14 Feb 2018

அவ்வபோது நல்லதும் சொல்வான் எஸ்.கே.

அவ்வபோது நல்லதும் சொல்வான் எஸ்.கே.
            குழந்தைகளாக இருந்த போது எதைச் செய்தாயோ, அதையே இப்போதும் செய். குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய்? நடைபயின்றாய் அல்லவா! இப்போதும் நடை பயில்.
            காரைத் தூக்கி காயலான் கடையில் எறி. டூவீலரை எடுத்து டுபாக்கூர் ஷாப்பில் போடு. மிதிவண்டி இல்லாமல் இருப்பதும் நல்லதே.
            நடைபயின்றே பணிகளுக்கு செல். பணிகளுக்கு இடையில் கொஞ்சம் ரிலாக்சேசன் தேவை என்றாலும் நடைபயில். இதன் சிறப்பே எப்போதும் நடைபயிலலாம். எங்கும் நடைபயிலலாம். நடைபயின்றே செய்ய வேண்டியதைச் செய்யலாம். ஆக வேண்டியதை நிறைவேற்றலாம்.
            நிறைய மனச்சோர்வு வந்த பிறகும் நடைபயிலாமல் இராதே. பதற்றம், பரபரப்பு, தெளிவின்மை அகல நடைபயில். இது என்ன சித்த மருத்துவக் குறிப்பு போல இருக்கிறத என நோக்காதே. இது சுத்த மருத்துவக் குறிப்பு. உன்னைத் தூய்மையாக்கும் நலத்துவ குறிப்பு.
            (எஸ்.கே.யின் நாட்குறிப்பிலிருந்து...)
            இத்துடன் மேலும் சில குறிப்புகள் - (இஃது தலைப்புக்கு மாறாகக் கெடுதலாகவும் இருக்கலாம்)           
            1. எழுதுவதன் புதுமை குறித்து எதுவும் கேட்காதீர்கள். அது அந்த நேரத்தில் ஏற்படுவது. புதுப்புது விசயங்கள் எப்படி உட்புகுகின்றன என்பது அந்த நேரத்தில்தான் தெரிகிறது. அது அந்த நேரத்தின் புதிர் அல்லது அந்த நேரத்தின் ஆச்சர்யம், அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
            2. அலுப்பும், சோம்பலும் இருக்கும் வரை சாதாரண வேலையும் கடினமாகத்தான் இருக்கும். கடினமான வேலையையேச் செய்யுங்கள். அலும்பும், சோம்பலும் காணாமல் போய் விடும். ஒரு பாறாங்கல்லைப் பார்த்தால் தூக்க முடியுமா என்று பாருங்கள். சிறிய கல்லை எளிதாகத் தூக்கி விடுவீர்கள். இல்லாவிட்டால் காலை அழுத்தும் சிறு கல்லையும் எடுத்துப் போட அலுப்புதான் படுவீர்கள்.
            3. கோபமும், அவசரமும் தம் போக்குக்கு உங்கள் வாழ்வை முன்னெடுத்துச் செல்கின்றன. இவைகள் இரண்டும் இல்லையென்றால் உங்கள் வாழ்வை நீங்கள் முன்னெடுத்துச் செல்லலாம்.
            4. நிறைய மனத்தடைகளை நீங்கள்தான் உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். இப்பத்தான் இருக்க வேண்டும், மாறி இருக்கக் கூடாது என்பது மாதிரி. எதிலும் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் பிடிவாதமே உங்களை அழித்து விடும்.
            5. எந்தச் செயலைச் செய்ய நீ உன்னை நம்பாமல், இன்னொன்றை நம்புகிறாயோ அப்போதே அதைச் செய்ய நீ தகுதியற்றவனாகி விடுகிறாய். உன்னை நம்பாத நீ இன்னொன்றையும் நம்பாதே. உன்னை நம்ப உன்னை நீ தகுதிபடுத்திக் கொள்.
            6. சூட்சமம் என்னவென்றால் பல‍ செயல்களை செய்யாமல் விட்டு விட்டால் கூட அதுவாகவே நடந்து விடும். மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஆனாலும் செய்யாமல் விட்டு விட்டாலும் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்.
            7. மூட நம்பிக்கைகள் உன் மனதைக் கவ்வுவதாகத் தோன்றினால் நீ பலஹீனமாக இருக்கிறாய். உடனடியாக ஒரு குளுக்கோஸ் பாட்டில் வாங்கி ஏற்றிக் கொள். அப்படியும் தெம்பு வரவில்லை என்றால் உனக்கு நம்பிக்கையே தேவையில்லை மூட நம்பிக்கை உட்பட.
            8. டெவலப் பண்ணு. ஒவ்வொன்றுக்கும் கிடைக்கும் வடிவமே வேறு. அதை சில நேரங்களில் நீ நினைத்தாலும் தீர்மானிக்க முடியாது.
            நிறைய குறிப்புகள் சொல்லியாகி விட்டது போதும். இதற்கு மேல் காப்பியடித்து எழுத முடியவில்லை. எஸ்.கே.வின் நாட்குறிப்பு காலியாகக் கிடக்கிறது.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...