11 Feb 2018

உச்ச கட்டத்தை அடைவதற்கான ரகசிய ஆலோசனை!

குறளதிகாரம் - 5.6 - விகடபாரதி
உச்ச கட்டத்தை அடைவதற்கான ரகசிய ஆலோசனை!
            எண்ணங்கள் ஆயிரம்.
            அதற்கான வழிகள் நூறாயிரம்.
            ஆசைகள் கோடி.
            அதனால் விளையும் எதிர்பார்ப்புகள் பல கோடி.
            எதை எண்ணுவது? எவ்வழிச் செல்வது? எந்த ஆசையைக் கைகொள்வது? எந்த எதிர்பார்ப்பு சரியானது?
            எது அறமோ அதை எண்ண வேண்டும். எவ்வழி அறவழியோ அவ்வழிச் செல்ல வேண்டும். எந்த ஆசை அறத்துக்குக் கட்டுபட்டதோ அந்த ஆசையை மட்டுமே கைகொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்போ அறத்தோடு பொருந்தியதோ அந்த எதிர்பார்ப்பே சரியானது.
            எண்ணங்கள், வழிகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இவைகளை உருவாக்கும், இவைகளை நிறைவேற்றும் மனம், சொல், செயல் எல்லாம் அறத்தோடு அமைய வேண்டும். இருமனம் இணையும் இல்வாழ்க்கை என்ற சொல்லாகிய குடும்ப வாழ்விற்கானச் செயல்கள் அற வழியில் அமைய வேண்டும். பிற வழியில் அமையக் கூடாது.
ஏனென்றால்,
            அற வழியில் குடும்ப வாழ்க்கை நடத்துவதே அமெரிக்க அதிபராக வாழ்க்கை நடத்துவதை விடச் சிறந்தது.
மறுபடியும் ஏனென்றால்,
            அற வழியில் குடும்ப வாழ்க்கை நடத்துவதே பில் கேட்ஸைப் போலவோ அம்பானியைப் போலவோ வாழ்வதை விடச் சிறந்தது.
மீண்டும் மீண்டும் ஏனென்றால்,
            அற வழியில் குடும்ப வாழ்க்கையை நடத்துவதே வரலாற்று நாயகர்களாக, சாதனையாளாராக, பெரும் புகழ் படைத்தவராக வாழ்வதை விடச் சிறந்தது.
மற்றும் ஒரு முறை ஏனென்றால்,
            காட்டை அழிப்பவராக, நாட்டிலுள்ள பெண்டிரை அழிப்பவராக, எந்திர தந்திர மந்திர வியாபாரியாக வேடமிட்ட துறவியராய் யார் வேண்டுமானாலும் வாழலாம். அற வழியில் இல்வாழ்வில் வாழ்வது எல்லாராலும் முடியாது.
மென்மேலும் ஏனென்றால்,
            மணலை விற்கும் மாபியாவாக, உடல் உறுப்புகளை விற்கும் மருத்துவராக, ஊழல் செய்யும் அரசியல்வாதியாக, கையூட்டு பெறும் அதிகாரியாக, கோடிகளைக் கொட்டிப் பதவிகளை வாங்கி லட்ச லட்சங்களாய் அறுவடை செய்யும் வேந்தர்களாக, சுரண்டிப் பிழைக்கும் மேலாளராக, இந்த நூற்றாண்டின் பிழைக்கத் தெரிந்த மாமனிதராக எவர் வேண்டுமானாலும் வாழலாம். அற வழியில் இல்வாழ்வில் வாழ்வது எல்லாராலும் முடியாது.
            ஆகவேத்தான்,
அற வழியில் இல்வாழ்க்கை ஆற்றுவது என்பது
            கொள்ளையடித்து பெரும் பணம் ஈட்டுவதை விட,
            நாட்டைச் சுரண்டி சுவிஸ் பேங்கில் பதுக்குவதை விட,
            கோடி கோடியாய் ஊழல் செய்வதை விட,
            பை பையாய் கை நிறைய கையூட்டுப் பெறுவதை விட,
            மக்களை ஏமாற்றி தலைவராக ஆவதை விட,
            மெத்தப் படித்து மேல் நாடுகளில் செட்டில் ஆவதை விட,
            ஏதேதோ தேர்வெழுதி பெரும் பதவிகளில் அமர்வதை விட,
            நைச்சியமாய்ப் பேசி கார்ப்பரேட் சாமியார் ஆவதை விட,
            மாபியா ஆகி மற்றவர்க்கு போபியா காட்டுவதை விட,
            அள்ளிக் கொடுத்து அமைச்சர், துணைவேந்தர் ஆவதை விட
                                                சிறந்ததாக இருக்கிறது.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர் வேறு எந்த வழியிலும் சென்று புகழ் பெற வேண்டியதில்லை. அப்படி வாழ்வதே பெரும் புகழாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர் வேறு எந்த வழியிலும் சிறப்பு தேட வேண்டியதில்லை. அப்படி வாழ்வதே பெரும் சிறப்பாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர் வேறு எந்த பேறுகளையும் பெற வேண்டியதில்லை. அப்படி வாழ்வதே பெரும் பேறாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர்க்கு வேறு வழிகள் தேவையில்லை. அதுவே சிறந்த வழியாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர்க்கு வேறு முறைகள் தேவையில்லை. அதுவே சிறந்த முறையாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர்க்கு வேறு வாழ்க்கைச் சூத்திரங்கள் எதுவும் தேவையில்லை. அதுவே சிறந்த சூத்திரமாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர்க்கு வேறு மார்க்கங்கள் தேவையில்லை. அதுவே சிறந்த மார்க்கமாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர்க்கு வேறு தவமோ, வேறு வரமோ தேவையில்லை. அதுவே மிகச் சிறந்த தவமாகும், அதுவே மிகச் சிறந்த வரமாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர்க்கு வேறு கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் தேவையில்லை. அதுவே மிகச் சிறந்த கொள்கை, கோட்பாடு, தத்துவமும் ஆகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வோர் வேறு எதையும் அடையத் தேவையில்லை, வேறு எதையும் சாதிக்கத் தேவையில்லை. அதுவே மிகச் சிறந்த அடைவும், சாதனையுமாகும்.
            அற வழியில் இல்வாழ்வு வாழ்வதே மிகச் சிறந்த கல்வியாகும், மிகச் சிறந்த செல்வமாகும், மிகச் சிறந்த வீரமும் ஆகும்.
            ஆகவே அற வழியில் இல்வாழ்க்கை வாழும் இணையர் வேறு எந்த வழியில் சென்றும் எதையும் அடையவோ, பெறவோ போவதில்லை. அவர்கள் வாழ்வே மிகச் சிறந்த அடைவும், பெறுதலும் ஆகும்.
            அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? என்று வள்ளுவர் கேட்கும் கேள்விக்கு வேறு எந்தக் கேள்வியை எதிர் கேள்வியாய் நிறுத்துவது?
            உச்சத்தை அடைந்த பின் அதன் பின் அடைய என்ன இருக்கிறது? அப்படி அடைய ஒன்று இருக்கிறது என்றால் அதன் பேர் எப்படி உச்சமாகாதோ அப்படியே வேறு யாராலும் அடைய முடியாத உச்சம் அற வழியில் இல்வாழ்க்கை வாழ்வோர் அடையும் உச்சம். அந்த உச்சத்தை வேறு எந்த வழியில் வாழ்வோரும் அடைய முடியாது.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...