5 Feb 2018

அறம் இருக்க பழி எதற்கு?

குறளதிகாரம் - 4.10 - விகடபாரதி
அறம் இருக்க பழி எதற்கு?
            ஒருவர் அலுவலக உதவியாளராக இருக்கலாம்.
            ஒருவர் அலுவலக எழுத்தராக இருக்கலாம்.
            ஒருவர் அவர்களின் மேலாளராக, அதிகாரியாக இருக்கலாம்.
            ஒருவர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருக்கலாம்.
            ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, அமைச்சராக, அதையும் தாண்டிய முதன்மை வகிப்பவராக இருக்கலாம்.
            ஒருவர் அந்தப் பகுதியின், ஒன்றியத்தின், மாவட்டத்தின் தலைவராக, செயலாளராக ஒரு கட்சியின் அரசியல் சார்ந்த பதவிகளில் இருக்கலாம்.
            ஒருவர் கிராம, வட்ட, மாவட்ட, வருவாய், இன்னபிற அலுவலராக, ஆட்சியராக இருக்கலாம்.
            ஒருவர் எந்தப் பதவியில், எந்தப் பணியில், எந்த அதிகாரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
            ஒருவர் ஏழையாக, நடுத்தர வர்க்கமாக, பணக்காரராக, கார்ப்பரேட்டாக இருக்கலாம்.
            ஒருவர் இளைஞராக, நடுத்தர வயதுடையவராக, முதியவராக இருக்கலாம்.
            ஒருவர் ஆண், பெண், மூன்றாம் பாலினமாகவும் இருக்கலாம்.
            ஒருவர் இந்தியர், பாகிஸ்தானியர், அமெரிக்கர், சீனர் என்று எந்த நாட்டினராகவும் இருக்கலாம்.
            ஒருவர் ஆசிரியராக, வழக்கறிஞராக, மருத்துவராக, பொறியாளராக, உடல் உழைப்பு தரும் தொழிலாளியாக, முதலாளியாக, வியாபாரியாக, படைவீரராக, நீதிபதியாக, நிபுணராக, நிருபராக, அறிஞராக, விஞ்ஞானியாக இருக்கலாம்.
             ஒருவர் எந்தப் பதவியில், எந்தப் பொறுப்பில், எந்தப் பணியில், எந்த இடத்தில் இருந்தாலும் அவர் செய்ய வேண்டியது என்பது ஒன்று உள்ளது, செய்யக் கூடாதது என்பது ஒன்று உள்ளது.
            செய்ய வேண்டியது அறம். செய்யாது விலக்க வேண்டியது பழி.
            பழி வரும் என்று தெரிந்தும் கையூட்டு வாங்குவதும்,
            பழி வரும் என்று தெரிந்தும் ஊழல் செய்வதும்,
            பழி வரும் என்று தெரிந்தும் முறைகேடுகள் செய்வதும்,
            பழி வரும் என்று தெரிந்தும் அதிகாரப் பிறழ்வுகளில் இறங்குவதும்,
            பழி வரும் என்று தெரிந்தும் சொத்துக் குவிப்பில் இறங்குவதும்,
            பழி வரும் என்று தெரிந்தும் அன்பை, நேர்மையை, உண்மையை விலை பேசுவதும்,
            பழி வரும் என்று தெரிந்தும் மனச்சான்றை விற்று, பணச்சான்றை வாங்குவதும்
ஒருவரை வளமோடு வாழ வைப்பதாகத் தெரியலாம். ஆனால், நலமோடும், பலமோடும் வாழ வைக்காது. நெஞ்சுக்குள் ஒரு நடுக்கம், ஓர் அச்சம், ஒரு குற்றஉணர்வு, ஓர் ஐயம், ஓர் அவநம்பிக்கை, ஒரு பதற்றம் இவைகளோடு வாழ்ந்து தன்னையும் பாதித்துக் கொண்டு, தன் தலைமுறையையும் பாதிக்கத் தயார் என்றால், ஒருவர் தாராளமாக விலக்காமல் பழிகளைச் செய்யலாம்.
            அறமற்ற ஒன்றை அதன் அறமற்ற தன்மையினாலேயே அழிக்க அறம் காத்திருக்கிறது. ஒரு கொலைகாரரைக் கொல்ல இன்னொரு கொலைகாரர் வருவார். ஒரு திருடரிடமிருந்து திருட இன்னொரு திருடர் வருவார். ஒரு கொள்ளைக்காரரிடமிருந்து கொள்ளையடிக்க இன்னொரு கொள்ளைக்காரர் வருவார். அறமற்ற வகையில் குவித்தச் செல்வத்தைக் கவிழ்க்க இன்னோர் அறமற்ற ஒருவர் வருவார். அறமற்ற வல்லவர்க்கு வல்லவரை அறமற்றத் தன்மை பிரசவித்துக் கொண்டே இருக்கும்.
            தவிர்க்க வேண்டியதைச் செய்பவர்கள் இறுதியில் தவிர்க்கப்படுவார்கள்.
            விலக்க வேண்டியதைச் செய்பவர்கள் இறுதியில் விலக்கப்படுவார்கள்.
            மறுத்து, வெறுத்து, ஒதுக்க வேண்டியதைச் செய்பவர்கள் இறுதியில் ஒதுக்கப்படுவார்கள்.
            பழியைத் தேடத்தான் வழியைச் சொல்கிறது உலகம் என்றால் அதை அழித்துப் பார்க்கவும் அறம் தயங்காது. மனிதத்தைத் தேடும் புனிதத்தை அடையச் செய்யும் ஆக்கத்தைப் பெற விடாமல் அறம் ஓயாது.
            அழிவது போலத் தோன்றி அழியாமல் நிலைக்கும் அறம்.
            ஆவது போலத் தோன்றி அழியும் பழி.
            ஆக்குவதும், அஃதில்லையென்றால் அழிப்பதும், மனிதம் பிறழாமல் காப்பதும் அறம்.
            தாழ்வதும், வீழ்வதும், அழிவதும், ஒழிவதும் அஃதாகி வசவுக்கும், விலக்கத்துக்கும், அவத்துக்கும், பாவத்துக்கும் உள்ளாவது பழி.
            ஆகவே, செய்ய வேண்டியது அறம், செய்யாமல் விலக்க வேண்டியது பழி.
            செயல்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயர்பாலது ஓரும் பழி.
            பழியைச் செய்வதற்கு வழியைக் கேட்டு விட்டு, சுடுகாட்டுக்கும், இடுகாட்டுக்கும் இட்டுச் செல்லும் அழிவுக்கான வழியைச் சுட்டிக் காட்டி விட்டதாக கடைசியில் புலம்புவதில் அர்த்தம் ஏதும் இருக்க முடியாது.
            வழிகள் எப்போதும் வழிகளே. அவ்வழியைத் தேர்வு செய்பவர்களே அதன் விளைவுகளுக்குப் பொறுப்பு.
            அறம் என்ற வழியா, பழி என்ற வழியா என்பது உங்களது விருப்பு. அந்த அவரவர் விருப்புக்கு இறுதியில் அவரவரே பொறுப்பு.
            போகாத வழிதனில் போக வேண்டாம். ஆகாத பழிதனைச் செய்ய வேண்டாம்.
            விபத்துகளைத் தடுக்கத்தான் வேகத் தடைகள். அந்த வேகத் தடைக்கும் கூட எச்சரிக்கை வாசகம் இருப்பதைப் போலத்தான் வாழ்க்கைக்கான எச்சரிக்கை வாசகம் 'அறத்தைக் கையிலெடு, பழியைக் கைவிடு' என்பது.
            சாலைக்கான விதிகளைக் கடைபிடிக்காமல் ஊர்ப் போய்ச் சேர முடியாது என்பது போலத்தான் வாழ்க்கைக்கான விதிகளைக் கடைபிடிக்காமல் முழு வாழ்வு வாழ்ந்திட முடியாது. வாழ்க்கைக்கான விதிதான் அறம். அஃதைக் கைக் கொள்பவர்களுக்கு எல்லாம் விதிப்படி நடக்கும். அல்லாதவர்களுக்கு எல்லாம் தலைவிதிப்படித்தான் நடக்கும்.
            அறம் செய விரும்பு, பழி செய்யாது திருந்து என்பதுதான் எந்த நூற்றாண்டுக்குமான குரல். உலகில் எது மாறினாலும் அறம் மாறாது. மாறாத மானிடத் தத்துவம் அறம்.
            அட, என்ன மீண்டும் மீண்டும் மீண்டும் அறம் அறம் அறம் என்று... என்கிறீர்களா?
            திருக்குறளின் நான்காவது அதிகாரத் தலைப்பு அறன் வலியுறுத்தல் அல்லவா! வலியுறுத்திச் சொல்ல வேண்டியதை லட்சம் முறை, கோடி முறை வலியுறுத்திச் சொல்லி விட வேண்டும். ஏனென்றால், இதன் பின் இல்வாழ்க்கை (ஐந்தாவது அதிகாரம்) தொடங்க இருக்கிறது.
            கொன்ற பின் உபதேசிக்கப்படும் கொல்லாமையால் என்ன பயன்? வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் வலியுறுத்தப்படாத அறத்தால் என்ன பயன்? வாழ்க்கை இல்வாழ்க்கையோ, துறவு வாழ்க்கையோ அறன் வலியுறுத்தப்பட்டப் பிறகுதான் தொடங்குகிறது திருக்குறளில். வாழ்க்கையும் அப்படித்தான் தொடங்கப்படவேண்டும் என்பதுதான் குறளாசானின் பேரவா.
            நாளையிலிருந்து இனிதே தொடங்குவோம் இல்வாழ்க்கையை!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...