6 Feb 2018

எழுத்தைப் படிக்கும் வழிமுறைகள்

எழுத்தைப் படிக்கும் வழிமுறைகள்
            தலைப்பு எஸ்.கே.வின் எழுத்தைப் படிக்கும் வழிமுறைகள் என்றுதான் இருந்திருக்க வேண்டும். தன்னுடைய எழுத்தை மட்டும் படிக்கும் வழிமுறைகளைச் சொல்வதாக குறுக்க வேண்டாம் என்பதற்காக எஸ்.கே.வால் தலைப்பு மேற்காணும் வகையில் விரிவாக்கப்பட்டு இருக்கிறது என்பதைக் கஷ்டப்பட்டாவது புரிந்து கொள்ள வேண்டும்.
            முதலில் சிறிது காலத்துக்கு செய்யுள் படியுங்கள். ரசித்துப் படியுங்கள். அதன் அழகில் மயங்கிப் படியுங்கள். எஸ்.கே.வின் எழுத்தைப் பொருள் பிரித்துப் படிக்க அது உதவும். நன்றாக கவனிக்கவும் சொல் பிரித்து அன்று.
            எப்போதும் சிந்தனைகளைச் செயல்பட விட வேண்டும். அதை முடக்கும் வகையில் செய்யப்படும் மனப்பாடம் ஆகவே ஆகாது. மனதின் போக்கோடு படிக்கும் செயல் இணைந்து இருக்க வேண்டும். நீங்களாக விரும்பினால் மட்டுமே தவிர எஸ்.கே.வின் எழுத்தை மனனம் செய்யாதீர்கள்.
            கணிதம், இயற்பியல், வேதியியல் என்று புரியாமல் நீங்கள் படித்ததை நினைக்கும் போது எஸ்.கே.வைப் படிப்பது அவ்வளவு கடினமானதில்லை என்பதை உணர்வீர்கள். அவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் அதற்குச் செலுத்திய உழைப்பை மறந்து விடாதீர்கள். எஸ்.கே.வின் சில எழுத்து சில நேரங்களில் அதை விடக் கடின உழைப்பைக் கோரக் கூடியவை. பொருள் புரிந்து கொள்வது என்பது சொற்களின் பொருள்களில் அல்ல என்பதால் இது தலைக்கனமோ, மண்டை கிறுக்கோ என்ற வகையறாவில் வராது.
            எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் படியுங்கள், விரித்துரையுங்கள், கட்டுரையுங்கள், மனத்தில் இருத்துவது என்று முயலுங்கள். அவைகளைச் சர்ச்சைக்குரிய மேற்கோளாக்கி விடாதீர்கள். அதற்கு நீங்கள் படிக்காமல் இருப்பது மேலானது.
            மனதை அதன் போக்கில் அனுமதியுங்கள். எஸ்.கே.வின் எழுத்து அதைத்தான் சொல்கிறது. அதன் அதிர்ச்சியை எஸ்.கே.வின் எழுத்தில் தரிசிக்கிறீர்கள். நேரடியாக எதிர்கொள்ளும் அதிர்ச்சி அதில் பத்தில் ஒரு பங்கே. மனதைச் சகட்டு மேனிக்கு அடக்கி ஆள்வதால் எதுவும் ஏற்படப் போவதில்லை. உங்களுக்குள் பூட்டப்படும் வக்கிரங்கள் அதிகமாகலாம். எளிமையாக வெளியே எட்டிப் பாருங்கள். சாதாரணமான மனிதர்கள் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். சாதாரணமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. உங்கள் சொல்லால், செயலால் அதை அசாதாரணமாக்கி விடாதீர்கள்.
            எஸ்.கே.வின் எழுத்தைப் படிப்பதற்கு அலுப்புப் படவே கூடாது. ஜாலியாக எப்படித் தோன்றுகிறதோ அப்படிப் படியுங்கள். தலைகீழாக வைத்துப் படிப்பது ஓ.‍கே. என்றாலும் ஓ.கே. அப்போதுதான் நீங்கள் பெரிய படிப்புகளைப் படிக்க முடியும். பலனை ஓர் இலக்காக்கி அழுக்காக்கிக் கொள்ளாதீர்கள். எஸ்.கே.யின் எழுத்தைப் ப‍டிப்பதால் நீங்கள் எந்த ஒரு பலனையும் அடைய முடியாது. படிக்காது போனால் மிக மோசமானப் பலனை அடைவீர்கள். அந்த மிக மோசமானப் பலனை அடையாமல் தடுப்பதற்கே எஸ்.கே.யின் எழுத்து.
            படிக்க படிக்கத்தான் வித்தை செழுமை பெறும். படித்துப் பார்ப்பதில் ஆர்வமாக இருங்கள். அதற்கு தனித்தனியாகப் படித்ததை முழுமையாகப் படியுங்கள். முழுமையாகப் படித்ததை தனித்தனியாகப் படியுங்கள். படிப்பின் சூட்சமம் இது. அதன் பின் உங்களுக்கு எழும் ஆர்வத்தை உங்களாலே கட்டுபடுத்த முடியாது.
            கற்பனையில் வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்திப் பாருங்கள். இல்லையென்றால் திட்டம் கற்பனையிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அப்போதுதான் எஸ்.கே.வின் எழுத்தை ஏன் படிக்க வேண்டும் என்பதை உங்களால் உணர முடியும். பசிக்காத பசு மாட்டுக்கு எதற்குப் புல் கட்டு?

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...