24 Feb 2018

கேவலமான கடைசிக் கேவல்

கேவலமான கடைசிக் கேவல்
            தேவையில்லாமல் எஸ்.கே. பல இடங்களில் உருவாக்கும் விழையும் ஒழுங்கு கடைசியில் அது அவனது ஒழுங்கையே பதம் பார்த்து விடுவதானது.
            எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. அந்த அளவைத் தாண்டி எதையும் வலியுறுத்த முடியாது.  அதிகாலையில் எழுந்திருக்குமாறு ஒருவரை வற்புறுத்திப் பார்த்து, அவர் எழும்பா விட்டால் எழுப்பியவர் மீதே கோபம் எழுந்து விடும். அந்தக் கோபம் தொடர்ச்சியாக பல விசயங்களை அடுத்தடுத்துப் பாதிக்கும்.
            ஒரு கோபம் என்பது சங்கிலித் தொடர் போல. அது அடுத்தடுத்த விசயங்களைப் பாதிக்கும் போதுதான் அந்தக் கோபத்தை ஏன் எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழும். கோபத்தின் நட்டங்கள் அதிகம், லாபம் என்று எதுவும் இருப்பதில்லை.
            சிடுமூஞ்சிக்காரன், கோபக்காரன், ஆத்திரக்காரன், அவசரக்காரன் என்ற பல பெயர்கள் கோபத்தின் விளைவாக அதன் பின் எஸ்.கே.வின் அடையாளமாவதைப் போல ஒரு நிலை நேரிடலாம்.
            வேண்டுமென்றே எஸ்.கே.வின் வேலைகளை மெதுவாகச் செய்து டார்ச்சர் ஏத்துவார்கள். கழுவோ கழுவு என்று பிராணனை எடுப்பார்கள். அவன் வாழ்க்கையின் வேகத்தக்கு ஈடு கொடுக்க மாட்டார்கள். இப்படி முக்கிய விசயங்களில் எஸ்.கே.விடம் மெதுவாக இருப்பார்களே தவிர, தனிப்பட்ட முறையில் எஸ்.கே.விடம் கோப்படுபவதில் வேகம் காட்டுவார்கள்.
            ஒரு விழாவுக்குக் துவக்கலாம் என்றால் பொறுமையைச் சோதித்த பின்தான் துவக்க அனுமதிப்பார்கள். அதே அளவுக்கு அந்த விழாவை முடிய விடாமல் சோதிப்பார்கள். கொஞ்சம் சீக்கிரமாக முடியுங்கள், சிறிது நேரம் அமைதி காக்க விடுங்கள் என்றால் முடியவில்லை என்பது போல பெப்பே காட்டி காரியக்கார சோம்பேறித்தனத்தை வெளிப்படுத்துவார்கள்.
            தூங்குவது போல் நடிக்கும் இவர்களை எவர் எழுப்புவது? இவர்களுக்கு அதுவே வசதியாகப் போன பின் அவர்களை எழுப்பும் பொறுப்பு எஸ்.கே.விடம் கொடுக்கப்பட்டால் எஸ்.கே. என்ன செய்வான்? என்ன செய்தான்? என்பது சோகக்கதை.
            மோட்டுவளை வழியாகத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தால் நனையாமல் அதன் மீது ஏறி எப்படி அடைப்பது? ஓட்டைக்காக வீட்டில் இடத்தை அங்கும் இங்கும் மாற்றிப் பார்க்கலாம். அங்கும், இங்கும் எல்லாவற்றையும் மாற்றி கால் இடறிக் கதவில் அடிபட்டு ரத்தம் கசியத் தொடங்கினால் தெரியும் கோபத்தின் வடிவம் ரத்தக் களறி என்பது.
            இந்தக் கோபத்தைப் பட்டுதான் எஸ்.கே. என்ன செய்யப் போகிறான்? யார் திருந்தினார்கள்? யாரும் திருந்த மாட்டார்கள். அத்தோடு அவன் கோபப்பட்டதற்காக அவனை வேறு படுத்தி எடுத்து விடுவார்கள்.
            கோபப்பட்டதற்கான காரணமாக சம்பந்தம் சம்பந்தம் இல்லாத விளக்கங்களைக் கூறிக் கொண்டு இருக்க வேண்டிய நிலை வேறு எஸ்.கே.வுக்கு.
            கோபத்தால் உடல் நலத்தைப் பாதித்துக் கொள்ள வேண்டும். மன நலத்தைப் பாதித்துக் கொள்ள வேண்டும். இவ்வளவையும் பாதித்துக் கொண்டுதான் கோபப்பட வேண்டும்.
            ஏதோ ஒரு வைராக்யம்! ஏதோ ஒரு கோபம் என்று சொல்லலாம். வைராக்யம் பரவாயில்லை. கோபம் தேவையில்லை.
            வேலைகளைப் பழகிக் கொள்வதன் மூலம் கோபத்தை வெல்லலாம் என்பது நெடுங்காலம் கழித்து எஸ்.கே.வுக்குப் புரிய வந்தது. அப்போதும் கோபம் இருக்கலாம். பழகப் பழக அது சரியாகி இருக்கும்.
            இருக்கும் வேலைகளை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் மேலே திணித்தால் அவன் நிலைமை எஸ்.கே.வின் நிலைமையைப் போலத்தான்.
            இந்த உலகில் யார்தான் யார் சொல்லைக் கேட்கிறார்கள்? ஒருவேளை கேட்டால் கூட ஏதோ அவர்களின் சூழ்நிலை கேட்கும்படி இருக்கிறது என்பதுதான் உண்மை. பின்னர் சூழ்நிலைகள் மாறினாலும் அவர்களும் கேட்பதை விட்டு விடுவார்கள். ஆதலால்தான் கோபம் குறித்த யாருக்கும் உபதேசம் புரிய வேண்டாம் என்று நினைத்தான் எஸ்.கே.
            விமர்சனப்படுத்தி விமர்சனத்துக்கு உட்படுத்துவதை விட சும்மா இருப்பது நல்லது போலத்தான் தோன்றியது எஸ்.கே.வுக்கு.
            ஏதாவது பேச நினைத்தால் நற்குணங்களை மட்டும் புகழ்ந்து பேசி விட்டு அத்தோடு விட்டு விடுவது நலம் என்பான் எஸ்.கே. தேவையில்லாத தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு இதைப் போன்ற சிறந்த வழி இந்த உலகில் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
            'கோபப்படும் போது மனநிலையைக் கோபம்தான் தீர்மானிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.' எஸ்.கே.வின் கடைசி முனகல் இப்படித்தான் கேவலாக கேவலமாக வெளிப்பட்டு அடங்கியது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...