4 Feb 2018

விதிக்கப்பட்டதும் சபிக்கப்பட்டதுமான சுதந்திரம்

விதிக்கப்பட்டதும் சபிக்கப்பட்டதுமான சுதந்திரம்
            ஒரு வேலை நடந்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, அந்த வேலை நடைபெறாமல் போகும் போது ஏற்படும் கோபம் எப்படிப்பட்டது தெரியுமா? அது எரிச்சலாக, அதிருப்தியாக, விரக்தியாக, மன உளைச்சலாக, வேண்டா வெறுப்பாக என எந்த வடிவத்திலும் வெளிப்படலாம்.
            ஆனால் கோபம் என்பது இறுகிப் போய் விட்டதற்கான அடையாளம். நெகிழ்வுத் தன்மை உடைமையை அடைய வேண்டும் என்பதைத்தான் கோபம் சொல்கிறது.
            கோபம் அவ்வபோது நடப்பது. சில நேரங்களில் செயலற்ற நிலைக்கும் ஆளாக்கி விடுவது.
            தொடர்ந்த வேலை, ஓய்வு கொள்ள மனமின்மை, வேக வேகமாக வேலைகளைச் செய்ய முயலல், கட்டாயத்தின் பெயரில் சில வேலைகளைச் செய்தல், குறிப்பிட்ட காலக் கெடுவில் ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக நெருக்கடியோடு செயல்படுதல் என நிறைய கூறுகள் இருக்கின்றன செயலற்ற நிலையையும், ஆர்வம் குன்றிய நிலையையும் அடைவதற்கு.
            பொறுமையாக இருப்பதன் மூலம், ஓய்வு கொள்வதன் மூலம், வேறு மாற்று வேலைகளைச் செய்வதன் மூலம் இதனைச் சரி செய்ய முடியலாம்.
            ஆனால், பிடித்தம் இல்லாத ஒரு வேலையை ஏன் செய்ய வேண்டும்? அதில் கிடைக்கும் மிகை ஊதியத்துக்காகவா? அப்படியானால் திருப்தியை விற்றதற்கான விலையை - பின் விளைவை ஏற்பதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?
            மனதை அப்படியே யாரோ முடக்கிப் போட்டது போல இருப்பதும், நிறைய சிந்திக்க முடிவது போலத் தோன்றி நிறைய சிந்திக்க முடியாதது போல இருப்பதும், கோபத்தினால் உண்டாகும் அறியாமையான எண்ணங்களைச் சுமப்பதும், முட்டாள்தனமான பள்ளத்தை நோக்கி முயன்றுப் போய் விழுவதும் தனக்குத் தானே செய்து கொள்ளும் சுய அடிமைத்தனத்தின் காரணமாக விளைபவைகள். அதை விதைப்பது அவரவராகத் தேர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறை.
            ஒருவர் மேல் சுமத்தப்பட்ட வாழ்க்கை முறையை விட, அவரவர் தேர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறை மோசமாகிப் போனது இந்த நூற்றாண்டின் சோகம் மற்றும் மோகம்.
            அனைத்தையும் அதன் போக்கில் விடுவதும், உடனே அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று நினைப்பதும், இப்போது செய்தது போதும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வருவதும், தனக்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க முடியாத மனநிலையை அடைவதும் என இந்த நூற்றாண்டின் மனநிலை மிகுந்த குழப்பத்தை அடைந்து கொண்டிருக்கிறது.
            பொறுமையாக இருக்கும் போதே அவ்வளவு பிரச்சனைகள் வருகிறதென்றால், பொறுமையை இழந்து விட்டால் வரக் கூடிய பிரச்சனைகளுக்கு எல்லையே இல்லை. ஆகவே பிரச்சனை திசை மாற்றம் செய்யப்படலாம் அல்லது மேலும் சிக்கலாகலாம் தவிர ஒரு போதும் பிரச்சனை தீர்க்கப்படப் போவதில்லை.
            உண்மையாகப் பிரச்சனையைத் தீர்க்க நினைக்கும் மனம் அமைதியாக இருக்கும். மேலும் அவசரப்பட்டு ஒரு தீர்வை முன்வைத்துச் செயல்படாது. சிக்கலை மேலும் சிக்கலாக்காது. முடிச்சை மேலும் முடிச்சுகளாக்கிப் போடும் அபத்தத்தைச் செய்யாது. உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணா என்று புலம்பாது.
            சூழ்நிலைகள் தவறாக நடக்கலாம். அவ்வாறு நடப்பதற்கு விதி இருக்கிறது. அதாவது தலைவிதி. மனம் தவறாக நடப்பதற்கு விதி இல்லை. தன்னுடைய கட்டுபாட்டில் மனம் பொறுமையாக இருக்கும் என்றால் நிச்சயமாக தவறாக நடப்பதற்கு எந்த விதமான விதியும் இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை.
            மனம் அப்படி நிர்சலனமாக இருக்குமா? இருக்கும். அவரவர்களுக்குப் பிடித்தமான உலகில். அவரவர்களுக்குப் பிடித்தமான உலகில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், பிடித்தம் இல்லாத உலகில் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.
            மிகை மதிப்பு என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே பிடித்தமற்ற உலகில் வாழ்ந்து கொண்டு மனவியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. எரிகின்ற வீட்டின் நடுவில் நின்று கொண்டு தீணை அணைக்க முடியாது, வீட்டுக்கு வெளியே வர வேண்டும் என்பது ஓர் எளிய பாடம்.
            பிடித்தமான முறையில் செயல்பட்டால் சுறுசுறுப்பாக இயங்குவோம் என்பது ஒரு பாடம். பாடம் படிக்க விரும்பாதவர்கள் அவரவர் விதித்துக் கொண்ட வாழ்முறையில் வைத்தியம் செய்து கொள்ளாத பைத்தியமாக வாழ்ந்து கொள்ளலாம் என்பது அவரவர்க்கு விதிக்கப்பட்ட மற்றும் சபிக்கப்பட்டச் சுதந்திரம்.

*****

2 comments:

  1. மிக அருமையான கருத்து...
    ஒருவர் மேல் சுமத்தப்பட்ட வாழ்க்கை முறையை விட, அவரவர் தேர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறை மோசமாகிப் போனது இந்த நூற்றாண்டின் சோகம் மற்றும் மோகம்.

    ReplyDelete
    Replies
    1. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் மிகுந்த நன்றிகள் ஐயா!

      Delete

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...