23 Feb 2018

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பிரமாதமான வழிமுறைகள்

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பிரமாதமான வழிமுறைகள்
            பிரச்சனைகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன. மற்றவர்கள் கேட்பதற்கு எரிச்சலோடு பதில் அளிப்பதுதான் அதன் தொடக்கம். எஸ்.கே. அன்று முழுவதும் அப்படித்தான் பதில் அளித்துக் கொண்டு இருந்தான்.
            அவனுக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, ஒரு தோஷத்தையே ஒரு தோஷம் பிடித்திருந்தது போல. அது வேறு ஒரு தேவையில்லாத எரிச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது, ஒரே நேரத்தில் இரண்டு பெட்ரோல் கிணறுகள் தீப்பிடித்துக் கொண்டது போல.
            இது போன்ற நிலைகளில் சற்று ஓய்வை நாட வேண்டும். எஸ்.கே. அளவுக்கு அதிகமாக வேலைகளைச் செய்வது என தீர்மானித்தான். எரியும் தீயில் இன்னும் எரிந்து ஜோதியாக ஆகலாம் என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
            சிலரைக் கடுமையாகப் பேச ஆரம்பித்தான். சிலரிடம் எரிச்சலோடு நடந்து கொள்வதோடு நிறுத்திக் கொண்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் இரண்டு பேர் அவன் பக்கம் வரவில்லை. ஆள் அனுப்பி இருவரையும் அருகில் வரச் செய்தான். யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா?
            மக்கள் பேசத்தான் செய்வார்கள். எரிச்சலை யார் பொறுத்துக் கொள்வார்கள்? அவர்கள் நிரம்பிய இடமே கூச்சல் நிரம்பியாகத்தான் இருக்கும். அவர்கள் அப்படியே இருக்கட்டும். எஸ்.கே.தான் இந்த விசயத்தில் சாமர்த்தியமாக நடந்திருக்க வேண்டும்.
            தன் எரிச்சலைக் கொட்டி, அவர்களின் எரிச்சலை வாங்கிக் கொண்டு வருவதில் பிரயோஜனமில்லை. நயமாக நடந்து கொண்டிருக்க வேண்டாமா? பிரச்சனை என்று வந்தால் ஒவ்வொருவரும் தன்னைக் கழற்றி விட்டுக் கொண்டு தலையில்லாத முண்டமாக அலைய தயங்க மாட்டார்கள்.
            இது போன்ற நேரங்களில் எரிச்சலைக் குறைக்கிறேன் பேர்வழி என்று விளையாட்டுச் செய்வதாக, உரிமையோடு பேசுவதாக கோமாளித்தனங்கள் செய்து விடக் கூடாது. பிரச்சனை உச்சாணிக் கொம்பில் ஏறி விடும். கீழ் மட்ட பிரச்சனையாக ஆக வேண்டியது உச்ச கட்ட பிரச்சனையாக மாறி விடும்.
            ஈகோவே வடிவான நம் அன்பார்ந்த சகாக்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் காலியாகப் போவது எஸ்.கே.தான். ஆபத்தில் இருக்கும் போது தப்பித்துக் கொள்வதைத்தான் பார்க்க வேண்டும். உணர்ச்சிவயப்பட்டுப் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது.
            குறிப்பாக கேள்விக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். புதைக்குழியை வெட்டி வைத்து விழு என்று சொன்னால் உத்தமன் என நிரூபிக்க குதித்து விட முடியுமா என்ன?
            வெகு எளிதான வழி அவர்களுக்குத் தள்ளி விடுவது. அபத்தம் என்னவென்றால் பாதுகாப்பானது என ஹாயாக எஸ்.கே.வே சென்று விழுவது.
            பல பிரச்சனைகளில் எதுவும் செய்யாமல் இருக்கும் உத்தி இருக்கிறதே, சித்தி தந்து, முத்தி தரும் அது. எஸ்.கே. பல விசயங்களில் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அவ்வாறு செய்யாமலே இருந்தாலே எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. அவன் செய்ய வேண்டியது எல்லாம் அவனது வேலைப்பட்டியலில் மிகத் தெளிவாக இருக்கிறது.
            எஸ்.கே. அப்படியே இருந்தால் காலப் போக்கில் இயற்கையாகவே சரி செய்ய வேண்டிய எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போய் விடும்.
            செய்துதான் ஆக வேண்டும் என்றால் வேலைப்பட்டியல் பாதிக்கப்படும். பேசி வென்று விடலாம் என்றால் தோல்வியடைந்த சமாதான ஒப்பந்தங்களை ஒரு முறை எஸ்.கே. எடுத்து படித்துப் பார்ப்பது நல்லது.
            எதையும் தாங்கிக் கொள்ள முடியாத எஸ்.கே.வின் மனம் மோசமானப் பின்விளைவுகளையே எதிர்நோக்கும். மாறாகத் தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்த விடும் மனம் சகலவற்றிலிருந்தும் விடுபட்டு விடும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...