குறளதிகாரம் - 4.9 - விகடபாரதி
அபத்த மகிழ்ச்சி
ஆபத்து!
வாழ்க்கையின்
நிறைவான நோக்கம் மகிழ்ச்சி. நாமும் மகிழ்வோடு வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிபடுத்த
வேண்டும். அதாவது நிறைவான இன்பம் நிலையான இன்பம்.
எப்படியெல்லாம்
நாமும் மகிழ்ந்து, நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சிபடுத்தலாம்?
நம்மையும்
நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்வின் உச்சத்துக்கேக் கொண்டு செல்லும் மதுபானக் கடைக்கு
அழைத்துச் சென்று மகிழ்விக்கலாம்.
நமக்கும்
நம்மைச் சார்ந்தவர்களுக்கும் விசுவாசமாக இருந்து ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொடுத்து
மகிழ்விக்கலாம்.
நம்மையும்
நம்மைச் சார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு ஊர்த் திருவிழா அல்லது நகர்த் திருவிழா
என்ற பெயரில் நள்ளிரவு குத்தாட்ட அரங்குகளை ஏற்பாடு செய்து மகிழ்விக்கலாம்.
நாம் சார்ந்திருக்கும்
மேலதிகாரிக்கு ஊழல், கையூட்டுகளில் துணை நின்று அவரையும் மகிழ்வித்து நாமும் மகிழலாம்.
ஊர்ப் புறம்போக்குகளை
முக்கியப் பிரமுகர்களோடு கைகோர்த்து கைபற்றி அவரையும் மகிழ்வித்து நாமும் மகிழலாம்.
ஒரு சிலரை
கையில் போட்டுக் கொண்டு பொது ஒப்பந்தங்களை கையில் எடுத்து ஒன்றுக்குப் பாதியாக அவைகளை
நிறைவேற்றி பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு அந்த ஒரு சிலரையும் மகிழ்வித்து, நம்மையும்
மகிழ்விக்கலாம்.
இப்படி எப்படி
வேண்டுமானாலும் மகிழலாம், மகிழ்விக்கலாம்.
ஆனால், எந்த
மகிழ்ச்சி அனுபவித்தப் பிறகும், நினைத்து நினைத்து அனுபவிக்கத் தகுந்ததாக இருக்கிறதோ
அதுவே உண்மையான மகிழ்ச்சி. மற்றதெல்லாம் போலி மகிழ்ச்சி.
மகிழ்ச்சிக்குப்
பின் மகிழ்ச்சி இருக்க வேண்டும். மலர்ந்த பின் வாடி விடும் பூவன்று மகிழ்ச்சி. மலர்ந்த
பின்னும் வாடாத பூவே மகிழ்ச்சி.
போதைக்குப்
பின்னான மகிழ்ச்சி என்பது மறுபடியும் போதையைப் போட்டால்தான் கிடைக்கும் மகிழ்ச்சி.
ஓட்டுக்குப்
பணம் வாங்குவதால் உண்டாகும் மகிழ்ச்சி என்பது தேர்தலுக்குப் பின் தொடர முடியாத மகிழ்ச்சி.
ஊழல், கையூட்டுகளால்
பணம் சேர்க்கும் மகிழ்ச்சி என்பது குற்ற உணர்வுள்ள மகிழ்ச்சி.
களவாடல்,
கைப்பற்றல், அத்துமீறல், முறைகேடுகளால் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது வெளியில் சொல்லி
அனுபவிக்க முடியாத மகிழ்ச்சி.
தன்னையோ,
பிறரையோ அழித்துக் காணும் மகிழ்ச்சி அழிக்கப்படும்.
திருடிக்
காணும் மகிழ்ச்சி திருடப்படும்.
ஏமாற்றிக்
காணும் மகிழ்ச்சி ஏமாற்றி விட்டுச் செல்லும்.
அபகரித்துக்
கிடைக்கும் மகிழ்ச்சி அபகரிக்கப்படும்.
நெறிபிறழ்ந்து
பெறும் மகிழ்ச்சி முறை பிறழ்ந்துப் போகும்.
எந்த மகிழ்ச்சி
அனுபவித்த பின்னும் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, காலம் முழுவதும் பசுமையான நினைவுகளாக
நீடிக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, குற்ற உணர்வற்ற மகிழ்ச்சியாக இருக்கிறதோ, எல்லோரிடமும்
சொல்லி அனுபவிக்கக் கூடிய மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதுவே உண்மையான மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட
மகிழ்ச்சியை இந்தச் சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் அனுபவிக்க
முடியுமா?
முடியாது
என்பது முட்டாள்களின் அகராதியில் என்று நெப்போலியன் தெரியாமலா சொன்னார்!
அறத்தால்
வரும் மகிழ்ச்சி,
அறம் செய்வதால்
வரும் மகிழ்ச்சி,
அறத்தோடு
நிற்பதால் வரும் மகிழ்ச்சி,
அறத்தைக்
காத்து நிற்பதால் வரும் மகிழ்ச்சி என்பது நிலையான மகிழ்ச்சியாகும்.
நிலையற்ற
உலகில் நிலையான மகிழ்ச்சி, அறம் தரும் மகிழ்ச்சி.
மாறக் கூடிய
உலகில் மாறாத மகிழ்ச்சி, அறம் தரும் மகிழ்ச்சி.
அழியக் கூடிய
உலகில் அழியாத மகிழ்ச்சி, அறம் தரும் மகிழ்ச்சி.
அறத்தான்
வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்கிறார் வள்ளுவர்.
பொருட்களை
வாங்குவதற்கு முன் அதன் தரக் குறியீடுகளைப் பார்ப்பதைப் போல்,
தங்கத்தை
வாங்குவதற்கு முன் அதை கேரட் மீட்டரில் வைத்துப் பார்ப்பது போல்,
மணமகன் அல்லது
மணமகளைத் தேடும் போது பொருத்தங்களை ஆராய்வதைப் போல்
ஒரு செயலைச்
செய்வதற்கு முன் அஃது அறத்தோடு பொருந்தியதா, பொருந்தாததா என்பதை ஆராய்ந்து அதன்
பின் ஆற்றினால் அதனால் கிடைக்கும் இன்பம் வாழ்நாள் உத்திரவாதத்திற்குரியது. இல்லையேல்
அதனால் பெறும் இன்பம் வாழ்நாள் உபத்திரவத்திற்குரியது.
அறம் தரும்
இன்பம் நிரந்தரம். மற்றதெல்லாம் தோன்றுவது போலத் தோன்றி மறைவது போல மறைந்திடும்.
ஆக, சுருங்கச்
சொல்லின் அறம் தருவதே இன்பம். அறம் தராதது துன்பம்.
அறத்தின்
கால் பட்டு வந்ததால் அது இன்பம். அறத்துக்குப் புறம்பாக தலையே பட்டு வந்தாலும் அது
துன்பம்.
அறத்திற்குப்
புறம்பான அபத்த மகிழ்ச்சி நிலையற்றது மட்டுமன்று ஆபத்தும் கூட.
அபத்த மகிழ்ச்சி
ஆபத்து. ஆகவே மனிதா அதை அடியோடு நிறுத்து!
அறத்தான்
வருவதே இன்பம். அறமற்ற புறத்தான் வருவதே துன்பம்.
*****
No comments:
Post a Comment