குறளதிகாரம் - 6.7 - விகடபாரதி
சிறைகளைச் சிறையில்
தள்ளுங்கள்!
வீட்டுக்குள்ளே
பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்பார் பாரதி. இது
இருபத்தோறாம் நூற்றாண்டு வள்ளுவம் என்று சொன்னால்,
சிறை காக்கும்
காப்பு எவன் செய்யும்? என்ற வள்ளுவரின் குரலை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பான பாரதியின்
குரல் என்று சொல்லலாம். குறள் என்றும் சொல்லலாம் என்று நீங்கள் சொல்வது காதில் கேட்கிறது.
காலங்கள்
மாறினாலும் கவிஞர்களின் சிந்தனை மரபு மாறுவதில்லை. மாறாத சிந்தனைகளை அவர்கள் தங்கள்
கவிதைகளில் படைக்கிறார்கள் என்பதற்கு இது தக்கதொரு சான்று.
பெண்களின்
மனவுறுதி அபாராமானது. ஆண்களை விட அதிகமானது.
குடிகாரக்
கணவனைப் பொறுத்துக் கொண்டு,
தறுதலைக்
கணவனைச் சகித்துக் கொண்டு,
சூதாடிக்
கணவனைச் சுமந்து கொண்டு,
வன்கொடுமை
கணவனை மென்மையாக அனுசரித்துக் கொண்டு என்று, இப்பூமிப் பந்தில் ஒவ்வொரு பெண்ணின்
வாழ்வும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. அவர்கள் தங்கள் மனவுறுதியினால் அதை எதிர்கொள்கிறார்கள்.
குடும்பம் என்ற அமைப்பை நிலைநிறுத்துகிறார்கள்.
ஆக இதிலிருந்து
தெரிய வருவது என்னவென்றால் குடும்பம் என்ற அமைப்புச் சுழல்வதற்கான அச்சாணிப் பெண்.
சுழன்றும்
ஏர் பின்னது உலகம் என்பாரே வள்ளுவர்.
அப்படி சுழன்றும்
பெண் பின்னது குடும்பம் எனலாம்.
இதை தன் அசராத,
தளராத, சோர்வுறாத மனஉறுதியினால் சாதிக்கிறாள் பெண்.
அப்பெருஞ்சக்திக்கு
நாம் தரும் மரியாதைதான் மொழியைத் தாய்மொழி என்கிறோம், நாட்டை தாய்நாடு என்கிறோம்,
நதிகளுக்குப் பெண்ணின் பெயரைச் சூட்டி அழகு பார்க்கிறோம். காத்தவள் அவள்தானே. ஆகவே
அதன் பெருமைக்கு உரியவளும் அவள்தான்.
காக்கும்
சக்தி பெண். அவளுக்குத் தன்னைக் காக்கும் சக்தியும் இருக்கிறது, குடும்பத்தைக் காக்கும்
சக்தியும் இருக்கிறது, நாட்டை, இந்தப் பூமியை, இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் சக்தியும்
இருக்கிறது.
இவ்வளவு சக்தியையும்
அவளுக்குத் தருவது அவளது மனவுறுதி.
இவ்வளவு மனவுறுதியைக்
கொண்ட பெண்ணை சிறை அமைத்து நாம் காப்பதோ? அவர்கள் தம் உறுதியினால் தாமே காத்துக்
கொள்வர்.
வீட்டுச்
சிறை அமைத்து அவர்களைக் காப்பதாக நினைத்து அவர்களின் மனவுறுதியைச் சிதைத்து விடாமல்,
அவர்களை சுதந்திரமாக இயங்க இந்தச் சமூகமும், ஆண் வர்க்கமும் அனுமதிக்க வேண்டும் என்று
அறைகூவல் விடுக்கிறார் வள்ளுவர்.
சிறை காக்கும்
காப்பு எவன் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை என்பது அவரது அறைகூவல்.
அவர்களுக்கு
மனவுறுதி எனும் மிகச் சிறந்த காப்பு இருக்கும் போது, எதற்கு வீட்டுச் சிறை, கலாச்சாரச்
சிறை, பண்பாட்டுச் சிறை எல்லாம்?
அவர்கள் சுதந்திரப்
பறவைகள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். அவர்கள் இப்பூமிப் பந்தை அன்பால் அடை காப்பார்கள்.
வசந்தங்களை வரவழைப்பார்கள்.
அவர்களைச்
சிறையில் அடைத்து விட்டு, அந்தச் சுதந்திர வானத்தை யாரிடம் அடமானம் வைக்கப் போகிறது
ஆண் வர்க்கம்? என்று தர்க்கம் புரிகிறார் வள்ளுவர்.
பெண்ணுக்குச்
சிறை தேவையில்லை என்ற ஒரு செய்தியை மட்டுமா வள்ளுவர் இக்குறளில் சொல்கிறார்? இந்த
உலகுக்கே சிறைச்சாலைத் தேவையில்லை, அறச்சாலைதான் தேவை என்பதை,
சிறை காக்கும்
காப்பு எவன் செய்யும்? என்று சிறைச்சாலைக்கு எதிரான ஒட்டு மொத்த குரலாகவும் ஒலிக்கும்
குறளாகவும் இக்குறளை படைத்து இருக்கிறார் வள்ளுவர்.
*****
No comments:
Post a Comment