24 Feb 2018

பீடு நடையா? பீடை நடையா?

குறளதிகாரம் - 6.9 - விகடபாரதி
பீடு நடையா? பீடை நடையா?
            இல்லம் சிறக்கச் செய்பவள் இல்லாள்.
            இல்லத்தின் மாட்சி இல்லாளின் ஆட்சி.
            இல்லத்தின் அருமை இல்லாளின் பெருமை.
            இல்லத்தின் சிறப்பு இல்லாளின் மாண்பு.
            இல்லத்தின் மேன்மை இல்லாளின் ஆளுமை.
            இல்லத்தின் உயர்வு இல்லாளின் உழைப்பு.
            இல்லத்தின் செறிவு இல்லாளின் அறிவு.
            இப்படி இல்லத்தின் புகழ் இல்லாளால் அவளைக் கொண்டவனுக்கு வருகிறது. வேரென அவள் இருப்பதால்தான் கணவன் கிளையென விரிந்து இலை பரப்பி சிறக்க முடிகிறது.
            புகழ் வாய்ந்த செயலைச் செய்யும் போதுதான் ஒரு தலைவருக்கு மிடுக்கு உண்டாகிறது.
            புகழ் வாய்ந்த கருத்துகளைச் சொல்லும் போதுதான் ஒரு பேச்சாளருக்கு மிடுக்கு உண்டாகிறது.
            புகழ் வாய்ந்த பிள்ளைகளைப் பெறும் போதுதான் பெற்றவர்க‍ளுக்கு மிடுக்கு உண்டாகிறது.
            புகழ் வாய்ந்த குடிமக்களைப் பெறும் போதுதான் ஒரு நாட்டுக்கு மிடுக்கு உண்டாகிறது.
            புகழ் வாய்ந்த பண்பட்ட நிலையை அடையும் போதுதான் இந்த பூமிக்கு மிடுக்கு உண்டாகிறது.
            வள்ளுவரே தோன்றிற் புகழொடுத் தோன்றுக என்றுதான் சொல்கிறார்.
            ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னே பெண்ணே இருக்கிறாள் என்பர். அவள் பெற்றுத் தந்த வெற்றியினாலே ஆணுக்குப் புகழ் உண்டாகிறது.
            ஒருவேளை நிலைமை எதிரிடையானால் இகழ்ச்சியே உண்டாகும். இகழ்ச்சிக்குப் பின்னே மிடுக்கு எப்படி ஏற்படும்? சிடுக்குதான் ஏற்படும்.
            இகழ்ச்சிக்குக் காரணமாகி விடும் இல்லாளால் இல்லத்தின் மிடுக்கு இல்லாமல் போய் விடுகிறது.
            புகழ்ச்சிக்குக் காரணமான இல்லாளால் இல்லத்தின் மிடுக்குத் திரும்பி விடுகிறது.
            ஒரு தீக்குச்சி வீட்டை ஒளிரவும் செய்யும், காட்டையே எரியவும் செய்யும்.
            ஒரு பெண் நினைத்தால் சிதைந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்தவும் முடியும். சிறந்தக் குடும்பத்தைச் சிதைக்கவும் முடியும்.
            விதையொன்று விதைத்தால் சுரையொன்று முளைக்காது.
            இல்லாளின் புகழ் புரிந்த செயல்களால் இல்லத்துக்கு மிடுக்கும்,
            இல்லாளின் இகழ் புரிந்த செயல்களால் இல்லத்துக்கு சிடுக்கும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
            எப்படிப்பட்ட காரியங்களை ஆற்றுகிறமோ அப்படிப்பட்ட விழுமியங்களே நிகழ்கின்றன.
            தினை விதைத்து தினையை அறுப்பது போலவும், வினையை விதைத்து வினையை அறுப்பது போலவும்    ,
            புகழுக்குக் காரணமான செயல்களைச் செய்யும் போது புகழையும்,
            இகழுக்குக் காரணமானச் செயல்களைச் செய்யும் போது இகழ்ச்சியும் உண்டாகிறது.
            இல்லத்தின் புகழுக்குக் காரணமானக் காரியங்களை இல்லாள் வழிநடத்தாத போது இல்லத்துக்கு அதனால் இகழ்ச்சி உண்டாகிறது. அந்த இகழ்ச்சியின் விளைவாக இல்லத்தின் இருப்போர் சமூகத்தில் மிடுக்கோடு நடை போட இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
            இல்லம் புகழ் பெறுவதற்கான காரியங்களால், இல்லத்தை இல்லாள் வழி நடத்த வேண்டும்,
            அல்லால்,
            புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன் ஏறு போல் பீடு நடை என்று வள்ளுவர் சொன்னது போல ஆகி விடும்.
            ஒரு நாட்டை ஒரு தலைவர் எப்படி வழி நடத்த வேண்டும் என்று இலக்கணங்கள் இருப்பது போல,
            ஒரு வீட்டை ஒரு பெண் எப்படி வழி நடத்த வேண்டும் என்பதை எதிரிடையாக வைத்து வள்ளுவர் இலக்கணம் வகுக்கிறார்.
            புகழ் புரிந்த இல் இலோர்க்கு இகழ்வார் முன் பீடு நடை இல்லை என்றால், புகழ் புரிந்த இல் உள்ளோர்க்கு எவர் முன்னும் பீடு நடை உண்டு.
            புகழ் தூக்கி நிறுத்துகிறது.
            இகழ் வெட்டி வீழ்த்துகிறது.
            நாட்டின் புகழ் தலைவர் வழிநடத்துவதில்.
            வீட்டின் புகழ் இல்லாள் வழி நடத்துவதில்.
            புகழோடு வழி நடத்தினால் பீடு நடை போடலாம், அல்லால் பீடை நடைதான் போடலாம்.
            பீடு நடையா? பீடை நடையா? அது இல்லாளின் நிலையில்! இல்லாள் வழிநடத்தும் முறையில்!
            தீபத்தை ஏற்றி வைத்தால் வெளிச்சம் அல்லால் இருட்டுதானே. ஏற்றி வைத்தால் கொடி பறக்கிறது அல்லால் சுருண்டு கிடக்கிறது.
            ஏற்றி வைப்பதும், இறக்கி வைப்பதும் இல்லத்தின் இல்லாள் எனும் நல்லாள். இல்லத்தின் வெளிச்சமாகவும், விளக்கமாகவும் அவளே உள்ளாள்.

*****

2 comments:

  1. இல்லாளினால் இல்லம் இன்பமயம்.

    ReplyDelete
    Replies
    1. இல்லாளால் இல்லம் இன்ப மயம்
      பிரதிவினை நல்ல நயம்

      Delete

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...