குறளதிகாரம் - 1.8 - விகடபாரதி
நீச்சலில் உலக
சாதனை புரிய...
'வாழ்க்கையே
போர்க்களம்! வாழ்ந்துதான் பார்க்கணும்!' என்று வாழ்க்கையைப் போர்க்களமாகப் பார்க்கும்
வாசகம் ஒன்று உண்டு.
வாழ்க்கைப்
போராட்டத்தில் இன்றைய வாழ்க்கை போர்க்களமாக இருக்கிறது. இலங்கை முள்ளிவாய்க்காலை
நினைக்கும் போது போர்க்களமே வாழ்க்கையாக இருக்கிறது.
இப்படி வாழ்க்கையைப்
போர்க்களமாகப் பார்ப்பது ஒரு பார்வை.
வள்ளுவர்
வாழ்க்கையை ஒரு கடலாகப் பார்க்கிறார்.
தமிழகம் வங்கக்
கடல், இந்துமாக் கடல், அரபிக் கடல் என்று மூன்று கடலால் சூழப்பட்டுள்ளது போல், வாழ்க்கையும்
மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.
வாழ்க்கையின்
மூன்று கடல்கள்,
1. அறம் எனும்
கடல்
2. பொருள்
எனும் கடல்
3. இன்பம்
எனும் கடல்
திருக்குறளின்
மூன்று பகுப்புகளையும் வாழ்வின் மூன்று கடல்களாகப் பகுக்கிறார். வாழ்விலிருந்து முகிழ்த்ததுதானே
வள்ளுவரின் குறள். அதனால் பகுப்பும் அப்படியே இருக்கிறது வாழ்விலிருந்து சிறிதும் விலகாமல்.
பொருள் எனும்
கடலைக் கடக்கத்தான் கடல் கடந்து அரபு நாடுகளுக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும்
ஓட வேண்டியதாக இருக்கிறது. திரை கடல் ஓடியும் திரவியல் தேடு என்று ஓளவைப் பாட்டி அன்றே
சொல்லி விட்டாள்.
நம்மில் பலருக்கு
பொருள் எனும் கடலைக் கடப்பதற்குள்ளே வாழ்க்கை முடிந்து விடுகிறது. இன்பம் எனும் கடலை
எட்டிப் பார்ப்பதற்கே நேரமில்லாமல் போய் விடுகிறது.
இப்படி ஒரு
கடலைக் கடப்பதே கடினம் என்றால் முக்கடலைக் கடப்பது எப்படி?
எந்தக் கடலிலிருந்து
துவங்குகிறோம் என்பதைப் பொருத்து இந்த மூன்று கடல்களையும் நீந்திக் கடக்கலாம்.
நமது துவக்கம்
பொருள் எனும் கடல் என்றால் பிற இரண்டு கடல்களையும் நீந்திக் கடப்பது கடினம்தான்.
இன்பம் என்ற
கடலில் துவங்கினோம் என்றாலும் கடினம்தான்.
அப்படியானால்
எந்தக் கடலிலிருந்து துவங்க வேண்டும்?
அறம் எனும்
கடலிலிருந்து துவங்க வேண்டும். எந்த ஒரு மிகப் பெரிய பயணமும் நாம் எடுத்து வைக்கும்
முதல் அடியிலிருந்துதான் துவங்குகிறது. எடுத்து வைக்கும் முதல் அடி எங்கிருந்து என்பது
முக்கியம். வடக்கு நோக்கிச் செல்ல வேண்டியப் பயணத்துக்கு தெற்கு நோக்கி அடியெடுத்து
வைத்து துவங்க முடியாது அல்லவா!
அறக்கடலாக
விளங்கும் பெருமக்கள் அடியெடுத்து வைத்துச் சென்றப் பாதையைப் பின்பற்றி அவர்களின் அடியொற்றி
அடியெடுத்து வைத்துத் துவங்க வேண்டும்.
நல்ல துவக்கமே
பாதி முடிந்ததற்குச் சமம் என்பார்களே. அறக்கடலாக விளங்கும் பெருமக்கள் அடியொற்றி நீந்தத்
தொடங்கி விட்டால், பிற கடல்களான பொருள் எனும் கடல், இன்பம் எனும் கடல்களை எளிதில்
நீந்திக் கடந்து விடலாம். இல்லையென்றால் கடினம்தான். வள்ளுவரின் வார்த்தையில் சொன்னால்
அரிதுதான்.
அற ஆழி அந்தணன்
தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது.
நீச்சலில்
உலக சாதனை புரிய சொன்ன பிறகும் நீந்தாமல் இருப்பீர்களோ! நீந்தத் துவங்குங்கள் அறம்
எனும் கடலிலிருந்து.
நீச்சலில்
உலக சாதனைப் புரிந்தவர்களைக் கூட உலகம் மறந்து விடும். ஆனால் இந்த மூன்று கடல்களையும்
நீந்தி உலக சாதனைப் புரிந்தவர்களை உலகம் என்று மனதில் வைத்திருக்கும். அதுவும் எப்படி?
தெய்வமாக மனதில் வைத்திருக்கும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள்
வைக்கப் படும் என்றபடி ஒருசேர மனதுக்குள்ளும், வரலாற்றுக்குள்ளும் என்றும் வைத்திருக்கும்.
ஆக, அறமே
அனைத்திற்கும் அடிப்படை. அறம் தலைமை தாங்கும் பொருளே நிலைக்கும். அறம் தலைமை தாங்கும்
இன்பமே நிலையானது.
அறமற்றப்
பொருள், அறமற்ற இன்பம் இரண்டும் அழிவு.
பொருளோ,
இன்பமோ அறத்தோடுப் பொருந்த வேண்டும்.
அறத்தோடு
நின்று அறக்கடலாக விளங்குபவனே அந்தணன். 'அந்தணன்' என்ற சொல் ஓர் இனத்தின் பெயரோ,
ஒரு குலத்தின் பெயரோ அன்று. அறம் பிழையாது நிற்பவனுக்குப் பெயர் அந்தணன். இனம், குலம்
என்று குறுகிய நோக்கோடு அறத்தைச் சிதைப்பவனுக்குப் அது பெயர் ஆகாது.
அறத்திலிருந்து
பிறழ்பவன் அந்தணன் ஆகான்.
மறப்பினும்
ஒத்துக் கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்று இன்னோர் இடத்தில்
வள்ளுவர் இதைத் தெளிவாக்குவார்.
அறத்தோடு
நிற்கும் ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்கள் யாராகினும் அவர் அந்தணனே.
அறத்தின்
மேன்மையை நிலைநாட்டியவனுக்கு வழங்கப்படும் பட்டப் பெயர் அந்தணன். அது ஓர் இனத்திற்கு
வழங்கப்பட்ட பட்டப் பெயராக ஒரு சிலர் விளங்கிக் கொண்டது பிழையன்றி வேறில்லை. கிஞ்சித்தும்
அறமற்ற அத்தகைய தவறானப் பொருள் விளங்கலை வள்ளுவர் வழி நின்று நீக்கிக் கொள்ளுதல்
நல்லது. வள்ளுவத்தில் குறுகிய நோக்கிற்கு இடமில்லை.
*****
No comments:
Post a Comment