18 Feb 2018

அவளின் கையில் இருக்கும் அழகிய பீங்கான் கோப்பை!

குறளதிகாரம் - 6.3 - விகடபாரதி
அவளின் கையில் இருக்கும் அழகிய பீங்கான் கோப்பை!
            வறுமை வந்தாலென்ன? இல்லாள் மாண்பாக இல்லத்தை வழி நடத்த இருக்கும் போது!
            வளமை வந்தாலென்ன? இல்லாள் மாண்போடு அதை மென்மேலும் வளமையாக்க இருக்கும் போது!
            ஆயிரம் துயரங்கள் வந்தால் என்ன? அதை மாறுதல் செய்து ஆறுதல் சொல்ல இல்லாள் இருக்கும் போது!
            இலட்சம் தடைகள் குறுக்கே நின்றால் என்ன? அவைகளை உடைத்தெறியும் வலிமையை உள்ளத்தில் தர இல்லத்தில் இல்லாள் இருக்கும் போது.
            கோடி முறைகள் வீழ்ந்தால் என்ன? ஓடி வந்து ஒவ்வொரு முறையும் தூக்க விட இல்லாள் இருக்கும் போது!
            ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணே இருக்கிறாள். அவள் வேரென, விழுதென தாங்குவதால்தான் ஆண் ஆல் என தழைக்கிறான்.
            ஆண்கள் இல்லாத உலகில் பெண்கள் வாழ்ந்து விடுவார்கள். பெண்கள் இல்லாத உலகில் ஆண்கள் வாழ முடியாது. இந்த உலகில் ஆண்களை உருவாக்க பெண்கள் வேண்டும், அன்பை உருவாக்கவும் பெண்கள்தான் வேண்டும்.
            பெண் இல்வாழ்வு ஏற்று இல்லத் தலைமை ஏற்கும் போதுதான் இல்லம் வெல்லம் ஆகிறது.
            குடும்பத்தின் குத்து விளக்காகவும், மானுட சமூகத்தின் ஒளி விளக்காகவும் பெண் திகழ்கிறாள்.
            கார்ல் மார்க்ஸை இமையெனத் தாங்கி நின்ற ஜென்னி இதற்கு நல்லதொரு சான்று.
            சாக்ரடீஸ் சொல்வார், "நிலைமை எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும் திருமணம் செய்து கொள். உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைத்தால் நல்ல குடும்பஸ்தனாகி விடுவாய். இல்லாது போனால் தத்துவவாதியாகி விடுவாய்."
            சாக்ரடீஸூக்கு இரண்டாம் வாய்ப்பே அமைந்தது போலும். சாக்ரடீஸ் தத்துவவாதியானார். என்றாலும் அவர் தத்துவவாதியாகி கல்யாணம் செய்து கொண்டாரா? கல்யாணம் செய்து கொண்டு தத்துவவாதியானாரா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
            அவர் நிலைமையைப் பார்த்து கட்டைப் பிரம்மசாரியான அவரது சீடர்களும் உண்டு என்பர்.
            இல்லாள் நினைத்தால் தன் மனத்தால், குணத்தால் இல்லத்தைத் தூக்கி நிறுத்தவும் முடியும், தூக்கி மிதிக்கவும் முடியும்.
            நாகரிகத்தின் அடிப்படை குடும்பம் என்பார் வில் டியூரன்ட். அந்தக் குடும்பத்தின் அடிப்படை இல்லாள்.
            இல்லாளின் கையில் இருக்கிறது இல்லம், ஒரு குழந்தையின் கையில் இருக்கும் அழகிய பீங்கான் கோப்பையைப் போல.
            அந்த அழகியப் பீங்கான் கோப்பை என்னவாகப் போகிறது என்பது அந்தக் குழந்தை அதை எப்படி வைத்து இருக்கப் போகிறது என்பதில்தான் இருக்கிறது.
            இல்லாளின் கையில் இருக்கும் குடும்பமும் அஃதைப் போலவே.
            குடும்பம் இல்லாளின் கையில் இருக்கும் அழகிய பீங்கான் கோப்பை.
            இல்லது என் இல்லவள் மாண்பானால் உள்ளது என் இல்லவள் மாணாக் கடை என்கிறார் வள்ளவர்.
            இல்லாளின் ஆளுமை வறுமையும் செம்மையாக்கும்.
            இல்லாளின் அறியாமை வளமையையும் வறுமையாக்கும்.
            இல்லாள் மாட்சி செய்யும் குடும்பம் கலங்கரை விளக்கம்.
            அவள் மாட்சி இல்லாத குடும்பம் இருண்ட வீடு.
            இல்லாள் மாண்போடு இருக்கவும், மாண்பற்று இல்லாமல் இருக்கவும் எதுவும் செய்ய முடியாதா என்கிறீர்களா?
            ஏன் செய்ய முடியாது?
            அதற்காகவே குடும்ப விளக்கு, இருண்ட வீடு ஆகியவற்றோடு பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார்,
            'பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே'
            நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.
            அப்பல்கலைகழகத்தின் துணை வேந்தர் அவள்தான். பெயரளவுக்கு வேந்தராக ஆண். அவ்வளவுதான்!

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...