11 Feb 2018

கால நிரூபண பொம்மையாகி விட்ட எஸ்.கே.

கால நிரூபண பொம்மையாகி விட்ட எஸ்.கே.
            எடுத்த முடிவு எதுவும் தவறில்லை என்பதை காலம்தான் நிரூபிக்க முடியும். காலத்தைப் பொருத்த மட்டில் எஸ்.கே. ஒரு விளையாட்டுப் பொம்மை. ஒரு விளையாட்டுப் பொம்மையாக இருந்து கொண்டு, விளையாட்டுக் குழந்தை போல விளையாடும் பாக்கியம் அவனுக்கு விதிக்கப்பட்டது காலம் செய்த கோலம்.
            கொஞ்சம் மாற்றம் செய்யலாம் என்ற முடிவிலிருந்து விலகிய போதெல்லாம் ஏற்படும் துன்பங்கள் பெரிதாக இருக்கலாம். துன்பங்கள் தாங்க முடியாத அளவுக்குச் செல்லும் போது பெரிய மாற்றமாகவே செய்திருக்கலாம் என்று தோன்றும். பிறகு பரவாயில்லை என்று அல்ப சமரசங்கள் செய்வது என்பது ஏறிய படகில் ஓட்டைப் போடுவதைப் போல.
            சில கருமாந்திரங்கள் பிடிக்காமல்தான் வேறு சில கருமாந்திரங்களுக்கு மாற வேண்டியிருக்கிறது. மீண்டும் அதிலும் சிற்சில, பற்பல மாற்றங்கள் செய்ய வேண்டிய இருப்பது பெருத்த ரோதனையன்றி வேறில்லை.
            எங்குப் பார்த்தாலும் எதிர்மறைப் பேச்சுகள், புலம்பல்கள், இப்படி நடந்தால் அப்படி மாற்றிப் பேசுவது, அப்படி நடந்தால் இப்படி மாற்றிப் பேசுவது, கேட்டால் சுபாவம் அப்படி என மழுப்புவது, வளைந்து நெளிந்து செல்ல வேண்டும் என்று நதியையும், நாணலையும் காட்டி அறிவுரைப் பகர்வது, இல்லையெனில் அடிபடுவது நீயாகத்தான் இருப்பாய் என எச்சரிக்கப்படுவது எஸ்.கே.வுக்கு நிறைய கமிட்மெண்டுகள். எதைச் சமாளிப்பான் அவன்?
            இதன் காரணமாகவே புகழுக்காகவும், பேருக்காவும் எதையும் செய்ய முடிவதில்லை அவனால். அவைகளெல்லாம் தீராத தலைவலியைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது வேறு விசயம். அவன் பாட்டுக்கு தன் கடமையைச் செய்வதில் தலைவலி வராமல் தப்பிக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது.
            எஸ்.கே. அனைவரிடம் வேண்டிக் கொள்வது ஒன்றுண்டு. நீங்கள் உங்கள் செயல்பாடுகளைச் செய்யுங்கள் என்பதுதான் அது. எவ்வளவு கஷ்டமான காரியம் அது. பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் டேபிளின் அருகில் நின்று பார்த்தால் தெரியும் உங்களுக்கு.
            பிரித்து மேய்வது சுலபமாக இருந்தாலும், மழைக்காலத்தில் கூரை வீட்டில் அப்படி எதுவும் செய்து விடக் கூடாது. விளக்குமாற்றால் அடிப்பவர்களிடமிருந்து தப்பித்து விட்டாலும், வார்த்தையால் அடிப்பவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. பிரித்து மேய்வதில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும்.
            ஓர் ஆட்டைப் போல் ஆங்காங்கே நுனிப்புல் மேய்ந்து கொழுத்தாலும் அடித்துக் கொன்று தின்று விட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். நீங்களேப் போய் உங்கள் முகத்தில் கரியையோ, சாணியையோ பூசிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்காது.
            ஒரு முறைக்கு நூறு முறை கரியையும், சாணியையும் பார்க்கும் போதெல்லாம் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் அவமானப்படுவது தவிர்க்கப்படுகிறது.
            ஒருவருடைய மனநிலை தெரியாமல் விளையாடுபவன் மகா மட்டமானவன். அவனை கலகலப்பானவன் என்று புரிந்து கொள்ளாதீர்கள். டேபிள் டென்னிஸ் அரங்கில் கிரிக்கெட் விளையாடினால் கன்றாவியாக இருக்கும் என்பதில்லை, கிரிக்கெட்டை அப்படி மோசமாக சுருக்கிப் பார்க்க வேண்டாம் என்பதுதான் செய்தி.
            இந்த தத்துப் பித்துகள் தங்களின் மனநிலையின் துல்லியத்துக்கு காரியம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஜந்துக்கள். அதெல்லாம் முடியுமா? வானவில்லை வில்லாக வளைக்க முடியும் என்பதற்காக வானத்தை எப்படி நாற்கரமாக நகலெடுப்பது?
            சக்தி விரயம் முட்டாள்தனம் என்பதன்று, சக்தியே இல்லாமல் விரயம் என்பது முட்டாள்தனமின்றி வேறென்ன?
            எதற்கு இவ்வளவு கடினமான நிரூபித்தல் முறைகள் என்கிறீர்களா...
            எது சரியான முடிவு என்று நிரூபிப்பற்குள் சாவு வந்து செத்தவர்கள் அபாக்கியவான்கள். எஸ்.கே.யின் முன்கணிப்புகள் இதன் காரணமாக அதிமுக்கியத்துவம் பெறுகின்றன.

*****

No comments:

Post a Comment

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க… தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல...