1 Feb 2018

ஆயுளை நீட்டிக்க அற்புத வழி!

குறளதிகாரம் - 4.6 - விகடபாரதி
ஆயுளை நீட்டிக்க அற்புத வழி!
            பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தாயிற்று. இன்னும் கடக்க ஆண்டுகள், நாட்கள் இருக்கின்றன. அத்தனை ஆண்டுகளும், நாட்களும் நாம் இருப்போமா?
            அத்தனை ஆண்டுகளும், நாட்களும் இருக்காவிட்டாலும் பரவாயில்லை, கடைகளில் கொஞ்சம் கொசுறு கொடுப்பது போல நாம் இருக்கும் நாட்களை விட கொஞ்சமாவது நாட்களை நீட்டித்தால் நன்றாயிருக்கும் அல்லவா!
            அப்படி நீட்டிப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா என்ன?
            இல்லாமல் போகுமா என்ன?
            இதுதான் வழி...
            தள்ளிப் போகாதே!
            தள்ளிப் போடாதே!
            அது என்ன தள்ளிப் போகாதே என்றால் அறம் செய்வதிலிருந்து தள்ளிப் போகாதே!
            அது என்ன தள்ளிப் போடாதே என்றால் அறம் செய்வதைத் தள்ளிப் போடாதே!
            இன்றைக்கு செய்ய வேண்டியதை நாளைக்குத் தள்ளிப் போடாதே என்பது நேர மேலாண்மை கருத்தன்று, அற மேலாண்மை கருத்து.
            ஏன் இன்றைக்குச் செய்ய வேண்டியதை நாளைக்குச் செய்யக் கூடாதா? நாளைக்குச் செய்ய உயிர் இருக்க வேண்டுமே! ஏனென்றால் உயிருக்கு உத்திரவாதமில்லாத வாழ்க்கை இது!
            ஒரு வேளை தள்ளிப் போடாமல் அந்த அறத்தைச் செய்திருந்தால், அந்த இரவு போக இருந்த உயிர் இன்னும் சில நாட்கள் தள்ளி போயிருக்குமோ என்றால் நிச்சயம் ஆம்தான்.
            கெடுப்பதும், கொடுப்பதும் மழை என்பது போல, உயிரை எடுப்பதும், கொடுப்பதும் அறம்.
            நல்லவர்கள் உள்ள உலகில் கெட்டவர்கள் உயிர் வாழலாம். ஆனால் கெட்டவர்கள் மட்டுமே உள்ள உலகில் கெட்டவர்கள் கூட உயிர் வாழ முடியாது.
            அறம்தான் நம்மை காத்து நிற்கிறது.
            அறமின்மைதான் அழித்துக் கொண்டிருக்கிறது.
            சேவையுணர்வு எனும் அறத்தோடு கத்தி பிடிக்கும் மருத்துவர் மற்றவர்களைக் கத்தி ஏந்தாமல் காக்கிறார். காசுணர்வு எனும் அறமற்ற தன்மையோடு கத்தி பிடிக்கும் மருத்துவர், அவருக்குக் கொடுக்க வேண்டிய காசுக்காக மற்றவர்களைக் கத்தியேந்தி வழிப்பறி செய்ய வைத்தாவது அவரது சிகிச்சைக்கான காசைக் கொண்டு வர‍ வைக்கிறார்.
            ஒருவரது அறம் அவரது உயிரை மட்டும் நீட்டிப்பதில்லை. அவரோடு தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான உயிர்களை நீட்டிக்கச் செய்கிறது.
            இப்படி, ஒரு மருத்துவரின் அறம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கோடி உயிர்களை நீட்டிக்கச் செய்யும்.
            அவ்வகையிலே ஒரு பொறியாளரின் அறம் பல ஆயிரம் உயிர்களை கட்டிட இடிபாடுகளினின்று நீட்டிக்கச் செய்யும்.
            அவ்வண்ணமே, ஒரு தலைவனின் அறம் பல கோடி மக்களின் நாடித்துடிப்பான ஜனநாயகத்தின் உயிரை நீட்டிக்கச் செய்யும்.
            அஃதே போல, ஒரு வல்லரசின் அறம் அகதிகள் உருவாகாமல் அவர்களை அவர்களின் சொந்த நாட்டிலே வாழச் செய்து அவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்யும்.
            அதே வகையில், மருத்துவர்களை, பொறியாளர்களை, தலைவர்களை, வல்லரசுகளை உருவாக்கும் ஓர் ஆசிரியரின் அறம் பல தலைமுறைகளின் உயிரை நீட்டிக்கச் செய்யும்.
            இப்படித்தான் அறம் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.
            ஒருவனின் அறமின்மை அவனை மட்டுமல்லாது, அவனைச் சுற்றியுள்ளவர்களையும் சேர்த்து அழித்து விடும்.
            அறம் செய்வோர்தான் தம் வாழ்நாட்களோடு, சூழ இருப்பவர்களின் வாழ்நாட்களையும் நீட்டிக்கச் செய்கிறார். அதுதானே அறம். தன் வாழ்நாளை மட்டும் நீட்டிப்பதற்கான வழிமுறைகளைச் செய்வது எப்படி அறமாகும்?
            வாழ்நாளை நீட்டிப்பதற்கான அறத்தைத் தள்ளிப் போடலாமா? உயிர் காக்கும் அறுவைச் சிசிக்சையைச் செய்து கொள்வதை தள்ளிப் போடுவோமா என்ன? அப்படித்தான், அறம் செய்வதை தள்ளிப் போடவும் கூடாது! அறம் செய்வதிலிருந்து தள்ளிப் போகவும் கூடாது!
            மழைக்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்தாலும், தள்ளிப் போடலாலும்தானே ஒரு மாநகரமே மழைக்காலத்தில் மிதந்து உயிர்களைக் காவு கொள்கிறது.
            இப்படி சின்ன சின்ன தள்ளிப்போடல்கள் எத்தனை உயிர்களை பலி வாங்கியிருக்கும்? இப்படி எத்தனையோ உயிர்களை சின்ன சின்ன தள்ளிப் போடல்களால் பலி வாங்கி விட்டு விட்டு ஒரு சிலர் தாம் மட்டும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மாரடைப்போ, மனிதப் பேரிடர்களோ வந்து எப்படி அவர்களைக் காலி செய்யாமல் போகும்?
            அறம் என்பதில் சிறியது, பெரியது என்ற வேறுபாடில்லை. ஒரு சின்ன நட்டுதானே எனப் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு இறுக்க முறுக்காமல் விட்டால் எவ்வளவு பெரிய வாகனமும் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி விடும். விபத்து என்பது பயணிக்கும் வாகனத்தோடு பயணிக்கும் உயிர்களோடும் அல்லவா சென்று முடியும். ஆகவேத்தான் பெரிய வாகனத்தின் சிறிய நட்டை முறுக்கும் பணியாளராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், தள்ளிப் போடாமல் அந்தக் காரியத்தை அதாவது அப்போதே அந்த அறத்தைச் செய்து விடுங்கள்.
            இப்படி தள்ளிப் போடப்பட்டக் காரியங்களால், இந்த உலகத்தில் அதுவும் குறிப்பாக நம் தாய்த் திருநாட்டில் கிள்ளி எறியப்பட்ட உயிர்கள் ஏராளம்.
            ஆகவே செய்ய வேண்டிய அறத்தைத் தள்ளிப் போட்டு, மற்றவர்களுக்குக் கொள்ளிப் போட ஒரு போதும் நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.
            ஒன்றே செய்! நன்றே செய்! அந்த அறத்தையும் இன்‍றே செய்! என்பதைத்தான் வள்ளுவர்,
            அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை என்கிறார்.
            எங்கே இதைப் படித்து முடித்ததும் அறம் செய்ய கிளம்பி விட்டீர்கள்தானே! அதாவது உங்கள் ஆயுளோடு மற்றவர்களின் ஆயுளையும் நீட்டிக்க கிளம்பி விட்டீர்கள்தானே!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...