வெற்றி பெறப் போகும் ஒரு வாழ்க்கையைப் பற்றியல்ல. துவண்டு விடாத ஒரு வாழ்வைப் பற்றித்தான்.
            ஆம்! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் வாழ்க்கை கடினமில்லை. ஆனால் அதை மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு எழுதித்தான், பேசித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.
            கொஞ்சம் காத்திருந்தால் எல்லாம் கிடைத்து விடும். காத்து இருப்பதற்குள் செய்யப்படும் அட்டகாசங்களால் மேலும் வாழ்க்கை சிக்கலாகி விடுகிறது. ஒரு சிக்கலை எடுக்கப் போய் பல சிக்கலில் சிக்கிக் கொள்வதில் மனிதர்களுக்குப் பேரானந்தம் இருக்கிறது.
            யாரால்தான் சும்மா இருக்க முடியும் சொல்லுங்கள். சும்மாகவேனும் கால்களையும், கைகளையும் கட்டிப் போட்டுக் கொண்டு காப்பாற்றுங்கள் என்று கத்துவதில் ஓர் ஆனந்தம்தான். அதைத்தான் எஸ்.கே. சொல்ல வருகிறான், அந்த கை கட்டுகளையும், கால் கட்டுகளையும் போட்டது நீங்கள்தான்.
            நீங்களே நீங்கள் அவிழ்க்க முடியாத அளவுக்குக் கட்டுகளைப் போட்டு விட்டீர்கள். அவிழ்க்க முடியாத கட்டுகளை அறுத்து எறிந்து விடுங்கள் என்கிறான் எஸ்.கே. நீங்கள் அவிழ்த்துதான் எடுப்பேன் என்று அரண்டு போய் முரண்டு பிடிக்கிறீர்கள். எப்படியாவது அவிழ்த்தால் சரிதான் என்று இந்த இடத்தில்தான் உங்கள் போக்கிற்கு விட்டு விட்டு தன் போக்கில் நடக்கிறான் எந்த வித கட்டுகளுமில்லாத எஸ்.கே.        
            கட்டுகள் நைந்துப் போகும் போது நீங்கள் கட்டுகளை அவிழ்ப்பீர்கள் என்பதும் அநேகமாக அப்போது ரத்தம் சுண்டிப் போயிருப்பீர்கள் என்பதும் எஸ்.கே.யின் உத்தேசமான ஒரு விதமான கணிப்பு.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...