23 Feb 2018

சொர்க்கத்துக்கு இரண்டு பயணச் சீட்டு

குறளதிகாரம் - 6.8 - விகடபாரதி
சொர்க்கத்துக்கு இரண்டு பயணச் சீட்டு
            இருக்கிறதோ இல்லையோ? வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் சொர்க்கம் குறித்தும், நரகம் குறித்தும் சிந்தித்துப் பார்க்கிறான்.
            உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா?
            இருப்பது போல நம்பப்படுகிறது.
            இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில்...
            சொர்க்கமோ, நரகமோ இவைகளைச் சென்று பார்த்து வந்து பயணக் கட்டுரைகள் எழுதியவர் யாருமில்லை. அதனால் சொர்க்கம் குறித்தோ, நரகம் குறித்தோ உறுதியான சான்றாதாரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
            என்றாலும்,
            மனமகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் போது சொர்க்கத்தில் இருப்பது போலவும், மனமகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழும் போது நரகத்தில் இருப்பது போலவும் ஒரு மனத்தோற்றத்தை உணராதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது.
            பேருந்தில் கைக்குட்டையைப் போட்டு இடம் பிடிப்பது போலவோ,
            பேருந்துகளில், ரயில்களில் முன்பதிவு செய்து கொள்வது போலவோ,
            காசு போனாலும் பரவாயில்லை என்று கடைசி நேரத்தில் தட்கல் போட்டுக் கொள்வது போலவே சொர்க்கத்திற்கான இடம் பிடிப்பதோ, முன்பதிவு செய்வதோ, தட்கல் போடுவதோ இதுவரை நாசாவாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
            செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் போகும் திட்டம் வைத்துள்ள நாசாவிடமும் சொர்க்கத்துக்குப் போவதற்கான திட்டம் இருப்பதற்குச் சாத்தியமில்லை.
            ஏன் அப்படி என்றால்...
            சொர்க்கம் என்பது ஒரு லட்சியவாத கருத்தாக்கம்.
            அனைத்து நலன்களும் ஒருங்கிணைந்த இடம்.
            ஒரு சிறு தீமை நிகழ்ந்தாலும் அது சொர்க்கமில்லை என்று நிறுவி விட முடியும்.
            வாழும் போது அந்த லட்சியவாதக் கருத்தாக்கத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால்தான் செத்த பிறகு அதைச் சாத்தியப்படுத்தினார்கள் நம் முன்னோர்கள், செத்தால்தான் சிவலோகப் பதவி என்பது போல.
            செத்தவுடன் சிவலோகப் பதவி கிடைக்கிறது என்பதற்காக உடனடியாக சாவதற்கு யார் தயாராக இருப்பார்கள்?
            அதே போல் செத்தால் சொர்க்கம் என்று சொன்னாலும் யார் சாவதற்கு விரும்புவார்கள்?
            வாழும் போது அந்தச் சொர்க்கம் கிடைக்காதா என்ற கேள்வியையே எழுப்புவார்கள்!
            ஏன் வாழும் போது சொர்க்கம் கிடைக்காதா?
            ஏன் கிடைக்காமல்...
            அப்படியென்ன அது கிடைக்காமல் போவதற்கு அது ஊழலற்ற நல்லாட்சியா அல்லது காமராசர் ஆட்சியா என்ன?
            மனைத்தக்க மாண்போடும்,
            பெருந்தக்கக் கற்போடும்,
            தற்காத்துத் தற்கொண்டான் பேணும் தன்மையோடும்,
            தகைசான்ற சொற்காக்கும் செம்மையோடும் ஒரு பெண் ஓர் ஆணுக்கு மனைவியாக அமைந்தால் அந்த ஆண் வாழும் போதே சொர்க்கத்தைப் பெறுகிறான்.
            பெண்ணே மனித வர்க்கத்தைப் படைக்கிறாள், மனித வர்க்கத்துக்கான சொர்க்கத்தையும் படைக்கிறாள்.
            பெண்ணின் பெருஞ்சிறப்பே நல்ல மனையைப் படைக்கிறது.
            நல்ல மனையே சொர்க்கமாக உருப்பெறுகிறது.
            மனையின் பெருஞ்சிறப்பு பெண்டிர் மனையாட்சி புரியும் பெருஞ்சிறப்பில் இருக்கிறது. அப்பெருஞ்சிறப்பு மனையை சொர்க்கமாக மாற்றுகிறது.
            செத்தால் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் இல்லாததையும், பொல்லாததையும் காட்டுபவர் அல்லர் வள்ளுவர்.
            வாழும் போதே அது உண்டா இல்லையா என்று அறுதியிட்டுக் கூறுபவரே வள்ளுவர்.
            சொர்க்கம் என்பது வாழும் போதே அடையப்படுவது. அது வானுலகில் அடையப்படுதன்று, மண்ணுலகிலே அடையப்படுவது.
            மண்ணுலகில் மனைத்தக்க மாண்போடும், பெருந்தக்கக் கற்போடும் பெருஞ்சிறப்புடைய பெண்டிரை மனைவியாகப் பெறின் பூமியிலேயே சொர்க்கத்தைப் பெற முடியும் என்பதை,
            பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு புத்தேளிர் வாழும் உலகு என்கிறார் வள்ளுவர்.
            அதாவது,
            பெற்றான் பெருஞ்சிறப்பு (உடைய) பெண்டிர் பெறின் பெறுவர் புத்தேளிர் உலகு.
            பெண்ணின் பெருஞ்சிறப்பு சொர்க்கம். ஆம்! உயிர்களை உருவாக்கத் தெரிந்தவளுக்குச் சொர்க்கத்தை உருவாக்கத் தெரியாதா என்ன!
            இப்பேர்ப்பட்ட வாழ்க்கைத் துணை நலமே வாழ்க்கையின் பலம். சொர்க்கத்தை உருவாக்கும் நிலம்.
            இனி சொர்க்கத்தைத் தேடி விண்ணைப் பார்க்க வேண்டியதில்லை. மண்ணைப் பார்த்தாலே போதும், மண்ணில் நல்ல மனையாளைப் பெற்றாலே போதும்.
            இப்படி ஓர் ஆணுக்கு எப்படிச் சொர்க்கம் உருவாகும் என்பதைக் குறிப்பிடும் வள்ளுவர், பெண்ணுக்கானச் சொர்க்கத்தை முன்கூட்டியே அதாவது இக்குறளுக்கு முன்பே சொல்லி விடுகிறார், 'சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?' என்று.
            ஆணுக்காகச் சொர்க்கத்தைப் படைக்கும் பெண்ணை சிறை காப்பு செய்யாமல் இருந்தால் பெண்ணுக்கும் இந்த உலகம் சொர்க்கமாகி விடும். பெண்ணால் ஆணுக்கும் இந்த உலகம் சொர்க்கமாகி விடும்.
            ஆணும் பெண்ணும் இணைந்து இப்பூவுலகின் சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் பேரவா.
            மனையாட்சி செய்து ஆணுக்கானச் சொர்க்கத்தை உருவாக்கும் பெண்ணுக்கு அவளுக்குரிய சுதந்திரத்தைக் கொடுத்து, சிறைகாப்பு செய்யாமல் அவளுக்கானச்  சொர்க்கத்தை அடைய கணவான ஆணும் துணை நிற்க வேண்டும்.
            இப்படி ஒருவருக்கொருவர் துணை நின்றால், இல்வாழ்வில் சொர்க்கம் இணையாக துணையாக நிற்கும்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...