14 Feb 2018

பழிப்பு நேரிடாத விழிப்போடு இரு!

குறளதிகாரம் - 5.9 - விகடபாரதி
பழிப்பு நேரிடாத விழிப்போடு இரு!
            அன்பும் அறனும் இல்வாழ்க்கை என்பார் வள்ளுவர்.
            அவ்விரண்டில் முதன்மையானது எது?
            அன்பு என்பதை முதலில் குறிப்பிட்டதால் அன்பு முதன்மையானதா?
            இரண்டாவதாக குறிப்பிட்டிருந்தாலும் அறம் முதன்மையானதா?
            இரண்டுமே முதன்மையானதுதான் என்பது போன்ற ஒரு பட்டிமன்றத் தீர்ப்பைச் சொல்லி விடலாம் என்றாலும்,
            இல்வாழ்க்கைக்கு முதன்மையானது அறமே. அதன் பின்பே அன்பு முக்கியமானது.
            இல்வாழ்க்கையின் அடிப்படைக் கேந்திரமே அறம்தான்.
            1. அதீதமாகச் செல்லம் கொடுத்து குடும்ப உறுப்பினர்கள் கெட காரணமாகி விட்டார்கள் என்றோ,
            2. குடும்பத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக அதீதமாகச் சொத்துச் சேர்த்துக் கொண்டு விட்டார்கள் என்றோ,
            3. பாசத்தின் காரணமாக விரும்பியதையெல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுத்து விட்டார்கள் என்றோ,
            4. உறவின் காரணமாக தவறு செய்த போதெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த விட்டார்கள் என்றோ,
            5. பந்தத்தின் பிணைப்பு காரணமாக செய்த தவறை மறைப்பதற்கு உடந்தையாக இருந்து விட்டார்கள் என்றோ,
            6. குடும்பத்திற்காக எந்தக் குற்றத்தையும் அஞ்சாமல் செய்து விட்டார்கள் என்றோ,
            7. சமூகத்துக்கு தினையளவேனும் பயனில்லாமல் கடைசி வரை சுயநலத்தோடே வாழ்ந்து விட்டார்கள் என்றோ
            அல்லது இன்னபிற இது போன்ற பழிகளோ எதற்காகவும், எக்காரணம் கொண்டும் ஒருவர் கூட கூறி விட முடியாத படி இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்பது வள்ளுவரின் அவா.
             இது போன்ற பழிகள் நேர்வது தெரியாமலே நிகழ்ந்து விடுகின்றன. நடப்பது அறியாமலே நடந்து விடுகின்றன. உண்மைதான். நிறைய தவறுகள், பிழைகள், பழிகள், குற்றங்கள் நிகழ்ந்து முடித்தப் பிறகுதான் தெரிகின்றன.
            இது பழிதான் என்று நிகழும் போதே அறிவதற்கு முன்னறிவிப்புக் கருவி ஏதேனும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி அறிவதற்கு ஏதேனும் கருவியோ அளவுகோலோ இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதுதான் அறம். அறம்தான் அந்த முன்னறிவிப்புக் கருவி. அறம்தான் அதற்கான அளவீட்டுக்கான அளவுகோல்.
            அன்புக்கு பழியோ, தவறோ தெரியாது. அன்பு அன்புக்காக எதையும் செய்யும். அன்பின் மிகுதி ஆற்றல் மிக்கது. அதைச் செய்யலாமா கூடாதா என்ற அறிவு அதற்கு இருக்காது.
            அன்புதான் என்றாலும் அது செய்வதற்குத் தகுந்ததா? தகாததா? என்பதை அவ்விடத்தில் வரையறுப்பது அறம்தான். சரியாக இல்லாதது எதுவோ அதை சரியாகும் வரை அறுத்து எடுப்பது அறம்தான்.
            அறத்தை முதன்மையாகக் கொண்டு அதனோடு ஆலோசித்து செலுத்தப்படும் அன்பு பழியற்றது, குற்றமற்றது, மாசற்றது.
            ஒருவர் மேல் கொண்ட அன்புக்காகச் செய்யப்பட்டது என்றாலும் அது அறத்தின் வரையறைக்குள் வராவிடில் அது பழிப்புக்கு உள்ளாகி விடும். அப்படி ஒரு பழிப்பு நேர்ந்து விடக் கூடாது என்று அஞ்சுகிறார் வள்ளுவர்.
            அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று எச்சரிப்பவர் அல்லவா அவர்.
            ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்று அறிவுறுத்துபவர் அல்லவா அவர்.
            அப்படி பழிப்புக்கு உள்ளாகாத வகையில் இல்வாழ்க்கையின் அன்பும் பண்பும் அமைய வேண்டும். அதற்கு அறத்தை முதன்மையாகக் கொண்டு அதன் வழிபட்ட அன்பையும், பண்பையும் கைகொள்ள வேண்டும்.
            அப்படிப்பட்ட இல்வாழ்வில்தான் பழிப்புகள் நேரிடாது.
            அப்படிப்பட்ட,
            அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.
            இல்வாழ்க்கை இல்லறம் என்று சொல்லப்படுகிறது.
            அறத்தின் பெயரால் சுட்டப்படுகிறது. அஃது அறத்தின் படி நின்று பிறன் பழிப்பது இல்லாயின் நன்றாகும். அதாவது பிறன் என ஒருவர் கூட பழிப்பதற்கு வாய்ப்பில்லாத அறநெறிப்படி இருக்குமாயின் நன்றாகும்.
            ஏனென்றால் அறன் எனச் சொல்லப்பட்டதே இல்வாழ்க்கை. அறன் என்று சொல்லப்பட்ட அதில் பழிப்பு இருந்தால் நன்றாகவா இருக்கும்? பழிப்பு இல்லாமல் இருந்தால்தானே நன்றாக இருக்கும். அப்போதுதானே அதற்கு அறன் என்ற பெயரும் பொருத்தமாக இருக்கும்.
            இல்லறமோ, துறவறமோ பழிப்புக்கு இடமாகி விட்டால் அஃது அறமே அன்று.
            ஆம்,
            இல்லறத்திற்கு மட்டுமல்லாது,
            மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்று துறவறத்திற்கும் சேர்த்து பழிப்புக் குறித்து விழிப்போடு இரு என்று செக் வைத்து ரிவீட் அடித்து வைத்திருப்பவர்தான் வள்ளுவர்.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...