குறளதிகாரம் - 5.1 - விகடபாரதி
தவறுகளுக்குத்
துணை போகாதே!
மனிதர் பிறக்கிறார்.
பெற்றோர்களும், சுற்றியுள்ள மற்றோர்களும் அவரது முதல் வகையறா.
பிறந்து,
வளர்ந்து, உயர்ந்து மணம் செய்கிறார். துணைவரும் துணைவர் மூலம் உண்டாகும் உறவோர்களும்
இரண்டாம் வகையறா.
இல்வாழ்வின்
பயனாக குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகளும் அவர்களைச் சார்ந்து உருவாகிற உறவு நிலைகளும்
மூன்றாம் வகையறா.
இந்த மூன்று
வகையறாக்களைச் சார்ந்த மனிதர்களுக்கும், இல்வாழ்க்கை ஏற்ற இணையர் இருவரும் நன்னெறியில்
நிற்பதற்கு துணை நிற்க வேண்டும்.
இல்வாழ்க்கையை
ஏற்ற இணையர் குடும்பத் தலைமை கொள்வதாக நாம் நினைத்துக் கொண்டிருக்க சமூகத் தலைமையும்,
சமூக மேன்மையும் கொள்வதை வள்ளுவர் மையப்படுத்துகிறார்.
இல்வாழ்வான்
என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்பது அவரது வாக்கு.
இல்வாழ்வை
ஏற்ற பிறகு, பெற்றோர்கள் தவறுக்கும், துணைவர் தவறுக்கும், பிள்ளைகள் தவறுக்கும் காரணம்
ஆகாமல் அவர்கள் நன்னெறியில் நிற்பதற்கு இல்வாழ்வை ஏற்றுக் கொண்ட இணையர் இருவரே ஒருவருக்கொருவர்
துணை நிற்க வேண்டும்.
இல்வாழ்வு
ஏற்றப் பிறகு குடும்பத் தலைமை மாறுகிறது. அம்மாற்றத்திற்குப் பின் புதிய இல்வாழ்வை
ஏற்றவர்களே குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்புக்கு வருகிறார்கள்.
அப்படிப்
பொறுப்புக்கு வரும் அவர்கள் எப்படி குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்கு வள்ளுவர்
இக்குறளின் மூலம் அடித்தளம் அமைக்கிறார்.
பொருள் மேல்
உள்ள ஆசையால் வரதட்சணை என்ற பெயரிலோ, ஆதிக்க மனப்பான்மையால் வன்கொடுமை என்ற பெயரிலோ
பெற்றோர்கள் தவறு செய்ய தூண்டினாலும்,
அளவற்றப்
பாசத்தால், உச்சபட்ச எதிர்பார்ப்புகளின் நிறைவின்மையால் உறவென இணைந்தோர் குறை கூறி
மல்லுக்கு நின்றாலும்,
பிள்ளைகள்
மேல் கொண்ட பற்றினால், பித்தினால் அவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சப்பைக்கட்டு கட்டும்
நிலைமை வந்தாலும்,
இல்வாழ்வை
ஏற்றுக் கொண்ட இணையர் நல்ல நெறிகளுக்குப் பின்னே துணை நிற்க வேண்டுமோயோழிய, தவறுகளுக்கு
துணை நிற்கக் கூடாது.
இல்வாழ்வில்
இணையர் இருவரும் தவறுகளுக்கு இடம் கொடாத நன்னெறியில் நின்றால், சமூகத்தில் எந்தத்
தவறுகளும் நிகழ இடம் இருக்காது.
இனியாவது
குடும்பத்துக்காகத்தான் கையூட்டுப் பெற்றேன், பிள்ளைகள் வளமாக வாழத்தான் ஊழல் செய்தேன்,
உறவைக் காக்கத்தான் தவறானப் பாதையில் சென்றேன் என்றெல்லாம் காரணம் கூறாதீர்கள். தவறான
வழியில் நிற்பது இல்வாழ்வு ஆகாது எனும் போது, தவறான வழியில் செல்வது வாழ்வே ஆகாது.
நன்னெறியில்
துணை நிற்க முடியுமானால் மணம் செய்யுங்கள். முடியாதானால் மணம் செய்யாமல் இருப்பதே இல்வாழ்வுக்கும்,
இந்த சமூகத்துக்கும் செய்யும் மிக நல்ல உதவி.
மணம் வீசினால்தான்
மலருக்கு மதிப்பு. நன்னெயில் நின்றால்தான் திருமணத்துக்கு மதிப்பு.
ஆக இல்வாழ்வை
ஏற்பது என்பது
1. பெற்றோரையும்
பெற்றோரைச் சார்ந்தவர்களையும்,
2. இணையரையும்
இணையரைச் சார்ந்தோர்களையும்,
3. குழந்தைகளையும்
அவர்களின் தலைமுறையைச் சார்ந்தவர்களையும்
நல்ல நெறியில் நிற்க துணை நிற்பதற்கேயாம்.
அப்படியானால்
அவர்களைக் காக்க வேண்டாவா என்றால் காக்காமல் போனால் நன்னெறியில் நிற்பதாக ஆகுமா என்ன?
நன்னெறியில்
நிற்க துணை நிற்பவர் முதியோர் இல்லத்தில் விடுவாரோ என்ன?
நன்னெறியில்
நிற்க துணை நிற்பவர் அனாதைகளாய்த் தூக்கி எறிவாரோ என்ன?
நன்னெறியில்
நிற்க துணை நிற்பவர் இணையரைக் கை விடுவாரோ என்ன?
இல்வாழ்வோர்
என்பார் தம் இல்வாழ்வின் இயல்பாகும் மேற்காணும் மூவர்க்கும் நன்னெறியில் நிற்க துணை
நிற்பார். அவர்களைக் காத்து நிற்பார். அவர்களின் தவறுகளுக்குத் துணை போக மாட்டார்.
நன்னெறியில் நிற்க வேண்டிய அவர் தானும் தவறு செய்ய மாட்டார்.
வள்ளுவரின்
மூன்று முடிச்சு இது!
*****
No comments:
Post a Comment