குறை மாதத்து ஞானக் குழந்தை
எஸ்.கே.யின் ஆளுமையைச் சிதைப்பதற்கான அத்தனை
முயற்சிகளையும் அதனை அவன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவனைச் சுற்றியுள்ளவர்கள்
எடுக்கிறார்கள். அதனால் அவன் வெகு கவனமாகத்தான் அவனுடைய அடிகளை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.
பல நேரங்களில் அவனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே அவனுக்குப் பாதுகாப்பாகவும்
இருக்கிறது. அதுவே அவனுக்கு வசதியாகவும் இருக்கிறது.
அவர்கள் மோசமானவர்கள். அவர்களின் தவறுகளுக்கு
எஸ்.கே.யின் வார்த்தைகளில் தடயம் கண்டுபிடிக்கிறார்கள். அவன் மிகுந்த எச்சரிக்கையாக
இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.
அவர்களால் எஸ்.கே. மிகவும் தடுமாறுகிறான்.
தன்னை இழக்கிறான். குழம்புகிறான். எப்படிச் செயல்படுவது என சஞ்சலம் அடைகிறான். தொடங்கியதை
முடிப்பதா வேண்டாமா என பலவிதமாக யோசித்துக் பலவீனம் அடைகிறான். ஏதாவது செய்தால் அது
நிலைமையை முன்னை விட மோசமாக்குமோ என பயப்படுகிறான்.
மனதை வெளியில் துப்புவதா? வேண்டாமா? மெளனமாக
குப்பைத் தொட்டியில் புழுங்கிக் கிடத்தல் நலமா? நடப்பதையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்வதா?
பகிராமல் நைந்து போவதா? இதில் எது நல்லது? எது கெட்டது? என்று இப்படியும் அப்படியுமாக,
அப்படியும் இப்படியுமாக அலை பாய்கிறான்.
மனஉறுதியுடன் இருப்பதே எல்லாவற்றிற்கும்
மார்க்கம் என்பவர்களிடம், அவ்வாறு இருப்பதைத் தவிர வேறு மார்க்கம் உண்டா அவன் வினவுவதும்,
முனகுவதும் பலருக்குக் கேட்க வாய்ப்பில்லை. எதையும் கண்டு கொள்ளாமல் அப்படியே இருப்பதுதான்
நல்ல வழி என்பதை நோக்கிய ஒரு வழியில் அதைத் தவிர வேறு வழியில்லை என்ற வழியிலும் அவன்
பயணிக்கிறான்.
ஏதாவது செய்தால் எஸ்.கே. தொலைந்து போவது
உங்களுக்குத் தெரியுமா? அவனைக் கேள்வி கேட்டே கொல்கிறார்கள். கேள்வி கேட்டு எப்படிக்
கொல்ல முடியும் என்கிறீர்களா? பதிலைச் சொல்ல விட்டால்தானே உயிர் பிழைக்க முடியும்
என்று எஸ்.கே. புலம்புவதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
உண்மையில் நிலைமைகள் யாருடைய கட்டுபாட்டிலும்
இல்லை என்பது போலத் தோன்றினாலும் அது முன்னுக்குப் பின் முரணமாக நடந்து கொள்ளும்,
உணர்ச்சி வசப்படும் எஸ்.கே.வைச் சுற்றிய மனிதர்களின் வசம் இருக்கிறது இப்போதும், எப்போதும்.
எஸ்.கே.யின் இந்த எழுத்து இப்படித்தான்
அவனது தனிமைபடுத்தப்படும் உக்கிரத்தில் பிறக்கிறது. அடுத்த நொடி என்ன தோன்றும் என்று
தெரியாத, ஆனால் எழுதிக் கொண்டிருக்கும் அந்த திரில்தான் அவனை பொய்மையில்லாத தன்னைப்
பற்றிய பட்டவர்த்தனமான உண்மையை எழுதச் செய்கிறது.
என்ன எழுதப் போகிறான் எஸ்.கே.? எதை எழுதப்
போகிறான் எஸ்.கே.? இது அந்தந்த நொடிகளுக்கே வெளிச்சம். அது குறித்து தயவுசெய்து எஸ்.கே.யிடம்
எதுவும் கேட்டு விடாதீர்கள். அது குறித்து எஸ்.கே.வுக்கே எதுவும் தெரியாது. வஞ்சகத்தை
முன்கூட்டியே கணித்து விடுபவர்களா நீங்கள்? அப்படி உங்களால் கணிக்க முடிந்தால், எஸ்.கே.யும்
தன் எழுத்தின் பிறப்பிடத்தை உங்களுக்குக் கூற முடியும்? அது எங்கெங்கிருந்தோ பிறக்கிறது,
எப்படியெப்படியோ பிறக்கிறது. மரண அடிபட்டு எழுத்துப் பிராணன் செய்யும் எளியன் எஸ்.கே.
உங்களுக்கு சில நாள்களாக இப்படித் தோன்றலாம்,
எஸ்.கே. ஏன் இப்படி எழுத்தைப் பிழிந்து தள்ளுகிறான் என. அதுவும் தேவையில்லாமல், மிகவும்
கட்டாயப்படுத்திக் கொண்டு எதற்கு இப்படி ஓர் எழுத்து விசித்திரத்தை அவன் சித்திரப்படுத்திக்
கொண்டு இருக்கிறான்.
எஸ்.கே. இதன் மூலம் சொல்லும் மகத்தான
விசயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை சொல்லாமல் சொல்ல விரும்புகிறான். எழுத்தின்
மர்மப் புன்னகை அவனுக்குப் பிடித்தது. அவன் பட்டவர்த்தமாக எழுதிக் காட்டுவதே உங்களுக்கு
ஏற்றது என்றால், எஸ்.கே. தன் எழுத்தின் மூலம் பின்வருவனவற்றைச் சொல்ல விழைகிறான்.
மேலே உள்ளவற்றை விட்டு விட்டு கீழே உள்ளவற்றைப் படியுங்கள்.
விழைதல் 1 -
உன் மன சுதந்திரத்தின் படி எப்படியெல்லாம்
தோன்றுகிறதோ அப்படியெல்லாம் இரு. மகிழ்ச்சியாக இரு. அவ்வளவுதான். வாழ்வை வாழ். மன
சுதந்திரத்தின் படி இருக்கிறேன் என்று வக்கிரம் புரியாதே. அது மனதின் அடிமைத்தனம்.
இங்கு சொல்லவருவதும் சொல்லப்படுவதும் மனதின் சுதந்திரம்.
விழைதல் 2 -
நீ உன் இயல்போடு இரு. எதார்த்தமாக இரு.
அதுதான் வேண்டும். யாருக்காகவும் எதையும் மறைத்து ஏன் வாழ வேண்டும்? ஓர் அற்பத்தனமான
வாய்ப்புக்காக உன்னைத் தாழ்த்திக் கொள்கிறாய் என்றால் நீ உன் படைப்பையே கேவலப்படுத்துகிறாய்
என்று பொருள். நீ இயற்கையின் மாபெரும் படைப்பு. இயற்கையின் மாபெரும் படைப்பை நீ ஏன்
கேவலம் செய்கிறாய் அதாவது உன்னை!
விழைதல் 3 -
தற்போது சிறிது காலத்துக்கு என்ன செய்ய
வேண்டும் என்று தெரியவில்லையா? எதுவும் செய்யாதே. எதுவும் செய்யாமல் இருப்பதை அவமானமாகக்
கருதாதே. தவறாக எதையும் நீ நிகழ்த்த விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா
எனப் பார்.
விழைதல் 4 -
இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என விழைகிறேன்.
அவைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா? நிறைய
எதிர்பார்க்காதே. போதும் இதற்கு மேல் வேண்டாம். நிறுத்திக் கொள். உன்னால் எதிர்பார்ப்பை
எந்த இடத்திலும் பிரேக் போட்டு நிறுத்த முடியுமானால் நீ அடைந்து விட்டாய். அதற்கு
மேல் எதுவுமில்லை. இனி நீ எஸ்.கே.வைப் படிக்க வேண்டியதில்லை. ஒருவேளை நீ அடையவில்லை
என்றால்... கருமம் வேறு என்ன வழிதான் இருக்கிறது? எஸ்.கே.வைத் தொடர்ந்து படி. எஸ்.கே.
குறைமாதத்தில் பிறந்த ஞானக் குழந்தை என்பதைப் புரிந்து கொண்டாயா?
*****
நாஞ்சில் நாடனின் கும்பமுனி
ReplyDeleteவிகடபாரதியின் எஸ்.கே
எழுத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள்.. பயமாக இருக்கிறது... நீங்கள் எழுதும் எல்லாமே என்னைப் புரட்டுகிறது....
உள்ளே உள்ளே... மிகவும் உள்ளே பயணப்படுகிறீர்கள்... இப்போது நான் என்ன செய்ய...
நன்றி ஐயா!
எழுத்து மனதை உடைக்கும. மனிதனை உடைக்காது.
Deleteபயம் கொள்வதற்கு எதுவுமில்லை. புரிந்து கொள்வதற்கு நிறைய இருக்கிறது.
எழுத்தின் உச்சம் என்று எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை். உண்மையின் அருகில் இருப்பதாக அல்லது உண்மையாக இருப்பதாகச் சொல்லலாம்.
தொடர்ந்து உரையாடுவதற்கு தொடர்ந்து நன்றிகள் ஐயா!