கால் கட்டுக்குப் பிறகான காலக் கட்டம்
எஸ்.கே. என்பவன் யார்?
இதைத் தெரிந்து கொள்ள எல்லாரையும் விட
அவனைப் பற்றி எழுதுபவனே மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கக் கூடியவன் எஸ்.கே.
எஸ்.கே. எழுதப்படுபவன். எழுதுபவனுக்கும்
சிக்காதவன்.
ஒரு வகையில் எஸ்.கே. ஒரு வேதாளம். பழையபடி
முருங்கை மரம் ஏறுவதில் அவனை அடித்துக் கொள்ள ஆளில்லை.
இரவில் சாப்பிடாமல் படுப்பதில் அவனுக்கு
அலாதிப் பிரியம் என்பதிலிருந்து அவனை நீங்கள் ஒருவாறாக அனுமானிக்கலாம். அவன் பாட்டுக்குச்
சாப்பிடாமல் படுத்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதற்காகச் சாப்பிட்டுத் தூங்குபவர்களை
எழுப்பித் தொந்தரவு செய்வதுதான் பிரச்சனை.
இதற்குப் பயந்து அவனோடு இரவு படுப்பவர்கள்
மிகவும் குறைவு.
எஸ்.கே.வுக்குப் பயந்து இரண்டு வாழைப்
பழத்தை விழுங்கிக் கொண்டு, ஒரு குவளை நீரைப் பருகிக் கொண்டு படுப்பவர்கள் அதிகம்.
அப்படி இருந்தும் எஸ்.கே.வின் இம்சைகள் அவர்களை விட்டப் பாடாக இருக்காது.
நான்கு தோசைகளைச் சுட்டுக் கொடுத்தால்
சாப்பிட அலுப்புப் படுவான். மீந்திருக்கும் சோற்றைத் தின்னச் சொன்னால் தொட்டுக்
கொள்ள எதுவும் இல்லை என குறை சொல்லுவான். சோறு தண்ணீர் விட்டுப் பொய் விட்டது,
நொசுநொசுத்துப் போய் விட்டது என்று நொட்டாரம் சொல்லுவான்.
பொதுவாக எஸ்.கே.வின் மனநிலையைப் புரிந்து
கொள்வது சிரமமானது. அவன் எப்போது எப்படிப் பேசுவான்? எப்படி நடந்து கொள்வான் என்பதையெல்லாம்
உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறாக முடிவெடுக்கும்
அவனது மனநிலை அவ்வபோது விதவிதமான பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். அவனுடைய
மனநிலையைத் திருப்தி செய்வது அவ்வளவு எளிதன்று.
எஸ்.கே.வின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை
நினைத்துப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கலாம். ஒரு கால் கட்டுப் போட்டு விட்டால்
பிரச்சனைகளை பேக் செய்து அனுப்பி விடலாம் என்று எஸ்.கே.வைக் கணக்கிட்டவர்கள் உண்டு.
அப்படிக் கணக்கிட்டு, திருமணமானப் பிறகு பிரச்சனை என்ற போது அவனை வீட்டிலே ஒரு குழந்தையை
வைத்துக் கொள்வதைப் போல வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. ஒரு குறும்புக்
குழந்தை எத்தனையெத்தனை அலும்புகளைச் செய்யுமோ அதையெல்லாம் செய்து கொண்டு இப்போது
வீட்டில் இருக்கிறான் எஸ்.கே.
எஸ்.கே.வாலான சில பிரச்சனைகளைத் தீர்க்க
வேண்டும் என்று எவ்வளவு முயன்றாலும் தீர்க்கவே முடிவதில்லை. அதுவாக தீர்ந்தால்தான்
உண்டு. மீறித் தீர்க்க முயன்றால் என்ன பிரச்சனை என்று தெரியாத அளவுக்குப் புதிது புதிதாக
பிரச்சனைகளைக் கிளப்பி விட்டு எல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறான் எஸ்.கே.
இதில் எஸ்.கே. சொல்ல வருவது என்னவென்றால்,
குடும்பப் பிரச்சனை என்பது எல்லா காலத்திலும் இருப்பது, இருந்து கொண்டு இருப்பது.
இதில் கை வைத்து கையைச் சுட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது அப்படித்தான். தீர்க்க
முடியாதது. ஆனால் அதுவாக ஒரு நேரத்தில் தீர்ந்து போகும். அதுதான் எஸ்.கே. எஸ்.கே.வின்
பிரச்சனைகளும் அப்படித்தான். அவன் தரும் பிரச்சனைகளும் அப்படியே.
*****
No comments:
Post a Comment