21 Feb 2018

பெண் என்னும் பேருருவம்!

குறளதிகாரம் - 6.6 - விகடபாரதி
பெண் என்னும் பேருருவம்!
            மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்பது நம் கவிஞர்களின் வாக்கு.
            பெண் பெண்ணன்று அவளே உலகின் தூண்.
            பெண்ணாக உருவாகுபவள், பெண்ணாக உருவாகுவதுடன் இன்னொரு உயிரையும் அவளே உருவாக்குகிறாள். இன்னொரு உயிரை உருவாக்குபதுடன் அவளே அதைப் பேணிக் காக்கவும் செய்கிறாள்.
            ‍பெண் தரும் பேணலையும், பாசத்தையும் எவர் தருவார்?
            ஓருயிர் ஈருடல் என்று காதலில் சொல்வார்களே! ஒரு பெண் ஓருடல் ஈருயிர் ஆகிறாளே கருவைச் சுமக்கும் போது.
            பெண்ணின் சுமத்தல் மண்ணின் சுமத்தலுக்குச் சமம். அதனாலே பெண்ணும், மண்ணும் சமமாகிறார்கள். அதே நேரத்தில் பெண் பெற்றுக் கொடுத்த பிறகுதான் மண் சுமக்கிறது என்பதால் மண்ணை விடவும் பெண் ஒரு படி மேலேயும் ஆகிறாள்.
            இந்தப் பூமியின் மனிதர்கள் யாவரும் பெண் சுமந்த மக்கள். அவள் சுமந்த பின் மண் சுமந்த மக்கள்.
            இவ்வளவு சிறப்பு வாய்ந்த பெண்ணுக்குதான் இந்த மண்ணில் ஆபத்துகள் அதிகம், அச்சுறுத்தல்கள் அதிகம், மிரட்டல்கள் அதிகம், ஏளனங்கள் அதிகம், கிண்டல்கள் அதிகம், சீண்டல்கள் அதிகம், இழிமொழிகள் அதிகம், அடிமைத்தனங்கள் அதிகம். சுமந்து பெற்றதற்கு இவைகளையும் சுமந்து பொறுக்க வேண்டிய நிலை பெண்ணுக்கு.
            இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் தன்னைக் காத்துக் கொண்டு, தன்னைக் முறையாகக் காத்தல் செய்யாத ஆண் வர்க்கத்தையும் காத்து வாழ‍ வேண்டியிருக்கிறது.
            வேறெந்த உயிர்களையும் விட இந்த உலகில் பெண் மேல் பிரயோகிக்கப்பட்ட பலாத்காரங்களும், வன்முறைகளும், வன்கொடுமைகளும் அதிகம்.
            மனித வர்க்கத்தையே உருவாக்கித் தந்த பெண்ணே மனித வர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவள். அவ்வளவு பாதிப்புகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டு அவள் மனித வர்க்கத்தையும் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவள் படைப்பின் நகை முரண்.
            இப்படி பெண் தன்னையும் காத்துக் கொண்டு, தன்னை இல்லாளாகக் கொண்ட கணவனையும் பேண வேண்டியவளாக இருக்கிறாள். இன்றைய குடிகார கணவர்களைப் பற்றி அன்றே வள்ளவருக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை.
            கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஒப்புக்குச் சொல்வது போல் உண்மையே சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
            கல் நெஞ்சம் படைத்த கணவனோ, புல் போன்ற பயனற்ற (புல் கூட பயன்படும்) புருஷனோ கிடைத்தாலும் அவனைப் பேணி நிற்பவள் அவள்தானே.
            சோம்பேறிக் கணவனோ,
            ஊதாரிக் கணவனோ,
            சூதாடிக் கணவனோ,
            குடிகாரக் கணவனோ,
            மனப்பிறழ்வு கொண்ட கணவனோ,
            வன்கொடுமை புரியும் கணவனோ
            அல்லது இவை அனைத்தின் ஒட்டுமொத்த கலவையோ
            அவ்வளவையும் சகித்துப் பொறுத்து, இல்வாழ்விற்கு அவனால் வரும் இழிமொழிகளை இல்லாமல் நிறுத்தி, அவனுக்கும் சேர்த்து தான் உழைத்துச் சோர்வு இல்லாமல் இருப்பவள் அவள்தானே.
            பெண் ஆணுக்காக அணு அணுவாக உழைத்து உடலால், மனதால் சோர்ந்து போகிறாள். என்றாலும் எந்தச் சோர்வையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் சோர்வில்லாமல் அவள் இல்வாழ்வை இயக்கும் இயந்திரம் போல இயங்கிக் கொண்டு இருக்கிறாள்.
            இந்த பூமியை இந்த மனிதர்கள் எவ்வளவு மாசுபடுத்தினாலும், எவ்வளவு தோண்டி துரப்பனம் மூலம் எவ்வளவு வெளியில் எடுத்தாலும், பசுமை இல்ல விளைவால் பாழ்படுத்தினாலும் அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சோர்வில்லாமல் சுழலும் பூமியைப் போல்தான், ஆண் வர்க்கத்தால் எவ்வளவு சிறுமைபட்டாலும், சித்திரவதைப் பட்டாலும் அவ்வளவையும் தாண்டி ஆண் வர்க்கத்துக்காக சோர்வில்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறாள் பெண்.
            ஒரு அடிமைக்கும் இன்னொரு அடிமையாக அவன் மனைவி இருக்கிறாள் என்று ஏங்கெல்ஸ் சொல்வாரே அப்படி அடிமைச் சேவகம் புரிந்த போதும் ஆணைக் காத்து நிற்கிறாள், பேணி நிற்கிறாள் பெண்.
            இவ்வளவையும் ஒன்றாய் நிறுத்தி எவ்வளவோ ஆண்டுகளாக பெண் பட்டுக் கொண்டிருந்த, பட்டுக் கொண்டிருக்கும், பட்டுப்பாடு ஊன்றிக் கொண்டிருக்கும் அவளது பேரியல்பை ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவர் இப்படி பெண் குறித்து பெரும் வடிவாய் வடிக்கிறார்,
            தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று.
            இந்த உலக வாழ்வில் தன்னையும் காத்துக் கொண்டு, இல்வாழ்வில் தன்னைக் கொண்ட தன் கணவனையும் காத்துக் கொண்டு, தகை சான்ற சொற்களால் இல்வாழ்வையும் நிலைநிறுத்திக் கொண்டு, சோர்ந்து போகும் போதெல்லாம் சோர்ந்து போகாமல் அதை விரட்டி அடித்துக் கொண்டு, பேரன்பையும், பெரும் பாசத்தையும், பெரும் பொறுப்பையும், பெரும் பொறுத்தலையும் இயல்பெனக் கொண்டு இருப்பவள் பெண். அவள் இல்வாழ்வின் கண். இணையற்ற வாழ்வின் விண்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...